இயேசு கிறிஸ்துவின் வரலாற்றுப் பின்னணி அல்லது கிறிஸ்து ஏன் உவமைகளினூடே பேசினார்? ம.ஜோசப்
 இயேசு கிறிஸ்துவின் காலத்தின் வரலாற்றுப் பின்னணி குறித்து அடிப்படையான விபரங்களை இக்கட்டுரை ஆராய்கிறது. அவரது வரலாற்றுப் பின்னணி, அவரைக் குறித்தும், அவரது போதனைகள் குறித்தும் புதிய புரிதல்களுக்கு வழிவகுக்கும் என்பதை நிறுவுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். வரலாற்றுப் பின்னணி  கிறிஸ்து பிறப்பு வரையுள்ள இஸ்ரவேலரின் வரலாறு குறித்த இச்சுருக்கமான குறிப்பு இக்கட்டுரையின் சில விபரங்ளை புரிந்து கொள்ள உதவும். பெரு வெள்ளத்தில் காப்பற்றப்பட்ட நோவாவின் புதல்வர்களான சேம், காம், யாபேத்து ஆகியோர்களில், சேமின் (Shem) வழிமரபினர் செமிட்டிக் இனத்தவர் (semitic tribes) என அழைக்கப்படுகின்றனர்.  இஸ்ரவேலர் ஒரு செமிட்டிக் இனத்தவர் ஆவர். செமிட்டிக் இனத்தவராகிய ஆபிரகாம் ஏறக்குறைய கி.மு.1900-ல், குடும்பத்துடன் கானான் தேசத்திற்கு வருகிறார். அவர்களது மூதாதையர்கள் ஊர் (சுமேரிய நாகரீக நகர்) பகுதியைச் சார்ந்தவர்கள். கானான் தேசம் என்பது இப்போதுள்ள இஸ்ரவேல் நாடு, பாலஸ்தீன நாடு, மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைக் குறிக்கும். அவரின் வழி மரபினரான யாக்கோபு, எகிப்து நாட்டிற்கு, கானான் தேசத்தில் ஏற்பட்ட மாபெரும் வறட்சியின் கார...