Who murdered the Wife?


“அவர் கால் தூசிக்கு நீ சமமாக மாட்டாய்”
ம.ஜோசப்

கொடைக்கானலில் அந்தக் கொலை நடந்துள்ளது. குடும்பத்துடன் சுற்றுலா வந்தவர்களில் அந்தப் பெண் மட்டும் கொலை செய்யப்பட்டுள்ளாள். அவள் இரு குழந்தைகளுக்குத் தாய். சொந்த ஊர் மதுரை. அவள் கணவன் ஒரு தனியார் நிறுவனத்தில் எழுத்தராகப் பணி செய்கிறார்.
கொடைக்கானல் காவல் நிலையத்திலிருந்து எஸ்.ஐ.யும் இரு காவலர்களும் அங்கு விரைந்தனர். இரு குழந்தைகளும், அவள் கணவனும் கவலையுடனும், பதட்டத்துடனும் நின்றிருந்தனர். அங்கு ஒரு சிறு கூட்டம் கூடியிருந்தது.
எஸ்.ஐ., பாடி எங்கே? என்றார். ஒதுக்குப்புறமான ஒரு இடத்தைக் அந்தக் கணவன் காட்டினார். அங்கே சென்ற அவர், அதிர்ந்தவராய், அந்தப் பெண்ணின் உடலைப் பார்த்தார். குப்புற படுத்திருந்தாள். தலையின் பின் புறத்தில் ரத்தம் நிறைய வழிந்தோடி கழுத்திலும், தரையிலும் பரவியிருந்தது. அளவுக்கு அதிகமான ரத்தம் வெளியேயிருந்தது. அருகில் ஒரு பெரிய கல் கிடந்தது. அதிலும் ரத்தம் பரவியிருந்தது. பின்புறமாய் யாரோ கல்லால் தாக்கியிருக்க வேண்டும். அதில் நிலை தடுமாறி கீழே விழுந்து, உயிர் போயிருக்கக் கூடும். சலேத்து மாதா கோவிலின் சற்று ஒதுக்குப்புறத்தில் இது நடந்துள்ளது.
என்னிடம் போனில் பேசியது யார்? என்றார் எஸ்.ஐ. ஒரு பாதிரியார் அருகில் வந்தார். சார், நாந்தான் போன் செய்தேன். வேலையாய் கோயிலிலிருந்த போது அழுகை, அலறல் சப்தம் கேட்டு, வெளியே வந்த போது இந்த விபரீதத்தைக் கேள்விப்பட்டு, போன் செய்ததாகக் கூறினார். நேரம் மதியம் 2 மணி இருக்கும்.
அந்த அம்மாளின் கணவன் எங்கே? என்றார். அவர் அருகே வந்தார். பதட்டமாய் இருந்தார். அவரது அருகில் இரு குழந்தைகள். பெண்ணுக்கு 5 வயது. பையனுக்கு 8 வயதிருக்கலாம். அப்பெண்ணின் கணவர் பெயர் மார்டின். அவள் பெயர் ஜான்சி. மதுரையில் பென்னர் இந்தியா கம்பெனியில் கடந்த பத்தாண்டுகளாக வேலை செய்வதாகக் கூறினார்.
பாத் ரூம் போவதாகக் கூறி சென்றதாக கூறினார். நாங்கள் கோவிலில் இருந்ததாகவும், 15 நிமிடம் கழித்தும் காணவில்லையாதலால் வெளியே தேடி வந்ததாகவும், அப்போது தீடிரென ஒரு பெண் கத்திக்கொண்டே ஓடி வந்ததாகவும்,  அவள்தான் கொலையை முதலில் பார்த்ததாகவும் கூறினார்.
அந்தப் பெண் பெயர் டெய்சி. ஊர் திண்டுக்கல். மாதா கோயிலுக்கு வந்ததாகவும், ஒதுக்குப்புறமாய், பாத்ரூம் வந்தபோது, தூரமாய் ஒரு அலறல் கேட்டதாகவும், ஓடிப்போய் அங்கே பார்த்தால், ஒரு பெண் குப்புற வீழ்ந்து கிடந்ததாகவும், அருகில் சென்று பார்த்ததாகவும், அவள் உயிர் இல்லை எனவும் கூறினார். அருகில் யாருமே இல்லை, எனவும் கூறினாள்.
சுற்றியுள்ள பகுதிகள் புதராக இருந்தன. கொலையாளி அந்த புதர்களுக்குள் ஓடி ஒளிந்திருக்கலாம் அல்லது அவைகளினூடாகத் தப்பியிருக்கலாம்.
எஸ்.ஐ., காவலர்களிடம், அவர்கள் கூறியவற்றை ஸ்டேட்மென்ட் எழுதி வாங்கிக் கொள்ளச் சொன்னார். பல வேறு கோனங்கலில் புகைப் படங்கள் எடுத்துக் கொள்ளச் சொன்னார். பிறகு ஏதாவது தடயங்கள் கிடைக்கிறாதா என ஆராயச் சொன்னார். அந்த ரத்தம் படிந்தக் கல்லை எடுத்துக் கொள்ளச் சொன்னார். பின் போஸ்ட் மார்ட்டத்திற்கு பாடியை அனுப்பச் சொன்னார்.
மார்டினிடம் போஸ்ட் மார்ட்டத்திற்குப் பிறகு பாடியைத் தருவதாகக் கூறினார். அவருக்கு யாரிடமும் சந்தேகம் உள்ளதா? என்றார். மார்டின் இல்லை என்றார். விசாரணைக்கு அழைத்தால் வர வேண்டும் என்றார். சம்பந்தப்பட்ட அனைவரிடமும் போன் நம்பர்களை வாங்கிக் கொண்டார். அக்குழந்தைகள் இருவரும் மிகுந்த கலவரத்துடன் காணப்பட்டனர். பெண் குழந்தை அழ ஆரம்பித்தாள். அப்பா, பாட்டி வீட்டிற்குப் போகலாம், என சமாதனம் செய்து கொண்டிருந்தார்.
ஜான்சியின் உடலை போஸ்ட் மார்ட்டத்திற்கு வேனில் ஏற்றினர். அக்குழந்தைகள் கதறியழுதனர். மாதாவைத் தேடி வந்தவர்களுக்கு இப்படியாகிவிட்டதே, என சிலர் வருந்தினர்.
எஸ்.ஐ. சுந்தர், கொலையாளி யாராக இருக்கும்? என யோசித்தவராய் படுத்திருந்தார். கொடைகானலில் கொலை நடந்துள்ளது. அவர்கள் ஊர் மதுரை. அவள் ஏன் இங்கு கொல்லப்பட வேண்டும். யாரேனும் அவளது நகைக்காக கொள்ளையடிக்க வந்து, அதில் நடந்த சண்டையில் கொலை நடந்திருக்கலாம். அந்த இடத்தில் சண்டை நடந்ததற்கான அறிகுறியே இல்லை. நகைகளும் காணாமல் போகவில்லை. இல்லையெனில் யாரேனும் பாலியல் பலாத்காரம் பண்ண முயன்று, அது கொலையில் முடிந்திருக்கலாம். அப்படி ஏதும் அறிகுறி இல்லை. வேறு யார் கொலை செய்திருக்கலாம்?
முன் விரோதம், பகை, பழைய காதலன், கள்ள காதலன், இப்படியேதும் காரணமாக இருக்கலாம். அப்படியெனில் அவளுடன் சம்பந்தப்பட்ட ஒரு கொலையாளி அவர்களைத் தொடர்ந்து வந்திருக்க வேண்டும். முகம் தெரியாத அக்குற்றவாளி யார்? அப்படியெனில் அது திட்டமிட்ட கொலையாகும். ஏதேனும் கொலைக்கான கருவியை அவன் கொண்டுவந்து, காத்திருந்து, சரியான சந்தர்ப்பம் வாய்க்கும் போது கொலை செய்துவிட்டுத் தப்பியிருக்க வேண்டும். ஆனால், இது திட்டமிடப்பட்ட கொலை இல்லை. உறுதியாக இது தற்செயலாக நடந்த கொலை.
அவளுடன் சம்பந்தப்பட்டவர்கள் யார் யார்? கொலைக்கான மோட்டிவ் எது? கொலை நடந்த இடத்தில் இருந்தவர்கள், கொலையைப் பார்த்த டெய்சி, போன் செய்த பாதிரியார், மற்றும் அவளின் கணவனும், குழந்தைகளும். கொலை நடந்த போது யாரும் அந்த இடத்தில் இருந்திருக்கவில்லை. உறுதியாய் இது திட்டமிட்ட கொலையில்லையெனில் இவர்களில் யாரேனும் ஒருவர்தான் கொலையாளி. குழந்தைகளை நீக்கிவிட்டால் பாதிரியார், டெய்சி மற்றும் கணவன். பாதிரியாரையும், டெய்சியையும் தற்செயலாய் அங்கு வந்தவர்கள் என்றால், கணவன்தான் கொலையாளி.
மறுநாள் போஸ்ட் மாட்டம் முடிந்து, அவள் உடலை அடக்கமும் செய்துவிட்டார்கள். கணவனை விசாரணைக்கு கொடைக்கானல் வரவழைத்தார் எஸ்.ஐ. சுந்தர். இதற்கிடையில் ஒரு காவலரை மப்டியில் அவரை கண்காணிக்கச் செய்தார். அவளின் கணவன் மிகவும் கலங்கியவனாய் இருந்ததாகவும், அடிக்கடி கோயிலுக்குச் சென்று அழுததாகவும், குழந்தைகளை தன் தாயின் பாதுகாப்பில் விட்டுவிட்டதாகவும் காவலர் கூறினார். இறந்தவளின் வீட்டினர், அவர் மீது மிகுந்த மரியாதையாய் நடந்துகொள்வதாகவும் கூறியிருந்தார்.
கணவன் பதட்டமாகவே ஸ்டேசனுக்குள் வந்தார். எஸ்.ஐ. அவரை அமரவைத்து அவரது மனைவிக்கும், அவருக்கும் உள்ள உறவைப்பற்றி கேட்டார். அவர் பெரிதாக கூறும்படியில்லையென்றாலும், பிரச்சனையில்லை என்றார். யார் மேலும் சந்தேகம் உள்ளதா? என்றார். அவர் இல்லையென்றார். அப்படியெனில் நீங்கள்தான் கொலை செய்திருக்க வேண்டும்!, அதைக் கேட்ட அவர், தாக்குண்டவராக திணறினார். பின்பு அழ ஆரம்பித்தார். சிறிது நேரம் அழுதபின், கொலை செய்ததை ஒத்துக் கொண்டார். எங்களுக்கு 10 வருடங்களுக்குமுன் திருமணம் ஆகியது. நான் மிகுந்த கனவுகளுடன்தான் வாழ்வை ஆரம்பித்தேன். ஆனால், அவளுக்கு ஏற்கனவே ஒரு காதலன் இருந்துள்ளான். அவன் வேறு சாதி. இவள் வேறு சாதி. அதனால் அவள் வீட்டினர் கட்டாயப்படுத்தி, பழைய காதலை மறைத்து, அதே சாதியான எனக்கு கட்டி வைத்துள்ளனர். ஆரம்பத்தில் அவளது போக்கில் சற்று வித்தியாசம் தெரிந்தது. பின்புதான் எல்லாம் எனக்குத் தெரிய வந்தது. மிகவும் அதிர்ந்தேன். இதனால் எங்களுக்குள் அடிக்கடி சண்டைகள் வரும். அவளுக்கு, அவள் குடும்பத்தினரின் மீது மிகுந்த மரியாதை உண்டு. இரு குடும்பத்தினருக்காக வெளியில் தெரியாமல் எங்கள் பூசலை மறைத்தோம். முதல் குழந்தை பிறந்து விட்டது. இதற்கிடையில் அவளின் காதலன், இவள் நினைவாக இருந்து, இறந்துவிட்டான். இது அவளுக்குத் தெரிந்ததும், மிகவும் குற்ற உணர்ச்சியால் துன்புற்றாள். நானும் எவ்வளவோ சமாதானம் செய்ய முயன்றும், அவளது குற்ற உணர்ச்சியிலிருந்து, அவளை விடுவிக்கவே முடியவில்லை. அவளுடன் தாம்பத்திய உறவு என்பது பாலியல் பலாத்காரம் போன்றதுதான். குழந்தைகளின் பொருட்டாவது, அவள் மனம் மாறும் என நம்பினேன், அதுவும் அவளால் முடியவில்லை. சமீபகாலமாக அவள் பிரமை பிடித்தாற் போல் ஆகிவிடுகிறான். பழைய காதலில் மூழ்கிப் போகிறாள். குழந்தைகளையும் சரிவர கவனிப்பதில்லை. இதனால் எங்களுக்குள் அடிக்கடி சண்டைகள் வந்தன. ஏறக்குறைய இருவரும் இணைந்து வாழ முடியாத ஒரு நிலைக்கு வந்துவிட்டோம். ஆனால், குழந்தைகளின் கதி? அதற்காக அனுசரித்து வாழ்ந்தேன். கோயிலுக்கு வந்தாலாவது அவள் மனம் மாறும், என இங்கு வந்தேன். ஆனால், அவள் இது முன்பு காதலனுடன் வந்த இடம் என இங்கு வந்ததும்தான் தெரியவந்தது.
அவள் மிகவும் உற்சாகமாக இருந்தாள். திடீரெனக் காணவில்லை. குழந்தைகளை ஒரு வயதானவர் பொறுப்பில் விட்டுவிட்டு, அவளைத் தேடிப்போனால், ஒரு ஒதுக்குப்புறத்தில், அவளது பழைய காதல் கவிதைகளை சொல்லிக் கொண்டிருந்தாள். என்னைப் பார்த்ததும்  மிகவும் அதிர்ந்தாள். நான் அவளிடம் கோபமாய் திட்டினேன். அவளின் காதலனையும் ஏசினேன். அவள் மிகவும் கோபமடைந்து, “அவர் கால் தூசிக்கு நீ சமமாக மாட்டாய்”, என்றாள். அதனால் கோபடமடைந்து, வெறியில், அவள் பின்புறம் தாக்கினேன். பின்பு கோயிலுக்கு வந்துவிட்டேன்.

எஸ்.ஐ. மிகவும் கனத்த இதயத்துடன் விலங்கை அவர் கையில் மாட்டினார். அழுது கொண்டிருந்த குழந்தைகள் ஒரு கணம், மார்ட்டினின் கண்களில் வந்து போயினர். 

Comments

Popular posts from this blog

துப்பறியும் நாவல்களின் காலம் முடிந்துவிட்டதா? அல்லது சுஜாதாவிற்குப் பின் துப்பறியும் நாவல்கள்? ம.ஜோசப்

பாவம் இல்லாதவர் இவள் மேல் கல் எறியட்டும் - ஜோசப் மரியமைக்கேல்.

யூதாஸ் இஸ்காரியோத்தின் நற்செய்தி - ம. ஜோசப்