Novel - Chapter 5

பாம்புகள் வந்து கொண்டேயிருக்கின்றன

5

காலையில் அனைவரும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தனர். அவரவர், அவரவர் வேலைகளுக்குத் தயாராகிக் கொண்டிருந்தனர். வெயில் சுள்ளென அடிக்க ஆரம்பித்து விட்டது. கோடை காலம் ஆரம்பித்து விட்டதற்கான அறிகுறி. இரவுகளின் சன்னல் கதவுகள் திறக்கப்படுகின்றன. போர்வைகளை மக்கள் துறக்க ஆரம்பித்து விட்டனர். இன்னும் சிறிது காலத்தில் தாங்க முடியாத வெப்பம் தகிக்கும். கோடை காலங்கள் குறித்த புகார்களை மக்கள் இனி கூறிக் கொண்டிருப்பார்கள். இக்குடும்பத்திற்கு கோடைகாலம் முன்பே ஆரம்பித்து விட்டது. யாரும் சூரியனை எங்கும் ஒளித்து வைக்க முடியாது? எல்லோரும் வெப்பத்திற்கு தன்னை அர்பணித்துதான் ஆக வேண்டும்.
அகிலின் செல் பேசி சிணுங்கியது. அகல்யா. ஹலோ, என்றான். ஏன் போனே இல்லை? என்றாள். கொஞ்சம் வீட்டு வேலை அதிகம். இன்று ஈவினிங் அவசியம் பெரியகோவிலில் மீட் பண்ணலாம், என்றான். சரி, என்றாள். பெண்வீட்டார் திருமணத்தை எப்போது வைத்து கொள்ளலாம், என இருக்கிறார்கள், என கேட்டு வா? என்றாள், அலமேலு. ம் என்றான் எரிச்சலுடன்.
தனது வேலைகளை முடித்துவிட்டு, பெரிய கோவிலை நோக்கி வண்டியில் பயணித்துக் கொண்டிருந்தான். உண்மையில் இந்தத் திருமணத்தில் அவனுக்கு விருப்பமேயில்லை. அவன் காதலித்த கிரேசி அவன் கண்களில் ஒரு கணம் வந்து மறைந்தாள். கண்களில் நீர் திரையிட அவளைப் பிரிந்த அந்தக் கடைசிக் கணங்கள் அவனை உலுக்கியது. அவளின் விம்மல்கள், விசும்பல்கள் இப்போதும் இரவுகளில் அவன் காதருகே கேட்கின்றன. விடாமல் துரத்திக் கொண்டேயிருக்கின்றன. அவனும் ஒடிக் கொண்டேயிருக்கின்றான், அதன் துரத்தல்களிடமிருந்து தப்பிக்க.
       மதம்தான் அவர்களைப் பிரித்தது. இவர்கள் மதம் வேறு; அவளின் மதம் வேறு. இவன் தாய்மொழி வேறு; அவளின் தாய் மொழிவேறு. அவள் வீட்டிற்கு தெரிவிக்காமலே இருந்துவிட்டாள். இவனின் அப்பா எப்படியோ தெரிந்து கொண்டு மிகவும் சண்டையிட்டார். அகல்யாவுடன் நிச்சயம் முடியும் வரை இருவரும் பேசிக் கொள்வதேயில்லை. மதம் விட்டு மதம் கல்யாணம் பண்ண அவர் தயாரில்லை. அம்மாவும் அவருக்கு துணை நின்றாள்.
       எதை இழந்தாலும் சாதியை அவரால் விடமுடியாது. மதத்தை? அவரது பெருமை, கௌவரம் எல்லாம் சாதியால்தான். அவர்களது சாதி சங்கத்தின் ஒரு முக்கிய பிரமுகரின் மிக நெருங்கிய நண்பர் இவர். அவரால்தான் இந்த அகல்யா சம்பந்தம் வந்தது. இவனுக்கு சாதியில் பெரிய பிடிமானம் இருந்ததில்லை. அண்ணனுக்கு அப்பாவைப் போல் சாதியில் பெரிய ஈடுபாடு உண்டு.
       சாதியில் என்ன இருக்கிறது? என்ன கிடைக்கிறது? அது ஒரு மிருகம். அதன் மிருக வெளிச்சம் கண்களில் தெறித்துக் கொண்டேயிருக்கிறது. அதன் கோரப்பசிக்கு பல்லாயிரக்கணக்கான காதல்கள் பலியாகி கொண்டிருக்கின்றன. இவனது காதலும் கொன்று புதைக்கப்பட்டாயிற்று. உண்மையில் இந்தத் திருமணத்தில் அவனுக்கு எந்த ஆர்வமுமில்லை. திருமணம் நின்று போனாலும் கவலையில்லை. காதலின் வலிகள் மனதெங்கும் நிறைந்திருக்க, இன்னொரு பெண்ணைப் பற்றி என்ன நினைக்க? இது குறித்த எந்த கவலையுமில்லாமல் பெரியவர்கள் சாதி, மதம் காப்பற்றபட்டதில் மகிழ்கிறார்கள்.
       அகல்யாவை நினைத்தால் கவலையாய் இருக்கிறது? அவனால் அவள் மேல் பாசமாயிருக்க முடியவில்லை. போனில் மகிழ்ச்சயாய் பேச முடியவில்லை. குற்ற உணர்ச்சி எப்போதும் அழுத்திக் கொண்டேருக்கிறது. துரோகம் ஒரு கெட்ட ஆவியாய், அவனைப் பீடித்துள்ளது. எப்போதும் அவன் தொண்டையைக் கவ்விப் பிடிக்கிறது. எவ்வாறு இவளுடன் காலத்தை ஓட்டுவது? எவ்வளவு தூரம் போலியாய் வாழ்வது?
       அகல்யா பெரியகோவிலின் உள்ளே பிரவேசித்து புல்வெளியில் உட்கார்ந்து கொண்டாள். இக்காலங்களில் காத்திருப்பது பெரிய துன்பமாயிருந்ததது அகல்யாவுக்கு. பெரியகோவில் பல நூற்றாண்டுகளின் சாட்சி. பல ஆன்மாக்களின் உரையாடல்களைக் அது கேட்டுக் கொண்டேயிருக்கிறது. பல ரகசியங்களை ஒளித்து வைத்துள்ளது. பல்லாயிரக்கணக்கான காதல்களை சுமந்து கொண்டிருக்கிறது. கோடிக்கணக்கான மக்களை கடந்திருக்கிறது. பல காலங்களை செரித்து விட்டிருக்கிறது.
       அகல்யா இந்தத் திருமணம் நல்ல படியாக நடக்கவேண்டுமென விரும்புகிறாள். அதற்காக பல வேண்டுதல்கள் வைத்துள்ளாள். காரியம் கை கூடி வரும்போது ஒரு மரணம் வந்து விட்டது. மரணத்தை யாரால் தடுக்க இயலும்? ஆனால் மரணம் திருமணத்தைத் தடுத்துவிடும் போலுள்ளது. காதலை கை கழுவியாயிற்று. அடுத்து மரணம் குறுக்கே நிற்கிறது. மனம் மூலையில் குற்ற உணர்ச்சியால் தடுமாறுகிறது. அவனின் சோகம்தான் நம்மைத் தாக்குகிறதா? அந்த துன்பம் மரணத்தைக் கொண்டுவரும் சக்தி படைத்ததா? அதுதான் திருமணத்தைத் தடை செய்கிறதா?
       அவனின் சோக முகம் கண்களில் தெரிந்தது. “என்னோட சாபம் உங்கள சும்மா விடாது”, என கடைசி சந்திப்பில் சாபம் கொடுத்தான். அதற்கப்புறம் அவனைப் பார்க்கவில்லை. சாபம் வலிமையுள்ளதா? அது தொடர்ந்து தாக்கும் வல்லமையுள்ளதா? வார்த்தைகளுக்கு அவ்வளவு சக்தியா? இல்லை மனதின் வலிகளுக்கு அவ்வளவு சக்தியா?
       போதாதற்கு அந்தக் கடிதம் வேறு பயமுறுத்துகிறது. அதைப் பற்றி அவள் யாரிடமும் கூறவில்லை. யாரிடம் கூறுவது. அகிலிடமா? வேறு வினையே வேண்டாம். அம்மாவிடமா? அப்பாவிடமா? அவர்கள் பழையபடி அவளைத் திட்ட ஆரம்பித்து விடுவார்கள்? அவள் காதலால்தான் இத்தனை பிரச்சினைகளும். அவள், இவர்களுக்காகத்தான் காதலை தியாகம் செய்தாள். இப்போதுதான் திட்டுதல்கள் சற்று ஓய்ந்துள்ளன.
        இந்த சூழ்நிலையில் அகிலுடன் நான் என்ன காதல் மொழி பேச முடியும்? முடியவில்லை  கடவுளே எனக் கதற வேண்டும் போலிருந்தது.
       அகல்யாவின் செல் அழைத்தது. அகில்தான். எடுத்தாள். அகல்யா ஒரு அவசர வேலை. வரமுடியாது. சாரி, மன்னிச்சுக்கோ, என்றான்.
       அகல்யாவும் சரி என்றாள். காதலின் கோரப்பிடியில் சிக்கியவர்களை பெரியகோவில் எப்போதும் போல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தது. அக்கோபுரம் அகல்யாவைப் பார்த்து சிரிப்பது போலிருந்தது.
       கோவிலிலிருந்து வெளியேறி பேருந்து நிறுத்தத்திற்கு சென்று கொண்டிருந்தாள். குப்பையாய் போன அகழியில் ஒரு பாம்பு நெளிவது, ஏனோ அவள் கண்ணில் பட்டது. அது தலையைத் தூக்கிப் பார்த்தது. சட்டென எதையோ கொத்தியது. அவளுக்கு சுருக்கென்று இருந்தது. ஏன் அப்பாம்பு அவள் கண்ணில் பட வேண்டும்? கண்ணில் படாமல் போயிருக்கலாம் அல்லவா? இது விதியா? கடவுள் செயலா? உலகம் ஒரு திட்டமிடலின் அடிப்படையால்தான் இயங்குகிறதா? மிகவும் குழம்பினாள். பாம்பு அவள் உலகில் நுழைந்து விட்டதாக அவள் உணர்ந்தாள். அவளை பாம்பு குறித்த பயங்கள் பீடித்தன.

Comments

Popular posts from this blog

துப்பறியும் நாவல்களின் காலம் முடிந்துவிட்டதா? அல்லது சுஜாதாவிற்குப் பின் துப்பறியும் நாவல்கள்? ம.ஜோசப்

பாவம் இல்லாதவர் இவள் மேல் கல் எறியட்டும் - ஜோசப் மரியமைக்கேல்.

யூதாஸ் இஸ்காரியோத்தின் நற்செய்தி - ம. ஜோசப்