Novel - Chapter 3


பாம்புகள் வந்து கொண்டேயிருக்கின்றன

3

அவர்களது சொந்த ஊரில், சொக்கலிங்கத்தின் இறுதிக் காரியங்களைச் செய்து முடித்தனர். அகில் மொட்டையடித்திருந்தான். ஊரே அழுது, அவரை வழியனுப்பி வைத்தது. சொந்தக் காரர்கள் வந்தும், போய்க் கொண்டும் இருந்தர். சுப்ரமணியனின் தங்கை அருணா அழுது, அழுது ஓய்ந்து படுத்து விட்டாள். அவளது கைக் குழந்தை அடிக்கடி அழுது கொண்டிருந்தது.  மரணத்தின் ரோஜா வாசம் இன்னும் வீடெங்கும் பரவியிருந்தது. ஒரு சிலர், அப்பா இல்லாமல், ஊர், ஊராக இல்லை, என ஆதங்கப்பட்டனர். அவர் காலத்தில் இருந்த ஊர் இப்போது இல்லை, எனக் குறைப் பட்டனர்.
குடும்பத்தினர் ஒவ்வொரும், அவரைப் பற்றிப் பேசிப் பேசி ஆற்றினர். சிலர் குற்ற உணர்ச்சியால் தவித்தனர். அவர்களுள், அவர் மனைவி அலமேலுவும் ஒருவர். அவளுக்கு எதிர்காலம், தனது கடைசி காலம் குறித்து மிகுந்த சஞ்சலம் உண்டாயிருந்தது. நிறையக் கேள்விகள்? குழப்பமான பதில்கள், தனது புதல்வர்கள், அவர்களின் மனைவிகள், அவர்கள் எவ்வாறு நம்மை பாதுகாப்பார்கள்? நாம் இவர்களுக்காக இனி நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும்? நமது இருப்பும், முக்கியத்துவமும் இனி இவர்களுக்கு ஒரு பொருட்டல்ல, என அவள் மனதில் பலவாறாக சிந்தனை ஒடிக் கொண்டிருந்தன. காலம் மிகவும் மாறியுள்ளது. நம் காலம் வேறு; இவர்கள் காலம் வேறு. இக்காலத்திற்கேற்ப இனி நாம் புதிய வேடங்களை அணிந்து கொள்ள வேண்டுமெனவும் அவள் எண்ணிக் கொண்டாள்.
சொத்துக்களைப் பிரிப்பதுப் பற்றி பேச்சு வந்தது. அகில், அது பற்றி யாரும் இப்போது பேச வேண்டாமென, கத்தினான். அலமேலுக்கு சற்று ஆறுதாலாய் இருந்தது. அகிலின் கல்யாணம் வேறு நிச்சயமாகியிருந்தது. இன்னும் மூன்று மாதம் உள்ளது. ஒரு வருடத்திற்கு எந்த சுப காரியங்களும் செய்யக் கூடாது என்பார்கள்? அது வேறு குழப்பாமாயிருந்தது. பெண் வீட்டாருடன் இது பற்றிப் பேச வேண்டும், யார் பேசுவது? பேச வேண்டியவரே இல்லை?
அப்போது திடு திடு வென சிலர் வெளியே ஒடினர். என்ன? என அவளும் எழுந்து பதட்டமாய் ஒடினாள். அவர்கள் ஒரு பாம்பை அடித்துக் கொண்டிருந்தனர். தலையைத் தூக்கி, அவர்களைத் தாக்க சீறியது. அது ஒரு போராட்டம் போலிருந்தது. அதற்கு எந்த பயமில்லை. எல்லா மனிதர்களையும் எதிர்த்தது. புகுந்து, புகுந்துப் புறப்பட்டுப் போரிட்டது. அது ஒரு வீரமான போரட்டம். வீர மரணப் போராட்டம். ஒரு வழியாய் மனிதர்கள் ஜெயித்தனர்.
அனைவரும் ஆச்சரித்துடனும், அதிர்ச்சியுடனும் அப்பாம்பை நோக்கினர். விட்டால் ஒரு பத்துப் பேரையாவது கொல்லும். ஒரு குடும்பத்தையே அழிச்சாலும் அழிச்சிரும். அதன் கோபம் அப்படி. எப்படி இங்கு வந்தது? இவ்வளவு நாளா வீடு பூட்டிக்கிடந்ததால இது வந்து கொல்லையிலே தங்கியிருக்கும். நாம திடீரென அதன் இடத்தை காலி பண்ணதால கோபத்தில வந்திருக்கும்.
நம் வீட்டில் இவ்வளவு நாளும் பாம்பா  குடி கொண்டிருந்தது? பாம்பு வாழும் வீடா நம் வீடு?. அழுகை வந்தது? அது நம்மைக் கொல்லத்தான் வந்ததா? பாம்புகள் துரத்தும் வாழ்க்கைதான் என்னுடையதா? பாம்புகள் துரத்தும் சாபத்தினால் பீடிக்கப்பட்டவர்களா நாங்கள்?, என அலமேலு குழம்பிக் கொண்டிருந்த போது, மருமகள் மங்கை வந்தாள், சுப்ரமணியணை தனியே அழைத்துக் கொண்டு போனாள்.
அவள் கையில் ஒரு கடிதம் இருந்தது. இக்கடிதம் மாமாவின் சட்டப் பையிலிருந்தது. அச்சட்டை அவர் இறந்தபோது அணிந்திருந்த சட்டை.
சாதிக்கு எதிரான போர் தொடங்கி விட்டது. சாதியால் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான  உயிர்களுக்கு பதில் சொல்லும் காலம் வந்து விட்டது. சாதியால் அழிக்கப்பட்ட பிஞ்சுகளின் ஆவிகள் உங்களை சூழ்ந்திருக்கின்றன. உங்களால் கொல்லப்பட்ட காதலர்களின் மூச்சுக் காற்று உங்களைக் எரிக்கும் காலம் வந்து விட்டது. நீங்கள் யாவரும் கொல்லப்படுவீர்கள். சாதிக்கு எதிரான போர் உக்கிரமடைவதை யாரும் தடுக்க முடியாது. மரணத்திற்கு தயாராகுங்கள்.
சுப்ரமணி அதிர்ந்தான். ஏதோ அங்கு வித்தியாசமாக இருப்பதைப் பார்த்த அகில் அங்கு வந்தான். அண்ணன் கையிலிருந்த கடிதத்தைப் பிடிங்கி படித்தான். அவன் முழுமையாகப் படித்த பிறகும் அண்ணனிடம் கூறினான், அண்ணே, அப்பா கொலை செய்யப்பட்டுள்ளார். நாம நினக்கிற மாதிரி அவர் ஹார்ட் அட்டாக்னால சாகல. அவர்கள் பேசியது அம்மாவுக்குத் தெரியாமலிருக்க வேண்டுமென பார்த்துக் கொண்டார்கள்.
அண்ணினிடம் அகில், முதலில் வந்த பழைய கடிதத்தைக் காண்பித்தான். இத ஏன் என்ணிடம் முன்னாடியே காட்டல? என சுப்ரமணியன் அவனைக் கடிந்து கொண்டார். அதனை அவரும் படித்தார்.
உங்கள் குடும்பத்தின் சாபம், உங்களை ஆட்கொள்ளும் நேரம் வந்து விட்டது என்பதை அறியுங்கள். குற்றம் நிரூபிக்கப்பட்டு விட்டது. அதற்கான தண்டணை விரைவில் வழங்கப்படும். பெரியோர் முதல் சிறியோர் வரை யாரும் தயவு தாட்சயமின்றிக் கொல்லப்படுவீர்கள். உங்கள்மேலும், உங்கள் சந்ததியினர்மேலும், கொலைவாள் ஒன்று ஊடுருவப் போகிறது. கரிய இரவு உங்களை ஆக்கிரமிக்கப் போகிறது.

மிகவும் அதிர்ந்தார். கோபம் கோபமாய் வந்தது. ஏதோ சாபம் உள்ளது. நம் குடும்பத்தில் ஏதோ சிக்கல் உள்ளது. பயங்கரம் ஒளிந்துள்ளது. என்ன செய்வது? என திகைத்த போது அவருக்கு அவர் நண்பர்  டாக்டர்.மைக்கேல் நினைவுக்கு வந்தார். நிறைய படித்தவர். சிக்கலான சமயங்களில் அவர் உதவக் கூடியவர். அவரிடம் ஆலோசித்து முடிவெடுக்கலாம் என அகிலிடம் கூறினார்.

Comments

Popular posts from this blog

துப்பறியும் நாவல்களின் காலம் முடிந்துவிட்டதா? அல்லது சுஜாதாவிற்குப் பின் துப்பறியும் நாவல்கள்? ம.ஜோசப்

பாவம் இல்லாதவர் இவள் மேல் கல் எறியட்டும் - ஜோசப் மரியமைக்கேல்.

யூதாஸ் இஸ்காரியோத்தின் நற்செய்தி - ம. ஜோசப்