காதல் மற்றும் வழக்கு எண்: 18/9 : பாலாஜி சக்திவேலின் திரைப் படங்கள் குறித்த ஒரு பார்வை.

பாலாஜி சக்திவேலின் திரைப் படங்கள் குறித்த ஒரு பார்வை.

எம்.ஜோசப்

       தமிழ் திரைப்படங்களை ஒரு பெரிய அளவில் ( broader sense) காதல் படங்கள் எனலாம், என நான் கருதுகிறேன். எம்.ஜி.ஆர், ரஜினிகாந்த் மற்றும் விஜய் பாணி படங்கள், குடும்பப் படங்கள், பக்திப் படங்கள், நகைச் சுவைப் படங்கள், சமூகப் படங்கள் இப்படி எந்தவகைப் படங்களை எடுத்துக் கொண்டாலும் காதல் மைய இழையாகவோ அல்லது துணைக் கருவாகவோ நமது படங்களில் உள்ளது. காதலைச் சொல்லாத படங்கள் ஏறக்குறைய இல்லை எனக் கூறிவிடலாம். காதல் இல்லாத படங்களை நம் ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களோ என்ற ஐயம் எனக்குண்டு. பன்னெடுங்காலமாக நாம் ரசித்து வரும் வள்ளி திருமணம் நாடகம் ஒரு காதல் கதைதான்.

எம்.ஜி.ஆர். படங்களில், பல்லாயிரக்கணக்கான பிரச்சினைகள் அவரை சூழ்ந்து நெருக்கும் போதும், அவர் காதல் பாட்டு பாட சென்றுவிடுவார். மிகவும் வரவேற்பைப் பெற்ற நகைச் சுவைப் படமான உள்ளத்தை அள்ளித் தா படமும் ஒரு காதல் படம் தான். பக்திப் படமான அன்னை வேளாங்கண்ணியிலும் ஒரு சிறிய காதல் கதை உள்ளது.  மிகவும் பேசப்படும் த்ரில்லர் ( துப்பறியும் )  வகைப் படங்களான அதே கண்கள் மற்றும் புதிய பறவை போன்றவைகள் கூட காதல் படங்களே.

காதலின் மகோன்னதத்தைக் கூறும் படங்கள் நமக்கு நிறைய உள்ளன. இவ்வகைப் படங்களில் எதை இழந்தேனும் காதலை வாழ வைத்து விடவேண்டும் என்பதுதான் மையக் கருத்து. காதலுக்காக உயிரையே இழப்பது (பயணங்கள் முடிவதில்லை, ஒரு தலை ராகம்), காதலுக்காக உடல் உறுப்புகளை (நாக்கையே)  இழப்பது (சொல்லாமலே), காதலுக்காக திருமணத்தை உதறுவது (புதிய வார்ப்புகள், முதல் மரியாதை), காதலுக்காக மதத்தை இழப்பது ( காதலுக்கு மரியாதை, அலைகள் ஓய்வதில்லை), காதலுக்காக சாதியை இழப்பது (வேதம் புதிது, பாரதிக் கண்ணம்மா), காதலுக்காக காதலியை இழப்பது(!!) (ஷாஜகான்), போன்றவை ஒரு சில உதாரணங்களாகும்.

அமீரின் பருத்தி வீரன், பாலாஜி சக்திவேலின் காதல் மற்றும்  வழக்கு எண்: 18/9,  வசந்தபாலனின் அங்காடித் தெரு மற்றும் சேரனின் பாரதி கண்ணம்மா ஆகிய படங்களின் மைய இழை காதல்; இவற்றின் இயக்குனர்கள் தமிழின் முக்கிய இயக்குனர்களாக அறியப்படுபவர்கள். இப்படங்கள் அனைத்தும் வெற்றிப் படங்களாகும். ஞான ராஜ சேகரனின் பாரதி படத்திற்கான விளம்பரத்தில் “ ஆதலினால் காதல் செய்வீர் மானிடரே”, என்ற பாரதியாரின் வரியைத்தான் பயன் படுத்தியிருந்தார்கள். காதல் என்பது தமிழ் சினிமாவில் ஒரு வெற்றிக்கான ஒரு கச்சாப் பொருள், என உறுதியாகக் கூறமுடியும். ஆனால், காதல் யதார்த்தத்தில் வேறாயிருக்கிறது.


பாலாஜி சக்திவேலின் காதல் மற்றும்  வழக்கு எண்: 18/9  ஆகிய இரு படஙக்ளைப் பற்றி இங்கு ஆராய்வோம்.


காதல்
      தாழ்த்தப்பட்ட சாதி பையனுக்கும், உயர் சாதிப் பெண்ணுக்கும் ஏற்படும் இளம் பருவத்துக் காதல் பற்றிய கதை. ஊரைவிட்டு ஓடிப்போகும் இருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர். வாழ்க்கையை ஓட்ட பல்வேறு இன்னல்களை சந்திக்கின்றனர். பெண்ணின் சித்தப்பா அவர்களை ஏமாற்றி ஊருக்கே கூட்டி வந்துவிடுகிறார். அவன் கட்டிய தாலியை அறுத்தெறிகின்றனர் உயர் சாதியினர். அவன் பைத்தியமாகி அலைகின்றான். வேறொரு, சுய சாதிக்கார ஆணுக்கு வாழ்க்கைப்பட்ட நாயகி, கணவனுடன் அவனைக் கண்டு கதறியழ, அவள் கணவன் அவனை எடுத்து வளர்க்கின்றார்.
காலங்காலமாக தாழ்த்தப்பட்ட சாதியினர் ஒடுக்கப்பட்டு வருகின்றனர். அவர்களின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன. உயர் சாதியினரின் தயவில்தான் இவர்கள் வாழ வேண்டும். அவர்களது உரிமை, ஆசாபாசங்கள், காதல் எல்லாமே உயர் சாதியினர்தான் நிர்ணயிக்க வேண்டும் என்பது மேட்டிமை மனப்பாங்கு. ஒரு தாழ்த்தப்பட்ட சாதியினன், ஒரு உயர் சாதியினனால் அழிக்கப்பட முடியும் அல்லது வாழவைக்கப்பட முடியும் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணமாய் இப்படத்தைக் கூறலாம். இது காலங்காலமாக உயர் சாதியினரால் நம்பப்படும் ஒரு கருத்து. மிகவும் சிறந்த திரைக்கதையுடன் வெளிவந்த இப்படம், பல விஷயங்களில் தமிழ்ப் படங்களுக்கு ஒரு முன்னோடியாகும். ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் இப்படம் எடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இதைக் காரணமாக காட்டி இயக்குனர் பல விமர்சனங்களிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியும்.     
நடைமுறையில் இவ்வகை காதல்களுக்கு ஏற்படும் கதி வேறாயிருக்கிறது. காதலன் கொல்லப்படுவான் அல்லது இருவரும் கொல்லப்படுவார்கள். காதலி ஏமாற்றிவிட்டு செல்வாள். அதனால் காதலன் தற்கொலை செய்வான் அல்லது காலமெல்லாம் நடைபிணமாக வாழ்வான். காதலன் குடும்பமே தீக்கிரையாக்கப்படும் அல்லது ஊரைவிட்டுத் துரத்தப்படும். சில சமயங்களில் அந்த சாதி குடியிருப்பே சிதைத்து நொறுக்கப்படும். இவைகள் சர்வ சாதரணமாக தென் மாவட்டங்களில் நடந்தேறும் விஷயங்களாகும். யதார்த்தம் இவ்வாறிருக்க, அவனை (தாழ்த்தப்பட்ட சாதி பையனை) ஆதரித்து வளர்ப்பது போல் காண்பிப்பது, ஒரு திரைப்பட பாணியிலான (cinematic) தீர்வாகும். மேலும், மேட்டிமை மனப்பாங்குமாகும்.     
காதலன் பாத்திரம் படம் முழுதும் ஒரு உள்ளடங்கிய (submissive) மன நிலையிலேயே இருப்பதாக சித்தரிக்கப்படிருக்கும். அவன் படம் முழுதும் பயந்தவாறே, “என்னை கைவிட்டுவிட மாட்டியே”, என கேட்டபடியே இருப்பான். (தமிழ் திரைப்பட கதாநாயகன் பொதுவாக வீரம் செறிந்தவனாக இருப்பான். வசனங்களை பொழிவான். நகைச்சுவை மிகுந்தவனாக இருப்பான். ஆனால் இவனோ முற்றிலும் வேறுப்பட்ட பயந்தாங்கொள்ளி). காதலிக்கும் பையன்கள், அவர்களின் காதலிகள் முன்பு மிகுந்த தைரியம் உள்ளவர்களாய் இருப்பதுதான் யதார்த்தம். ஆனால், இப்படத்தின் காதலன் மிகவும் தைரியம் குறைந்தவனாக சித்தரிக்கப்பட்டுள்ளான். காதலர்களிடையே காணகிடைக்கும் போலியான வீர வசனங்கள்கூட இக்காதலனுக்குக் கிடையாது. தாழ்த்தப்பட்ட சாதி பையனுக்கு வீரம் இருக்காது என்பதுதான் இதன் உட்கருத்து. இது போன்று உயர்சாதிக்கு ஆதரவான நுண்ணிழை படம் முழுதும் பின்னப்பட்டிருக்கிறது.
படம் முழுதும் உயர் சாதியினருக்கு ஆதரவாக ஒரு நுண்ணிழை பின்னப்பட்டிருப்பது, படத்தின் உச்சக் காட்சியில் (climax) உறுதி பெறும். காதல்தான் உலகை ஜெயிக்கும் என சர்ரியலிஸ்டுகள் கூறுவதாக படித்திருக்கிறேன். ஆனால் இங்கு காதலர்களால் சாதியைக்கூட ஜெயிக்க முடியாது என்பதுதான் உண்மையாகும்.
உடல் ரீதியாக எந்தவித பாதிப்பின்றி, அவள் திருப்பி அனுப்பப்படுவதாக காட்சியமைப்புகள் உள்ளன. இது, தாழ்த்தப்பட்ட சாதியின் ஆண், உயர் சாதி பெண்ணுடன் உடல் ரீதியாக உறவு வைத்துக் கொள்வது பற்றிய இயக்குனரின் பார்வையை நமக்கு உணர்த்துகிறது. அவளின் கற்பு, ஒரு உயர்சாதி ஆணுக்காக பாதுகாக்கப்படுகிறது. 
வழக்கு எண்: 18/9


  ஒரு யதார்த்தமான காதலை வழக்கு எண்: 18/9 சித்தரிக்கிறது.  பொதுவாக துப்பறியும் படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் ஒரு வரவேற்பு இருக்கவே செய்கிறது. இப்போதும், எப்போதும் துப்பறியும் படங்களுக்கு ரசிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். பரபரப்பு, திகில், விறுவிறுப்பு, திடீர் திருப்பங்கள் போன்ற வெகுசன (commercial cinema) படத்தின்  கூறுகள் நிறைந்து காணப்படுபவை துப்பறியும் படங்கள். தர்மத்தின் வாழ்வை சூது கவ்வினாலும், இறுதியில் தர்மம் எப்படியும் ஜெயித்துவிடும், என்பதுதான் இப்படங்களின் மையக் கருத்து. எம்.ஜி.ஆர் நடித்த வெற்றிப் படமான இதயக்கனி (எம்.ஜி.ஆர் தனது காதலியையே துப்பறிவார்) மற்றும் நூறாவது நாள் உட்பட பலத் திரைப்படங்கள் இவ்வகையில் எடுக்கப்பட்டுள்ளன. இவ்வகைப் படங்களில் சமீபத்தில் வெளியான மிஷ்கினின் அஞ்சாதே, யுத்தம் செய் ஆகியவை குறிப்பிடும்படியான படங்களாகும்.
       துப்பறியும் படங்கள் சமூத்தின் பல சமூக அவலங்களைக் பிரதிபலிப்பதாகக் கொள்ளலாம். உண்மையில்  துப்பறியும் படங்களில் வரும் கொலை, கொள்ளை, கற்பழிப்புகள், யதார்த்த வாழ்வில் சாதரணமாக நடந்தேறிக் கொண்டிருப்பவையே. ஒரு வகையில் அவை யதார்த்த சித்தரிப்புகளே. துப்பறியும் நாவல்கள் சமூக ஏற்றத் தாழ்வை பிரதிபலிப்பதாக உள்ளன என அயன் ரான்கின் கூறுகிறார். ( யுனைடெட் கிங்கிடத்தில் மிகவும் புகழ் பெற்ற துப்பறியும் நாவல் ஆசிரியர் அயன் ரான்கின் Ian Rankin ).
      ஒரு வகையில் வழக்கு எண்: 18/9 ஒரு துப்பறியும் (thriller Cinema) படமும்தான். ஒரு துப்பறியும் படம் மிக இயல்பாக, யதார்த்தமாக இருக்க முடியும் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் இப்படம்.
      வழக்கு எண்: 18/9, ஒரு காதல் படம்தானென்றாலும், அதை திரைப்படமாக்கிய விதம் மிகவும் சிலாகித்து பாராட்டும்படி உள்ளது. திரைக் கதையை ஒரு சிற்பியின் கலை நயத்துடன் செதுக்கியுள்ளார் என்றால் மிகையில்லை. எந்தவித வணிக மதிப்பும் இல்லாத நடிகர்கள், குத்துப்பாட்டு, இரட்டை அர்த்த வசனங்கள். இப்படி ஏதுமின்றி ஒரு வெற்றிப் படத்தைக் கொடுத்திருப்பதற்குப் பின்னுள்ள இயக்குனரது கடின உழைப்பை நாம் பாராட்டியே ஆகவேண்டும்.
      இயக்குனர் நடிகர்கள் அனைவரிடமும், அவர்களின் மிகச் சிறந்த ஆற்றலை வெளிக் கொணர்ந்திருக்கிறார். கூத்துக் கலைஞரான சின்னச் சாமி ஒரு அரிய கண்டு பிடிப்பு.
      காமிரா மொழி (திரை மொழி) இப்படத்திற்கு பெரிய பலமாக இருக்கிறது. நாம் படம் பார்த்துக் கொண்டிருக்கிறோம், என்ற உணர்வே இருக்காது. ஏதோ நம் அருகில் நடந்து கொண்டிருக்கும் ஒரு சம்பவம் என ஒன்றிப் போவோம். காட்சிகள் சில சமயம் அழச் செய்கின்றன. பயம் காட்டுகின்றன. திகிலூட்டுகின்றன. முகத்தில் அறைகின்றன.


      படத்தில் ஆகச் சிறந்த விஷயமாக நான் கருதுவது, அதன் ஒலிப்பிரதியை. படம் முழுதும் நாம் பல்வேறு ஒலிகளை கேட்டுக் கொண்டேயிருக்கின்றோம். சாலையில் நாம் நடக்கும் போது நாம் மட்டுமல்ல; நம்மைச் சுற்றி பல ஒலிகள் பின்னி பினைந்திருகின்றன. பண்பலையில் பாடல், விளம்பரம், கடந்து செல்லும் கார் எழுப்பும் ஒலி, சத்தமாய் இருவர் பேசும் பேச்சுகள், இப்படி பல ஒலிகள் நம்மைச் சுற்றி பின்னிப் பிணைந்துள்ளன. இவ்வாறு பல ஒலிகள் இப்படத்தின் காட்சிகள் எங்கும் பின்னியிருப்பதைக் கேட்க முடியும். இந்த ஒலிக் கோவைகள் காட்சிக்கு பின்ணணி இசை போல சில சமயம் செயல் படுகின்றன. சத்தமில்லாத ஒரு யதார்த்தம் உண்டா? எனில் இல்லை எனலாம். ஒலிகள் இல்லாமல் ஒரு உலகம் உண்டா? எனில் இல்லை. ஒலிகள் பிணந்த ஒரு உலகத்தை நமக்குக் காட்சிப்படுத்துகிறார், பாலாஜி சக்திவேல். இதில் இப்படம் ஒரு முன்னோடி என்று கூறலாம்.
      படத்தின் இன்னொரு மிக முக்கிய விஷயம், சமூக அவலங்களின் மீதான மிகக் கூர்மையான விமர்சனம். ஒரு துளி பிரச்சாரமின்றி, இத்துனைக் கூர்மையாக விமர்சிக்க முடியும் என்பதற்கு பாலாஜி சக்திவேலின் திரை மொழியே காரணம்.
      இருப்பினும் கொஞ்சம் பழமைத்தன்மை படத்தில் ஊடுருவி இருப்பதையும் மறுக்க முடியாது. “பணக்காரர்களின் காதல் கயமைத் தன்மை வாய்ந்தது. ஏழைகளின் காதல் உயர்வானது”; பணக்கார இளைஞர்களின் காதல், காமத்திற்கே; என்ற பழைய பல்லவிதான் இப்படமும், என சாதாரண சினிமா ரசிகனாலும் விமர்சிக்கக் கூடியதுதான், இப்படத்தின் கரு. இது, ஏன் மாறியிருக்கக் கூடாது? ஏழைகளின் காதல்தான் புனிமானது என்பது தமிழ் சினிமாவின் நியதி போலும்.
காதல் என்ற உணர்வு, உண்மையில் புனிதமானதுதானா? அல்லது தெய்வீகமானாதா?  மனிதர்களுக்கு இயல்பாக ஏற்படும், இந்த உணர்வின் மீது அதீத புனிதத் தன்மையை நம் திரைப் படங்கள் காலங் காலமாக கட்டமைத்து  வருகின்றன. உண்மையில் தூய்மையான அல்லது புனிதமான அன்பு என்ற ஒன்று உலகில் உண்டா? எனில். அப்படியில்லை என்றே தோன்றுகிறது. காதலும் அதற்கு விதி விலக்கல்ல. ஆனால், சினிமாவில் காதலின் மீது புனையப்பட்ட புனிதத்தை, உண்மை என நம்பும் நடுத்தர மற்றும் கீழ்த்தட்டு இளைஞர்கள், பெண்கள் யதார்த்தத்தில் காதலில் காணப்படும் குருரங்களை எதிர் கொள்ள முடியாமல் தவிக்கிறார்கள். சிலர் தற்கொலை செய்து கொள்கின்றனர்; சிலர் குடிகாரர்களாகின்றனர்; சிலர் விபச்சாரத்திலும், சிலர் போதை பொருள்களிலும் வாழ்வைத் தொலைக்கின்றனர்; சிலர் நடை பிணமாக வாழ்வைக் கழிக்கின்றனர். பாலாஜி சக்திவேலும் காதலுக்காக வாழ்வை தியாகம் செய்தல்; காத்திருத்தல் என, சராசரி இயக்கனராகவே இதில் தெரிகிறார்.
படம் ஏறக்குறைய இறுதிக் காட்சி வரை மிகவும் சிறப்பாக உள்ளது. இடைவேளையின் போது, படத்தின் முதல் பாதி குறித்து பெர்டோல்ட் ப்ரெக்கிட்ன்  (நோபல் பரிசு பெற்ற ஜெர்மன் நாடகாசிரியர்; கவிஞர்) கவிதை வரிகள் எனக்குள் ஓடின. மிகவும் நிறைவான ஒரு உணர்வு என்னுள் மகிழ்ச்சியைத் தூண்டியது. கிளைமாக்ஸில் மிகவும் குழம்பிப் போய்விட்டேன். ஏன் இயக்குனர் கிளைமாக்ஸை இப்படி குழப்பி, இழுத்தடிக்க வேண்டுமெனத் தோன்றியது?
படம் முடிந்து வெளியே வரும் போது அக்கவிதை வரிகள் என்னிடமிருந்து பறந்து போயிருந்தன.

                              

Comments

Popular posts from this blog

துப்பறியும் நாவல்களின் காலம் முடிந்துவிட்டதா? அல்லது சுஜாதாவிற்குப் பின் துப்பறியும் நாவல்கள்? ம.ஜோசப்

பாவம் இல்லாதவர் இவள் மேல் கல் எறியட்டும் - ஜோசப் மரியமைக்கேல்.

யூதாஸ் இஸ்காரியோத்தின் நற்செய்தி - ம. ஜோசப்