A.R.Murga Doss - Ezhaam Arivu - An analysis.
இந்தியாவின் ( வியாபர
ரீதியில் பெரு ) வெற்றி பட இயக்குனர் ஏ.ஆர். முருக தாஸ். தீனா, ரமணா, கஜினி ஆகிய தமிழ்
படங்களையும், ஸ்டாலின் என்ற தெலுங்கு படத்தையும், கஜினி என்ற இந்தி படத்தையும் இயக்கியுள்ளவர்
ஏ.ஆர். முருக தாஸ். அவர் கதை சொல்லும்பாணி, அவருக்கேயான தனித்தன்மை வாய்ந்தது. அவரது
காமிரா மொழி அதியசிக்கச் செய்வது, அதிர்ச்சிக்குள்ளாக்குவது, பயமுறுத்துவது, பிரமிப்பூட்டுவது..
ரமணா படத்தில் புகழ் பெற்ற சிறைக் காட்சியில் பெற்றோர்கள் ஒடிவரும் காட்சி ஒரு சிறந்த
உதாரணமாகும். இது போல் பல சிறப்பான காட்சிகளைக் கொண்டது அப்படம். பெரும்பாலும் திரில்லர்
( thriller ) வகைப் படங்களை ஒத்தது அவரது படங்கள். அவரது இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்துள்ள
ஏழாம் அறிவு ( அக்டோபர் 2011 ) திரைப்படம் பற்றி இக்கட்டுரை விமர்சிக்கிறது.
       ஆறாம் நூற்றாண்டைச் சார்ந்த பல்லவ இளவரசரான
போதி தர்மரின், மருத்துவ அறிவையும், தற்காப்பு கலை நுட்பங்களையும், தற்போதைய, அவரின்
வம்சத்தைச் சார்ந்த நிகழ் கால மனிதனுக்கு, அதி நவீன மரபணு பொறியியல் ஆராய்ச்சி மூலம்,
நினைவுக்கு கொண்டு வந்து, நிகழ் கால ஆபத்திற்கு தீர்வளிப்பது, என்பதுதான் படத்தின்
கரு. இதனை வரலாற்று அறிவியல் த்ரில்லர் (Historic Scientific thriller) படம் என்று
கூறலாம்.
       ஒவ்வொரு சிறந்த படைப்பாளியும் வரலாற்றை, தமது
படைப்புகளில் கையாள்கின்றனர். அகிர குரோசேவாவின் இகிரு ( Throne of Blood by
William Shakespeare )                    ,
டான் பிரவுனின் டாவின்ஸி கோட் ( Davinci Code ), ஏஞ்சல்ஸ் அண்டு டிமன்ஸ்
(Angels and Demons),  கமல ஹாசனின் ஹே ராம்,
நாசரின் தேவதை இப்படி பல உதாரணங்களைக் கூற இயலும். ஏ.ஆர். முருக தாஸும் வரலாற்றை இப்படத்தில்
கையாள்கிறார்.
டான் பிரௌனின் நாவலான, டாவின்ஸி
கோட் ( Davinci Code ), விவிலிய வரலாற்றை மையமாக வைத்து, ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையை,
விமர்சித்தது. ஹார்வர்ட் பல்கலை கழக சிம்பலாஜி (Symbology - சின்னங்கள் பற்றிய படிப்பு;
உதாரணம் சோழருக்கு புலி, சேரருக்கு வில், பாண்டியருக்கு மீன்), பேராசிரியர் ராபர்ட்
லாங்டன் என்ற பாத்திரம் இதில் துப்பறியும் பாத்திரமாகும். அது போன்ற ஒரு நாவலை
எழுத, விவிலிய வரலாறு (Biblical History), கத்தோலிக்க திருச்சபை வரலாறு ( History
of Roman Catholic Church ) மற்றும்,  கணினி
அறிவியலில் Cryptology எனும் பிரிவு ஆகியவற்றில் 
ஆழ்ந்த புலமை கட்டாயம் இருக்க வேண்டும். இதே போல், டான் பிரௌனின் இன்னொரு நாவலான
ஏஞ்சல்ஸ் அண்டு டிமன்ஸ் (Angels and Demons)  யும் கூறலாம். (பார்க்க 2 , 3). இவைகள் டாம் ஹேங்க்ஸின்
நடிப்பில் திரைப் படங்களாக வெளிவந்துள்ளன.
இந்த வகையைச் சார்ந்ததுதான்
ஏ.ஆர். முருக தாஸின் ஏழாம் அறிவு படத்தின் கதையும். இதில் பல்லவர் வரலாறு மற்றும் மரபணு
பொறியியல் ( Genetic Engineering ) ஆகியவைகள் கையாளப்படுகின்றன. இதை ஒரு  Science Fiction வகை எனவும் கூற இடமுள்ளது.
இப்படத்தில் நடிகர் சூர்யா
சிறப்பானதொரு நடிப்பை வெளிப் படுத்தியுள்ளார். சர்க்கஸ் கலைஞராகவும், போதிதர்மராகவும்
இரு வித மாறுபட்ட பாத்திரங்களில், தனது முத்திரையை பதிக்கிறார்.
இப்படம், ஏ.ஆர். முருக தாஸின்
பிற படங்களைப் போலல்லாமல், சில இடங்களில் விறுவிறுப்புக் குறைந்து காணப்படுகிறது. குறிப்பாக
இடைவேளைக்கு பிறகு வரும் இரண்டாம் பாகம். ரமணா, கஜினி போன்ற படங்களில் இரண்டாம் பகுதி
மிகுந்த விறுவிறுப்புடன் உள்ளவாறு திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும். இதில் தொய்வு உள்ளது
உண்மை. 
ஒரு சில தவறான காட்சியமைப்புகள்
உள்ளன. ஒன்றரையாண்டு காலமாக, கதாநாயகனைப், அவனுக்குத் தெரியாமல் ஆய்வு செய்யும் கதாநாயகி,
பொருட்காட்சியில், அவளை பின் தொடரும் அவனை பற்றி, ஏதும் தெரியாதவள் போல், தோழியிடம்
போட்டோக்களைப் பற்றிக் கூறும் காட்சி. 
அடுத்தது, ஆறாம் நூற்றாண்டில்
வாழ்ந்த போதி தர்மரின், மருத்துவ குறிப்புகள் ஒரு புத்தக வடிவில் காட்டப்படுவது. 16-ம்
நூற்றாண்டு வரை தமிழ் நாட்டில், எல்லாமே ஒலைச் சுவடிகளாகத்தான் இருந்தன. புத்தகம் போன்ற
ஒரு அமைப்பே, கிறிஸ்துவ பாதிரியார்களின் வருகைக்குப் பிறகே, தமிழகத்தில் பழக்கத்திற்கு
வருகிறது (பார்க்க 1). மேலும் அந்நூல் அரசு அருங்காட்சியகத்தில் இருப்பதாக காட்டுவது.
அதனை கதாநாயகி குறிப்புக்காக எடுத்துச் செல்லுவது. கதாநாயகியால் அதனை வாசிக்க முடியாது.
ஏனெனில் அக்கால தமிழெழுத்துக்கள் வேறு, நம் கால தமிழெழுத்துக்கள் வேறு. தேர்ந்த தொல்லியல்
வல்லுநர்களால் மட்டுமே அதை வாசிக்க முடியும். 11ஆம் நூற்றாண்டு சோழர்கள் கால தமிழை
(தஞ்சை பெரிய கோவிலில் உள்ள கல்வெட்டுகள்), ஒரு தொல்லியலாளரின் துணை கொண்டே நான் வாசித்தேன்.
மேலும் பல்லவர் கால தமிழ் மிகவும் பழமையானது. பல்லவர்கள் காலத்தில் தமிழுக்கு உரிய
அங்கீகாரம் இல்லை என்பதே வரலாற்று உன்மை. அது இரண்டாம் நிலை மொழியே அக்காலத்தில், பல்லவர்கள்
தமிழர்களா ? என்பதுவும் ஒரு கேள்விக் குறியே!. (பார்க்க 4, 5).
அடுத்தது மரபணு பொறியியல்
ஆராய்ச்சிப் பற்றியது. படத்தில் கூறப்படும் மரபணு மீட்டுருவாக்கம் உண்மையில் சாத்தியமா?
அது ஒரு கற்பனை மட்டும் தானா? இதுதான் படத்திற்கு மிகப்பெரிய பலவீனம். ஆனால், அதுதான்
படத்தின் கரு. மிகவும் லாஜிக்கான கதைகளுக்குச் சொந்தக்காரரான ஏ.ஆர். முருக தாஸ், ஏன்
இப்படி ஒரு லாஜிக் இல்லாத (illogic) கதையை எடுத்தார்? என புரியவில்லை. ஹாலிவுட் படங்கள்
இவ்வாறுதான் எடுக்கப்படுகின்றன, என்றாலும், இது ஒரு ஆங்கிலப் படமில்லையே, தமிழ் படம்தானே!
நம் தமிழ் ரசிகர்கள் இதை எவ்வாறு எடுத்துக் கொள்வார்கள்? என, ஏன் இயக்குனர் சிந்திக்கவில்லை.
ஹாலிவுட் படங்களில் லாஜிக் இல்லாத கதையை மிகவும் லாஜிக்காக எடுப்பார்கள்; நம்மவர்கள்
மிகவும் லாஜிக்கான கதையை லாஜிக்  இல்லாமல் எடுப்பார்கள்.
அடுத்தது தமிழ் பற்றியது.
இயக்குனருக்கு தமிழுணர்வு மிகவும் உள்ளது. அதை நாம் வரவேற்போம், பாராட்டுவோம், பெருமை
கொள்வோம். ஆனால், அதுதான் அவருக்கு சிக்கலாகி விட்டது இப்படத்தில், எனத் தோன்றுகிறது.
அதனால் உணர்ச்சிவசப்பட்டு விடுகிறார் இயக்குனர். அதனால் அவ்வப்போது பேச ஆரம்பித்து
விடுகிறார் (கதா நாயகன் மூலம்) உதாரணமாக போதி தர்மர் பற்றி  யாருக்கு தெரியும்? என கேக்கப்படும் காட்சிகள்.
கதை போய்க்கொண்டிருக்கும் போது, இடையில் சன் நியூஸ் பார்ப்பது போலாகி விடுகிறது. மேலும்,
அவ்வப்போது உணர்ச்சி பொங்க கதாநாயகன் பேசுவது. படம் முடிந்தவுடன் வரும் கதா நாயகனின்
நேர் காணல், போன்றவைகள் தேவையில்லை என்றே தோன்றுகிறது. இது போன்றவைகள் விஜயகாந்தின்
ரமணாவில் கூட இல்லை.
       அவரது மிகுதியான தமிழுணர்வால், நவக்கிரகம்,
பஞ்சாங்கம் போன்றவைகள், பண்டைய தமிழர்களின் அறிவியல் ( பிரதிகள் ) உண்மைகள் என்கிறார்.
எவ்வாறு நவீன அறிவியல் முற்றிலும் நம்பகமானது என்பது உண்மையில்லையோ, அதுபோல்தான் பழைய
கோட்பாடுகள், பண்பாட்டு பழக்க வழக்கங்கள் எல்லாம் அறிவியல் என்பதுவும். 
       போதி தர்மர் பற்றி நாம் கேள்விப்படும் போது
நாம் உண்மையில் சிலிர்த்துப் போகிறோம். மகிழ்கிறோம். பெருமை கொள்கிறோம். நமக்கு திமிர்
வரும் என்கிறார், இயக்குனர். உண்மைதான். ஆனால், இப்போதுள்ள தமிழனின் நிலை என்ன? எனும்
போது மிகவும் அவமானமாகி விடுகிறது. அன்றைய தமிழ்ச் சமூகம் போதிதர்மரை உருவாக்கியது.
இப்போதைய தமிழ்ச் சமூகம் யாரை உருவாக்கிறது? அது பெருமைகொள்ளும் நிலையிலா உள்ளது? 
காலங்காலமாக
தாழ்த்தப்பட்ட சாதியினர் ஒடுக்கப்பட்டு வருகின்றனர். அவர்களின் உரிமைகள்
மறுக்கப்படுகின்றன. உயர் சாதியினரின் தயவில்தான் இவர்கள் வாழ வேண்டும். அவர்களது
உரிமை, ஆசா பாசங்கள், காதல் எல்லாமே உயர் சாதியினர்தான் நிர்ணயிக்க வேண்டும் என்பதுதான் உண்மை நிலை. தமிழகத்தில் பொதுவாக மதக் கலவரங்கள் இல்லையெனினும்,
சாதி கலவரங்களுக்கு குறைவில்லை. தமிழர்கள் தங்களை சாதி ரீதியாகத்தான்
அடையாளப்படுத்திக் கொள்கின்றனர். குறிப்பாக தென்மாவட்டங்களில் இது அதிகம். தென்
மாவட்டங்களில் சாதி ஒவ்வொரு புள்ளியிலும் வெளிப்படையாக செயல்படுவதை அறியமுடியும்.
அவர்களின் அன்றாட வாழ்வில் சாதி ஒரு மிக முக்கிய அங்கமாகும். இதில் ஒடுங்கும்
சாதியும், ஒடுக்கும் சாதியும் அடங்கும்.
ஊழல்
எங்கும் மலிந்து உள்ளது. உலகிற்கு இதில்தான் நாம் முன்னோடிகளாக இருக்கிறோம். நேர்மையற்ற
தன்மை அனைவரிடமும் குடி கொண்டுள்ளது. நம் அரசியல் தலைவர்களைப் பற்றி சொல்லவே தேவையில்லை.
இளைஞர்கள்
குடி, பான் பாரக்கு என சீரழிந்து கொண்டிள்ளனர். அவர்கள் போகும் பாதை குறித்து மிகுந்த
அச்சமே நிலவுகிறது. 
குடும்ப
உறவுகள் மிகவும் சீரழிந்து போய்க்கொண்டிருக்கின்றன. கள்ள காதல்கள் சமூகத்தில் பெருகி
வருகின்றன. சிந்து சமவெளி படம் ஒரு சிறந்த உதாரணம். அதற்கு அடுத்த வந்த, அது  மாதிரியான ஒரு திரைப்படத்திற்கு மாலை மலரில் வந்த
ஒரு விளம்பரம், “இது ஒரு கள்ள காதல் கதை”, இதை என்னவென்று சொல்ல? பெருகி வரும் கள்ள
காதல்களால் அனாதைகளாகும், கொல்லப்படும், சமூக விரோதிகளாகும், குழந்தைகள் மிக அதிகமாக
பெருகி வருகின்றனர். இதுதான் இன்றைய தமிழரின் நிலை. அன்றைய தமிழர் பற்றி பேசுவதால்
என்ன பலன்?  என்பதே இப்போதுள்ள கேள்வி. குடும்பமாக
தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருகிறது.
படம்
முடிந்தவுடன் வரும் கதா நாயகனின் நேர் காணலில் குறிப்பிடப்படுவது: “ஆராய்ச்சியால் மட்டுமல்ல,
நமது முயற்சியாலும் போதிதர்மர்களை நாம் உருவாக்க முடியும்”. இதுதான் இப்படத்தின் செய்தியாக
இருக்கமுடியும், என நான் திடமாக நம்புகிறேன்.
சான்று பட்டியல்
- ஆ.இரா.
     வேங்கடாசலபதி, நாவலும், வாசிப்பும், காலச்சுவடு பதிப்பகம், 2002.
- Dan Brown, Da Vinci Code, Doubleday, 2003.
- Dan Brown,
     Angels and Demons, Pocket books, 2000.
- சோம. இளவரசு, இலக்கிய
     வரலாறு, மணிவாசகர் பதிப்பகம், 1998.


 
Comments