Pasanga and Marina - Cinemas of Pandi Raj - An analysis

பசங்க மற்றும் வம்சம் படங்களின் இயக்குனர் பாண்டிராஜின் மூன்றாவது படம் மெரினா (பிப்ரவரி 2012). மெரினா கடற்கரை, அனாதைச் சிறுவர்கள், சில விளையாட்டுகள், பெரியவர்கள், அவர்களுக்கிடையேயான உறவு சிக்கல்கள்; இடையே ஒரு காதல்; இவற்றினூடாக பின்னப்பட்ட பல்வேறு நிகழ்வுகளின் யதார்த்தமான ஒரு சித்தரிப்பே மெரினாவாகும்.
நெய்தல் நில மக்களுக்கு கடல் ஒரு தெய்வம்; அவர்களின் ஆதித் தாய்; கடற்கரை வாழ்விடம். குடும்பற்றவர்கள், குடும்பத்தால் துரத்தப்பட்டவர்கள், கைவிடப்பட்டோர், அனாதைச் சிறுவர்கள், சிறுமிகள், ஏழைகள், ஆகியோருக்குப் புகலிடமாக விளங்குவதும் கடற்கரை. குறிப்பாக மெரினா கடற்கரை. மெரினா படமும் இதை அழகாகப் பதிவு செய்கிறது.
கைவிடப்பட்ட ஒரு முதியவரின் பாத்திரம் ஒரு சிறப்பான பாத்திர படைப்பு. அவர்தான் படத்தின் இறுதிகாட்சிகளுக்கு உயிரூட்டுகிறார். அவரது கண்ணீர், நம் கண்களை குளமாக்குகிறது. அவரது மரணம் குறித்த காட்சிகள் படத்தின் அதி அற்புதமான காட்சிகள் எனலாம்.
அதே போல், படத்தில் வரும் தபால் காரரின் பாத்திரம். அது ஒரு மீட்பரைப் போன்றது. இது ஒரு பழைய கதையை நினைவூட்டுகிறது. கிறிஸ்துமஸ் பரிசு வராதா?  என ஏங்கும் ஒரு அனாதைச் சிறுவன், கடவுளுக்கு பரிசு வேண்டி ஒரு கடிதம் எழுதுவான். கடவுள் என முகவரியிட்டு, அவ்வூர் தபால் காரர், அச்சிறுவனுக்கு பரிசு அனுப்புவார். அதே போல்தான், தபால் வராதா என ஏங்கும் கடற்கரைச் சிறுவர்களுக்கு, இத்தபால் காரரும் கடிதமும், பொங்கல் பரிசும் அனுப்புகிறார். இது போன்ற பாத்திரங்கள் உலகில் இருப்பதால்தான் உலகம் இன்னும் அழியாமல் இருக்கிறது.



இன்னொரு சிறப்பம்சமாக இயக்குனர் ஜெய பிரகாஷ் கடற்கரை சிறுவர்களுக்கு ஆற்றும் உரை. அது சிறப்பாக காட்சிப் படுத்தப்பட்டுள்ளது.
சிவகார்திதிகேயனின் இயல்பான நடிப்பைப் பாராட்டலாம். சிறுவர்களின் யதார்த்தமான நடிப்பு. தெளிவானத் திரைக் கதை. காமிரா மொழி போன்றைவையும் பாராட்டுகுறியன.
இப்படி ஒரு கதைகளத்தை தேர்ந்தெடுத்ததற்காகவே இயக்குனரை பாராட்டலாம். குடும்பற்றவர்கள், குடும்பத்தால் துரத்தப்பட்டவர்கள், கைவிடப்பட்டோர், அனாதைச் சிறுவர்கள், சிறுமிகள், ஏழைகள் குறித்து யாருக்கு அக்கறை இருக்கிறது? இவர்களை கதை மாந்தர்களாக உலா வரச் செய்த இயக்குனரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
படத்தில் சொல்லப்படும் காதல் மிகவும் யாதார்த்தமான காதல். ஏறக்குறைய ஒரு நடைமுறை காதலின் (realistic) சித்தரிப்பு என இதைக் கூறலாம். இதை பகடி காதல் எனவும் கூறலாம். ஆனால், இதைச் சொல்ல மெரினா கடற்கரை தேவையில்லை. அந்த கடற்கரை அவர்களில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை.
இவ்வுலகம் ஏழைகளுக்கானதில்லை; எளியோருக்கானதில்லை; வல்லமை குறைந்தோருக்கானதில்லை; அதே நிலைதான் தமிழ் சினிமாவுக்கும். அங்கு ஏழைகளுக்கு இடமில்லை. திரைப்படங்களில் ஏழைகளின் சித்தரிப்பு ஏறக்குறைய இல்லாமல் ஆகிவிட்டது. அப்படியே இருந்தாலும், அவர்கள் ஏழைகளாயிருப்பதில்லை. அவ்வாறு தோன்றுகிறார்கள் அல்லது அவர்கள் சினிமா ஏழைகள். சோகப்படங்களுக்கு இனி எதிர்காலம் உண்டா ? பட்டிண பிரவேசம் போன்ற ஒரு படம் இனி சாத்தியமா? குறைந்த பட்சம் பொற்காலம் போன்ற படங்களாவது வெளி வருமா? எனத் தெரியவில்லை.



படத்தின் காட்சிகள் நகைச் சுவையாகவே கொண்டு செல்லப்படுகின்றன. மிகவும் கனமான ஒரு பின்புலத்தைக் கொண்ட மெரினா படத்திற்கு, இந்த பாணியிலான கதை சொல்லும் முறை சரியானதாக இல்லை, என எண்ணத் தோன்றுகிறது.
சிறுவர்களின் துயரங்கள் அங்கில்லை. கடற்கரை உப்புக் காற்றில் ஒளிந்திருக்கும் அவர்களின் மெல்லிய விசும்பல்கள் அங்கில்லை. அவர்களின் வாழ்க்கைகான போராட்டம் அங்கில்லை. அவர்கள் சிறுநீர் கழித்தும், கிரிக்கெட் போன்ற விளையாட்டுகள் விளையாடியும் திரிகின்றனர்.
பெரியோர்களின் சித்தரிப்பும் அவ்வாறே உள்ளது. அவர்களின் இழப்புகள், வாழ்வின் தோல்விகளுக்கு கடற்கரை இறுதிப் புகலிடமாக மாறவில்லை. மாறாக, அவர்கள் சிறுவர்களுடன் விளையாடிக் கழிக்கினறனர்.
முதல் படத்தின் வெற்றிக்கான சூத்திரத்தை இப்படத்திலும் கையாண்டுள்ளார். பள்ளிக் கூடம், சிறுவர்கள், சில விளையாட்டுகள், பெரியவர்கள், அவர்களுக்கிடையேயான உறவு சிக்கல்கள்; இடையே ஒரு காதல். இதுதான் பசங்க படத்தின் சாரம்.
மெரினா கடற்கரை, அனாதைச் சிறுவர்கள், சில விளையாட்டுகள், பெரியவர்கள், அவர்களுக்கிடையேயான உறவு சிக்கல்கள்; இடையே ஒரு காதல். இது மெரினா படத்தின் சாரம்.
ஆனால், பசங்க படம் ஏற்படுத்திய தாக்கத்தை, பாதிப்பை இப்படம் ஏற்படுத்தவில்லை. ஏனெனில்,  ஒருமுகப்படுத்தப்பட்ட ஒரு கதை, பசங்க படத்தைப் போல், மெரினாவில் இல்லை. அங்கு ஒரு இழை அனைத்தையும் இணைத்தது; இங்கோ, பல இழைகள் பின்னி பிணைந்து கிடக்கின்றன. ஆல்பிரட் ஹிட்சாக், சினிமாவிற்கு ஏற்ற வடிவம் சிறுகதையே, நாவல் அல்ல என்பார். ஆனால், மெரினாவோ பல சிறுகதைகளின் தொகுப்பாக உள்ளது.


கடலும், கடற்கரையும் நம்மில் ஏற்படுத்தும் தாக்கத்தை நாம் பல்வேறான படைப்புகளாக உருவாக்கலாம். அவ்வாறுதான் பாண்டிராஜ் முயற்சித்திருக்கிறார். கடற்கரை அவருள் ஏற்படுத்திய தாக்கத்தை, நமக்குள் இப்படைப்பின் மூலம் கடத்தாத வண்ணம் கதை சொல்லியிருக்கிறார். கடற்கரை ஒரு குறியீடாக (symbol) மாறவில்லை. கடலும் அப்படியே.



கடல் ஒன்றுதான். ஆனால் அதற்கு பல நிறங்கள் உள்ளன. உலகின் நிறங்கள் அனைத்தையும் பிரதிபலிக்கும் தன்மையுடையது கடல். கடற்கரையும் பல நிறங்களையும், குணங்களையும் உடைத்தாய் இருக்கிறது. அதற்கு இருள் உள்ளது; வெளிச்சம் உள்ளது; மாலை மயங்கும் மெல்லிய வெளிர் நிறமுள்ளது. பயங்கரங்கள் அங்கே ஒளிந்துள்ளன; மகிழ்ச்சி அலை அங்கு பொங்குகிறது; சுட்டெரிக்கும் வெயில் உள்ளது. வெயிலில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள் உள்ளன. ஆனால், மெரினாவில் சித்தரிக்கப்படும் கடற்கரை நகைச் சுவை மட்டும்  உடையதாயிருக்கிறது.

Comments

Popular posts from this blog

துப்பறியும் நாவல்களின் காலம் முடிந்துவிட்டதா? அல்லது சுஜாதாவிற்குப் பின் துப்பறியும் நாவல்கள்? ம.ஜோசப்

பாவம் இல்லாதவர் இவள் மேல் கல் எறியட்டும் - ஜோசப் மரியமைக்கேல்.

யூதாஸ் இஸ்காரியோத்தின் நற்செய்தி - ம. ஜோசப்