இறக்கைகளுடன் பறப்பது - ஜோசப் மரிய மைக்கேல்


இறக்கைகளுடன் பறப்பது அல்லது
மனதின் கரைகளை உடைப்பது.
இறுக்கமான தசைகள் தளர்வடைந்தன.
மனதின் இறுக்கங்கள் உடைந்து போயின.
மெலிதான இதயம் படைத்தவனாயிருந்தேன்.

குழந்தைகள் மீது பாசம் பெருக்கெடுத்தது.
கட்டியணைத்து, கண்ணீர் சிந்தி
அன்பை பொழிய வேண்டுமென தோன்றியது.
மனைவியின் மீதான கோபங்கள்,
வருத்தங்கள் ஓடி ஒளிந்து கொண்டன.
எந்தவித தன்முனைப்புமின்றி அவளிடம்
நெருங்கியிருந்தேன்.

பல தவறுகளுக்காக மன்னிப்பு கேட்கவும்
தயாராக மாறியிருந்தேன்.
எதிர்காலம் குறித்த
இனம்புரியா கவலைகளுக்காக
அழவும் செய்தேன்.

இப்படியும் ஒரு நல்ல மனிதன்
எனக்குள் சாத்தியமா?
தூய ஆவி உட்புகுந்து
கசடுகளையெல்லாம் கழுவி
தூய்மையாக்கி விட்டிருந்தது.

அவன், அவள், அவர்கள் மற்றும்
இந்த முழு உலகம் மீது
அன்பு பெருக்கெடுத்தது.
நான் மது அருந்தியிருப்பதுதான்
அதற்கு காரணமா? எனில்
நிச்சயமாக இல்லை,
என்று மட்டும் கூறுவேன்.

Comments

Popular posts from this blog

துப்பறியும் நாவல்களின் காலம் முடிந்துவிட்டதா? அல்லது சுஜாதாவிற்குப் பின் துப்பறியும் நாவல்கள்? ம.ஜோசப்

பாவம் இல்லாதவர் இவள் மேல் கல் எறியட்டும் - ஜோசப் மரியமைக்கேல்.

யூதாஸ் இஸ்காரியோத்தின் நற்செய்தி - ம. ஜோசப்