Murder at Mukkombu
நாயைப்போல சுற்றி, சுற்றி
ம.ஜோசப்
லண்டனிலிருந்து வந்த அந்த இளம் ஜோடி,
முக்கொம்புக்கு சுற்றுலா வந்திருந்தனர். அவளின் சொந்த ஊர் உறையூர். அவனுக்கு
வேலூர். பெயர் பாலாஜி. கடந்த வருடம்தான் திருமணம் ஆகியது. அவனுக்கு லண்டலினில் ஒரு
ஐ.டி. கம்பெனியில் வேலை. ஒரு மாதம் விடுமுறையில் தமிழ் நாடு வந்துள்ளார்கள்.
அவள் மிகுந்த மகிழ்ச்சியாய் காணப்பட்டாள்.
அவனும் அப்படியே. அவன் அடிக்கடி நகைச்சுவையாய் ஏதாவது சொல்ல, அவளும் சிரித்துக்
கொண்டேயிருந்தாள். முக்கொம்பில் தண்ணீர் அவ்வளவாய் இல்லை. சீசன் இல்லையாதலால்,
அதிகமாக கும்பல் இல்லை. மதியம் 2 மணி இருக்கும். அங்கொன்றும், இங்கொன்றுமாக பதின்
பருவ காதல் ஜோடிகள் ஒன்றிரண்டு காணப்பட்டன.
நீ கல்லூரியில் படிக்கும்போது, உன் காதலனுடன்
இங்குதான் வருவாயா? என்றான். அது மாதிரி ஏதும் இல்லை, இந்தக் கேள்வியைத் திரும்பத்
திரும்ப கேட்க வேண்டாம், என எத்தனை தடவை சொல்லுவது? என செல்லமாய் கோபித்தாள்,
நீங்கள் கூட அப்படியிருந்திருக்கலாம் இல்லையா? என்றாள். அவள் அப்படிச் சொன்னாலும்,
ஒரு கணம் சோகமான அவன் முகம் வந்து போனது. அவனுக்கு இன்னும் திருமணமாகவில்லை. ஏதோ
ஒரு தனியார் பள்ளியில் வேலை செய்வதாகக் கேள்விப்பட்டிருந்தாள்.
அந்த இளம் ஜோடி ஒரு ஒதுக்குப்புறமான
இடத்திலிருந்து இயற்கையை ரசித்த வண்ணம் இருந்தது. அவளை கொள்ளிட ஆற்றின் கரையில்
அமரச் சொல்லிவிட்டு, காபி மற்றும் திண்பண்டங்கள் வாங்கச் சென்றான்.
ஒரு 20 நிமிடம் கழித்து திரும்பி வந்து பார்த்த
போது, அவளைக் காணவில்லை. அங்கும் இங்கும் தேடினான், சிறிது கலவரத்துடன். சற்று
தூரம் ஆற்றின் கரையில் நடந்து தேடினான். “தேவ சேனா, தேவ சேனா”, எனக் கத்தினான்.
சற்றுத்தொலைவில் ஆற்றில் யாரோ ஒருவர் மிதப்பது போல் தெரிந்தது. அவன் கத்தினான்.
அவனது சத்தத்தைக் கேட்டு ஒரு சிலர் கூடினர். ஒருவர் அவன் கை காண்பித்த திசை
நோக்கி, நிலைமையைப் புரிந்து கொண்டு, துரிதமாய் செயல்பட்டு, ஆற்றுக்குள் இறங்கி,
அந்த உடலை தூக்கி வந்தார். உடலில் உயிர் இல்லை. அது தேவ சேனா. மிகவும்
அதிர்ந்துபோய், அவன் மயங்கி விழுந்தான்.
அவன் மயங்கி எழுந்த போது, ஜீய புரம் எஸ்.ஐ.
மற்றும் சில காவலர்கள் அங்கு நின்றிருந்தனர். தேவ சேனாவின் தாயும், தம்பியும் கூட
வந்திருந்தனர். சில விசாரணைகள் செய்தனர். அவள் கரையில் நடந்திருக்க வேண்டும், கால்
தவறி விழுந்து, தண்ணீரை நிறைய குடித்து இறந்திருக்க வேண்டும், என முடிவு செய்தனர்.
இருந்தும் பிரேத பரிசோதனைக்கு உடலை அனுப்பினர். அவளின் தாய், வேண்டாம், வேண்டாம்
என்ற போதும், இது எங்கள் கடமை என கூறிவிட்டனர். பிரேத பரிசோதனை முடிந்து, அவளை
எரித்துவிட்டனர். பாலாஜி தன் குடும்பத்தினருடன் வேலூர் சென்றுவிட்டான்.
காவலர் கொடுத்த பரிசோதனை அறிக்கையை மேலோட்டமாக
வாசித்த போது, அதிர்ச்சியடைந்தார், எஸ்.ஐ. பாஸ்கர். அவள் உடம்பில் சில காயங்கள்
உள்ளன. கால்களின் சிராய்ப்பு உள்ளது. மேலும், அவள் தண்ணீரில்
அமுக்கப்பட்டிருக்கலாம், என்றது அவ்வறிக்கை.
காயங்கள் தண்ணீரில் விழுவதால் வருவதில்லை.
அப்படியெனில் இறப்பதற்கு முன், ஏதோ ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதில் அவள்
விழுந்துள்ளாள். மேலும் தரையில் இழுக்கப்பட்டிருக்கலாம். அதனால் சிராய்ப்புகள்.
அப்படியெனில் இது கொலை. இது, தற்செயலாக நடந்த விபத்து இல்லை. வேற எதுவும்
குறிப்பிடும்படியான விபரங்கள் இல்லை. யார் கொலை செய்திருப்பார்? ஏன்?
அவளின் கணவனை வரவழைத்து, பாஸ்கர் விசாரித்தார். அவன்
அதிர்ச்சியிலிருந்து மீண்டு விட்டான். ஆறு மாதத்திற்கு முன்புதான் திருமணமாகியது.
அவளுடைய பழைய வாழ்வைப் பற்றி அவ்வளவாகத் தெரியாது. எங்களுக்குள் எந்த பிரச்சினையும்
இல்லை. எல்லாம் நல்லபடியாகவே இருந்தது. அவள் இந்த திருமணத்தில் மகிழ்ச்சியாகவும்,
நம்பிக்கையுடனும் இருப்பதாக தன் தோழிக்கு அனுப்பிய மெயிலில் குறிப்பிட்டுள்ளாள்.
எனக்கு யார் மேலும் சந்தேகமில்லை. கொல்லப்படும் அளவிற்கு, அவளது இறந்தகாலம்
இருந்துள்ளது, என்பதை அறிய கஷ்டமாகவும், அதிர்ச்சியாகவும் உள்ளது, என கூறினான்.
அவளது தாய், விசாரணையில், குறிப்பிட்ட ஒரு
விஷயம் முக்கியானதாக இருந்தது. தேவ சேனாவுக்கு ஒரு பையனுடன் காதல். அவன் வேற சாதி,
மதம் எனபதால், நாங்கள் கட்டி வைக்கவில்லை. ஏறக்குறைய மூன்று வருடம் காதலித்தாக
நாங்கள் தெரிந்து கொண்டோம். அவன், அவள் படித்த கல்லூரியில் படித்தவன். சீனியர்.
அவன் மிகவும் தீவிரமாக காதலித்ததாக அவள் தெரிவித்தாள். நாங்கள் குடும்ப மானம்
என்னாவது? தம்பியின் எதிர் காலம்? இப்படி காரணம் காட்டி, அவள் மனதை மாற்றினோம்.
அவளுக்கு வெளிநாடு சென்று செட்டில் ஆக வேண்டும் என்பது கனவு. அதை வைத்து
வெளிநாட்டு மாப்பிள்ளையை திருமணம் செய்து வைத்தோம்.
அது குறித்த பேச்சு எழுந்ததிலிருந்து, அவள் மனம்
காதலிலிருந்து விடுபட ஆரம்பித்தது. நிச்சயம் செய்ததிலிருந்து அவனை வெறுக்கவும்
ஆரம்பித்தாள். அவனிடமிருந்து சிற்சில தொந்தரவுகள் ஆரம்பத்தில் இருந்தன. பின்பு
அவையும் மறைந்துவிட்டன. ஏறக்குறைய நாங்கள் அவனை மறந்தே விட்டோம். அவனுக்கு இன்னும்
திருமணமாகவில்லை. பெரம்பலூரில் ஏதோ ஒரு தனியார் பள்ளியில் வேலை செய்வதாகக்
கேள்விப்பட்டோம். அவன் பெயர் ராஜா. கிறிஸ்தவர். நாங்கள் வேற மதம், சாதி. வேலை
பார்க்கும் பள்ளியின் பெயர் தெரியவில்லை. அவனுக்கும், அவளுக்கும் நிச்சயத்ததிற்குப்பின்
எந்தவித தொடர்புமில்லை. அவள் தமிழ் நாடு வருவதே அவனுக்குத் தெரியாது. பாஸ்கர் ஒரு காவலரை பெரம்பலூர் சென்று, அந்த
ராஜாவைப் பற்றி விசாரிக்கச் சொன்னார். குறிப்பாக கொலை நடந்த அன்று ராஜா
எங்கிருந்தார்? என.
எஸ்.ஐ. பாஸ்கர் சற்று குழம்பினார். யார்
கொலையாளி? ஒரு வேளை யாரேனும் அவளது நகைக்காக கொள்ளையடிக்க வந்து, அதில் நடந்த
சண்டையில் கொலை நடந்திருக்கலாம். அந்த இடத்தில் சண்டை நடந்ததற்கான அறிகுறி
உள்ளது. இல்லையெனில் யாரேனும் பாலியல்
பலாத்காரம் பண்ண முயன்று, அது கொலையில் முடிந்திருக்கலாம். இல்லையெனில் முன்
விரோதம், பரம்பரைப்பகை, பழைய காதலன், கள்ள காதலன், இப்படியேதும் காரணமாக
இருக்கலாம். நகைகள் திருடப்படவில்லை. பாலியல் பலாத்காரமும் நடக்கவில்லை.
எப்படியிருந்தாலும் அவளுடன் சம்பந்தப்பட்ட ஒரு
கொலையாளி அவர்களைத் தொடர்ந்து வந்திருக்க வேண்டும். முகம் தெரியாத அக்குற்றவாளி
யார்? அது திட்டமிட்ட கொலையெனில் ஏதேனும் கொலைக்கான கருவியை அவன் கொண்டுவந்து,
காத்திருந்து, சரியான சந்தர்ப்பம் வாய்க்கும் போது கொலை செய்துவிட்டுத்
தப்பியிருக்க வேண்டும். கருவி ஏதுமில்லை, ஆற்றில் கொல்ல வேண்டும் என
திட்டமிட்டிருந்தால், ஆற்றைப் பற்றியும், இந்த ஏரியாவைப்பற்றியும் தெரிந்தவனாக
இருக்க வேண்டும். முதலில், அவர்கள் ஆற்றிற்கு வருவது தெரிந்து, பின் தொடர்ந்து
வந்திருக்க வேண்டும்.
பாஸ்கர் அன்று மாலை டாக்டர். மைக்கேலை, அவரது
கல்லூரியில் சந்தித்தார். டாக்டர்.மைக்கேல் அவரது நண்பர். நிறைய படித்தவர். சிக்கலான
கேஸ்களில் அவர் உதவக் கூடியவர். அவரிடம் இந்த கேசைப்பற்றிக் கூறினார். மிகக்
கூர்மையாக கவனித்துப், பின் அவர் ஒரு முடிவுக்கு வந்தவராய், ராஜாவைப் பற்றி வேற
விஷயங்கள் எதுமுண்டா? என்றார் மைக்கேல். பாஸ்கர், பெரம்பலூர் சென்ற காவலரிடம் போன்
செய்து விசாரித்தார். ராஜா என்பவர், மாதா மெட்ரிகுலேசன் பள்ளியில் வேலை
செய்வதாகவும், சில காலமாக விடுமுறையில் மேங்களூர் சென்றிருப்பதாக கூறினார்,
காவலர். டாக்டர். மைக்கிடம் அவ்விஷயத்தைக் கூறினார் பாஸ்கர்.
பாஸ்கர், அது உண்மையெனில், நாம் சந்தேகப்பட
வேண்டியவர்கள், தேவ சேனாவின் குடும்பத்தினர் அல்லது பாலாஜியின் குடும்பத்தினர்.
இன்னொரு பாஸிபிலிட்டி, தேவ சேனாவுக்கு தெரிந்த வேறொரு நபர், ராஜாவைப் போல அவளால்
பாதிக்கப்பட்டவர். விசாரித்த வகையில் அப்படி ஒருவர் இல்லை. அவள் முக்கொம்பு வருவது
யார்யாருக்குத் தெரியும்? அவளின் அம்மா, தம்பி, அவளின் கணவன் மற்றும் அவன்
குடும்பத்தினர். இவர்களில் அம்மாவை விட்டுவிட்டால், தம்பியும், கணவனும், கொலை
நடந்த அன்று திருச்சியில்தான் இருந்துள்ளனர். தம்பி காலேஜில் முதலாமாண்டு
படிக்கிறான். அவனையும் விட்டுவிட்டால், எஞ்சியிருப்பது கணவன் மட்டுமே. சார், கணவன்
கொலை செய்வதா? பாஸ்கர், “அவனுக்கு போன் போடுங்கள்”.
போனை
அவன் எடுக்கவில்லை. அவனது அப்பா பேசினார். பையன் வெளியே போயிருக்கான், என்ன
விஷயம்? நீங்கள் யார்?, நான் அவனோட பிரண்ட், எங்கே? எதுக்குப் போயிருக்கான்? ஏதோ,
டிக்கட் எடுக்கனும்னு போனான். அவன் இரண்டு நாளில் லண்டன் போப்போறான், தேங்க்ஸ், என
போனை கட் பண்ணிய பாஸ்கர். சார், யூ ஆர் ரைட். தேங்க்ஸ். நான் அப்புறமா மீட்
பண்றேன், என ஒடினார்.
வேலூர்
போலீஸிற்கு போன் போட்டு தகவல் தெரிவிக்க,
அவர்கள், பாலாஜியை மடக்கினார்கள்.
ஏன் உன் மனைவியைக் கொன்றாய்? உண்மையைச் சொல்லு? என
பாஸ்கர் கேட்க, முதலில் மறுத்தவன், பின்பு பயந்து கொலை செய்ததை ஒத்துக் கொண்டான்.
உண்மையில் எனக்கு இவளைப் பிடிக்கவில்லை. எனக்கும், ஒரு லண்டன் வாழ் இந்திய
வம்சாவளி இளம் விதவைப் பெண்ணுடன் நீண்ட நாளாக தொடர்பு இருந்தது. அவளுடன் நான்
சந்தோசமாக வாழ்வை ஓட்டினேன். பார்ட்டி, பார், டூர், என நாங்கள் ஜாலியாக இருந்தோம்.
அப்பா, அம்மா கல்யாணம், கல்யாணம் என படுத்தியெடுத்தார்கள். அவர்களிடம் எனது இந்த கள்ள
உறவை கூற தைரியம் இல்லாமல் திருமணத்திற்கு ஒத்துக் கொண்டேன். அவளையும், அவள்
குடும்பத்தையும் என்னால் சகிக்க முடியவில்லை. அவளுக்கு என்னுடன் வாழத்
தகுதியில்லை. அவர்களுக்கு வெளிநாட்டு மாப்பிள்ளை வேண்டும். அவளது தம்பிக்கும்
வெளிநாட்டில் வேலை வாங்கிக் கொடுத்து, செட்டில் செய்ய வேண்டும். இந்த செயல்கள்
எல்லாம் எனக்கு வெறுப்பையே தந்தன. இதனிடையில், எனது லண்டன் தோழி, இவளை எப்படியாவது
தொலைத்து விட்டு வந்தால்தான், என்னுடன் வாழலாம் எனக் கட்டயாப்படுத்தினாள்.
அவளது தம்பியிடம் மிகவும் பெர்சனாலாகப் பேசிக்
கொண்டிருந்தபோது அவளது பழைய காதலைப் பற்றிக் கூறினாள். அதுவேறு எனக்கு
கோபத்தையும், வெறியையும் தூண்டியது.
இந்நிலையில், முக்கொம்பில் சமீபத்தில் நடந்த, கர்னாடகாவைச் சார்ந்த சுற்றுலாப் பயணிக்
கொல்லப்பட்ட செய்தியைப் பேப்பரில் படித்தேன். அதேபோல் செய்ய, ஒரு சிலரை பணங்கொடுத்து
ஏற்பாடு செய்தேன். பழியை, பழைய காதலன் மேல் போட்டுவிட்டுத் லண்டனுக்குத் தப்பி
விடலாம் என்றிருந்தேன்.
அன்று, நான் காபி வாங்கச் செல்வது போல் சென்று
விட்டு, ஆற்றின் கரையின் மரத்தின்பின் ஒளிந்து கொண்டு, அவளைக் கூப்பிட்டேன். எனது
குரலைக் கேட்டு, அவள் வந்தாள். பின்புறமாய் எனது ஆட்கள் இருவரும், எனது
ஏற்பாட்டின்படி வந்தனர். சற்று தூரமாய் வந்தபின், நான் சிக்னல் கொடுக்கவும்,
அவர்கள் அவள்மீது பாய்ந்தனர். அவள் முரண்டு பிடிக்கவும் சிறு சண்டை நடந்தது,
அப்போது நான் வெளியே வந்து, அவர்களுக்கு உதவினேன். அவள் அதிர்ந்து
பேச்சற்றவளானாள். அவளை இழுத்து ஆற்றுக்குள் அமுக்கினர். நான் ஓடிவந்து காபி வாங்க
வந்தேன். அவர்கள் கூட்டத்தில் கலந்து தப்பித்தனர். காவலர் விலங்கை எடுத்தார்.
தேவ சேனாவின் தாய் மிகுந்த அதிர்ச்சியும், விசனமுமடைந்தாள்.
நாம் பார்த்த, படித்த மாப்பிள்ளை கொலை செய்துள்ளானே!, என அழுது அரற்றினாள். நாய்
போல காலைச் சுற்றிச் சுற்றி வந்த ராஜா ஏனோ, அவள் நினைவுக்கு வந்தான்.
Comments