மனைவியின் காதலன் - ஜோசப் மரியமைக்கேல்.

அவன் அறுவை சிகிச்சை முடிந்து படுக்கையில் கிடத்தப்பட்டிருந்தான். அறுபது வயதாகிறது. உடல் நலம் தேறினாலும், முன்பு போல் அவனால் நடமாட முடியாது. அவனது பழைய உடல் அவனுக்கு கிடைப்பதரிது. உயிரோடு இருக்கலாம் என்பதைத் தவிர பெரிதாக ஒன்றுமில்லை. ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தான். 


 அவளுக்கு ஏனோ, அவன் மீது பச்சாதாபமாய் இருந்தது. அவனுடன் 25 வருடங்கள் குடும்பம் நடத்திவிட்டாள். பையன் குடும்பத்துடன் வெளி நாட்டில் வசிக்கிறான். அவர்கள் குடும்பங்கள் ஒரளவிற்கு பிரச்சினையின்றி ஓடுகின்றன. அவள் கணவன் மிகவும் நல்லவன். கெட்ட பழக்க வழக்கங்கள் இல்லை.


 அவன் அவளின் மீது அன்பும், நம்பிக்கையும் கொண்டவனாயிருந்தான். ஒரு மனைவிக்கு உண்டான அனைத்து நல்ல குணங்களையும் கொண்டவள், எனவும், அவள், அவனுக்கு வாய்த்தது, கடவுள் தந்த வரம் என்றும் நம்பினான். அவ்வவ்போது, அவனது நண்பர்களிடமும் கூறுவான். 


அவளுக்கு உள்ளூர மகிழ்ச்சியே. இருந்தாலும் அவளுக்கு, அவனை நாம் ஏமாற்றுகிறோம் என்பது, உறுத்தலாயிருந்தது. ஏறக்குறைய 20 வருடங்கள் அவனை ஏமாற்றி வருகிறாள். அவளுக்கு பல நியாயமான காரணங்கள் இருக்கவே செய்தன. ஏனோ மனம் சற்று குற்ற உணர்ச்சியால் இன்று பீடித்திருந்தது. அந்த குற்ற உணர்ச்சியை அவள் புறந்தள்ளவே செய்தாள். அவன் மீது பல வகையில் குறைகளை மனதில் கூறிக் கொண்டேயிருந்தாள்.


 அவனுக்கு பிற்காலத்தில் அவளது காதல், தெரியவந்தால் மிகவும் உடைந்து போவான். அவன் அந்த அதிர்ச்சியில் இறந்தும் போகலாம். அவன் இப்போதே இறந்தால் நன்றாயிருக்கும், என அவள் நினைக்கலானாள். பரிதாபமான அவன், விழித்து அவளிடம் மாத்திரைகளைக் கேட்டான். அவள் அந்த மாத்திரைகளை எடுத்தாள்.

Comments

Popular posts from this blog

துப்பறியும் நாவல்களின் காலம் முடிந்துவிட்டதா? அல்லது சுஜாதாவிற்குப் பின் துப்பறியும் நாவல்கள்? ம.ஜோசப்

பாவம் இல்லாதவர் இவள் மேல் கல் எறியட்டும் - ஜோசப் மரியமைக்கேல்.

யூதாஸ் இஸ்காரியோத்தின் நற்செய்தி - ம. ஜோசப்