இயக்குனர் வசந்த பாலனின் சினிமா - ஆய்வு.
ஆல்பம், வெயில் மற்றும் அங்காடித் தெரு படங்களின் இயக்குனர் வசந்த பாலனின்
நான்காவது படம் அரவாண் (மார்ச்-2012). தமிழுக்கு
புதிய கதைகளம். யாரும் சித்தரிக்காத கிராமத்து வாழ்வு. புதுமையான கேமிரா கோணங்கள்.
இப்படி இப்படத்தின் பல சிறப்புகளைக் கூறிக் கொண்டே போகலாம். அவரது மற்ற எல்லாப்
படங்களையும்விட மிக சிறப்பான தொழில் நுட்ப நேர்த்தியுடன் அமைந்துள்ளது, இப்படம் என்றால்,
அது மிகையில்லை.
களவையே தொழிலாகக் கொண்ட கள்ளர் நாட்டின்  ஒரு ஊரில் (வேம்பூர்) வசிக்கும் பசுபதி (கொம்பூதி)
கொத்து என அழைக்கப்படும் குழுவினருடன் களவுக்குச்
செல்பவர். களவு பற்றிய அனைத்து நுட்பங்களும் தலைமுறை தலைமுறையாக அவர்களுக்கு சொல்லித்
தரப்படுகிறது. களவிலும் சில விதி முறைகள், தொழில் தர்மங்கள் உள்ளன. கருப்பன் அவர்கள்
தெயவம். 
மாத்தூர் என்ற கிராமத்திற்கும், சின்ன வீரம்பட்டி
என்ற கிராமத்திற்கும் பரம்பரைப் பகை. மாத்தூர் கிராமத்து வாலிபர்கள் ஆதியின் (வரிப்புலி)
தலைமையில் காவல் பணி செய்பவர்கள். இந்த சூழ்நிலையில் சின்ன வீரம்பட்டி கிராமத்தைச்
சார்ந்த ஒரு இளைஞன் மாத்தூரில் கொலை செய்யப்படுகிறான். இரண்டு கிராமங்களுக்கிடையே சண்டை
நிகழாமலிருப்பதற்காக, ஆதி பலியாளாக தெரிவு செய்யப்படுகிறான். 
ஆதி உண்மையைக் கண்டறிந்தும் நிருபிக்க முடியாமல்
போகவே, இந்தத் தண்டணையிலிருந்து தப்பிக்க, ஒளிந்து வாழும்போது, பசுபதியின் கிராமத்திற்கு
வந்து, களவு செய்யும் கொத்தில் இணைகிறார். இதற்கிடையே வேறொரு மாத்தூர் கிராமத்து வாலிபர்,
திருமுருகன் (களவாணி பட வில்லன்) ஆதிக்குப் பதில் பலியிடப்படுகிறார். 
ஒரு சந்தர்ப்பத்தில், ஆதியை பற்றிய உண்மை
வெளிப்படவே, சின்ன வீரம்பட்டி கிராமத்தினர் பிடித்துச் சென்று பலியிடுகின்றனர். சாகும்
முன், தன் மகனை காவல் புரிபவனாக வளர்க்க வேண்டும்மென, பசுபதியிடம் வேண்டுகிறார், ஆதி.
18 ஆம் நூற்றாண்டில் கதை நடப்பதாகக் கூறப்படுகிறது.
2011ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகடமி விருது பெற்ற, சு. வெங்கடேசனின் நாவலான காவல் கோட்டத்தின்
ஒரு அதிகாரத்தினை ( chapter ) அடிப்படையாகக் கொண்டது இப்படத்தின் கதை. மேலும், இப்படத்தின்
அடிப்படையான கரு மெல் கிப்சனின் அப்போகிளைப்டா ( Apocalypto )                  படத்தின் கதையை போலும் உள்ளது. கூடுதலான கதையையும்
(additional story), திரைக் கதையையும் வசந்த பாலன் அமைத்துள்ளார். நாவலாசிரியரான சு.
வெங்கடேசன் வசனம் எழுதியுள்ளார்.
கும்பினியார்கள் என்றழைக்கப்படும்  ஆங்கில கிழக்கிந்தியக் கம்பெனியினர் தென் தமிழகத்தில்
ஆட்சியைப் பிடிக்க பாளையக்காரர்களுடன் போரிட்டுக் கொண்டிருந்த கால கட்டம். பூலித்தேவன்,
மருத நாயகம் என்றழைக்கப்படும்  கான்சாகிப்,
வீரபாண்டிய கட்ட பொம்மன், ஊமைத்துரை மற்றும் மருது சகோதரர்களின் கால கட்டம் தான்
18ஆம் நூற்றாண்டு. கி.பி.1799, அக்டோபர் 16-ல் கயத்தாரில் வீரபாண்டிய கட்ட பொம்மன்
கும்பினியாரால் தூக்கிலிடப்பட்டார்.  ஐரோப்பிய
கிறிஸ்துவ பாதிரியார்கள் சமய பரப்பு பணியில் ஈடுபட்டிருந்த காலக் கட்டமும் அது. இந்த
சமகால பதிவுகள், ஏன் குறிப்புகள் கூட இல்லாமல், படம் தனித்துப் பயணிக்கிறது. 
 படத்தின் அனைத்துப் பாத்திரங்களும் தற்போதைய கால
தமிழைப் பேசுகிறார்கள். 18ஆம் நூற்றாண்டில் இப்படித்தான் மக்கள் தமிழ் பேசினார்களா?
எனத் தெரியவில்லை. இதே போன்ற விமர்சனத்தை எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன், காவல் கோட்டம்
நாவலுக்கான விமர்சனத்திலும் (www.keetru.com) (February 2009) கூறியுள்ளார். அக்கால
கட்டப் படங்களாக வீரபாண்டிய கட்ட பொம்மன், சிவகங்கைச் சீமை போன்றவற்றைக் கூறமுடியும்.
பசுபதி மற்றும் ஆதி அவர்களின் இனத்தவர்களின்
உடைகள் சங்க கால தமிழர்கள் போலுள்ளது. கி.மு.10000 ஆம் ஆண்டு பழங்குடியினரைப் போல அவர்கள்
சித்தரிக்கப்பட்டிருப்பதாக தி ஹிண்டு (The
Hindu) நாளிதழில் (4.3.2012) இப்படத்திற்கான விமர்சனத்தில் குறிப்பிடப்படுகிறது.
அரவாண் மகாபாரதத்தில் (மக்களுக்காக) பாண்டவர்களின்
வெற்றிக்காக பலியிடப்படும் ஒரு பாத்திரம். காவிரி ஆறு வெட்டப்படும் போது கர்நாடாக
(கரி நாடு; கரி - யானை) தேசத்து இளவரசி தன்னை பலியிட்டுக் கொண்டதாக ஒரு கதை கூறப்படுகிறது.
மருது சகோதரர்கள் கட்டிய காளையார் கோவிலுக்காக அதன் தலைமை ஆசாரி தன்னைப் பலியிட்டுக்
கொணடதாகவும் கூறப்படுகிறது. இப்படி மனித பலிகள் பற்றி வரலாறு நெடுக நாம் பலவற்றைக்
காண இயலும். இயேசு கிறிஸ்துவும் மக்களுக்காக பலியிடப்பட்டவரே. 
இந்த வகை மனித பலி பற்றியதுதான் வசந்த பாலனின்
அரவாண் மற்றும் மெல் கிப்சனின்  அப்போகிளைப்டா
போன்ற படங்கள். 
ஆதி முதலில் ஒரு காவலாளி. பின்பு தனியே களவு
(இராஜ களவு) செய்பவர். அதன் பின்பு பசுபதியின் கிராமத்திற்கு வந்து, களவு செய்யும்
கொத்தில் இணைகிறார். சிறப்பாக களவு செய்கிறார்.
இறுதியில் ஒரு மீட்பரைப் போல பலியிடப்படுகிறார். ஆதி ஒளிந்து வாழும் போது தாடியுடன்
உள்ள  அந்தத் தோற்றம் ஒரு மீட்பரைப் போலுள்ளது.
அவர் பலியிடப்பட அழைத்துச் செல்லப்படும்
காட்சிகள், கிறிஸ்துவை பலியிடுவது போல் சித்தரிக்கப்படுள்ளன. இது, ஆதிக்குப் பதில்
பலியிடப்பட்ட மற்றொரு இளஞரைப் (திருமுருகன்) போலில்லாமல், புனிதத் தன்மை வாய்ந்ததாக
காட்டப்படுகிறது. உ.ம். ஆதியின் கைகளில்
கழுமரத்தை கட்டி மலையில் ஏறச் செய்வது. ரோம பேரரசில் மரணதண்டனை பெற்றவர்கள், அவர்கள்
அறையப்படப் போகும் சிலுவை (கழு) மரத்தை சுமந்து செல்ல வேண்டும். அது ரோமர்களின் வழக்கம்.
இங்கு ஏன் இயக்குனர் அதைச் செய்ய வேண்டும்? 
இறுதிக் காட்சிகள் வலிந்து உருவாக்கப்பட்டவையாகத்
தோன்றுகின்றன, என தி ஹிண்டு நாளிதழ் விமர்சனமும்
கூறுகிறது. 
வசந்த பாலன் களவின் மேன்மைகளை சிறப்பாக காட்சிப்
படுத்துகிறார், மேலும் களவை தொழிலாகச் செய்து வாழ்பவர் அரவாணாக முடியும் எனவும் கூறுகிறார்.
இவைகளை ஏற்றுக் கொள்ள முடியுமா?. 
ஊருக்காக, மக்களுக்காக, கோவிலுக்காக, வெற்றிக்காக
இப்படி ஒரு நல்ல காரியத்திற்கு குற்றமறியா ஒரு உயிர் பலியிடப்படுவதுதான் அரவாணாகும்
செயல், என அறிய முடிகிறது. இராஜ களவு முதல் அனைத்துக் களவுகளையும் செய்யும் ஒருவர்
எவ்வாறு அரவாணாக முடியும்? இறுதிக் காட்சிகள் அப்பாத்திரத்தை குற்றமற்றவராக மாற்ற முயலுகின்றன
என்றால், அது மிகையில்லை. வாழ்நாளெல்லாம் களவு என்பது ஒரு குற்றம் என்று உணராமல், அதை
தொழிலாக செய்பவர், எவ்வாறு அரவாணாக முடியும்? எனத் தெரியவில்லை. 
பொதுமக்கள் அக்காலத்தில் பாளையக்காரர்களால்,
மிக பயங்கரமான வரிச்சுமையால் பாதிக்கபட்டிருந்தனர். பாளையக்காரர்கள் மற்றும் கும்பினியார்களுக்கிடையேயான
போர்கள் மக்களை சின்னாபின்னபடுத்திய காலகட்டம். அத்தகைய துன்பங்களினூடே, அவர்கள் அரும்பாடுபட்டு
சம்பாரித்த தங்கம், வெள்ளி ஆடு, மாடுகள் களவு போகின்றன.  களவினால் பாதிக்கப்பட்ட அந்த அப்பாவிகள்,  பொதுமக்கள், அவர்களின் இழப்புகள், வலிகளை, கண்ணீரை
யார் துடைப்பது? அவர்கள் பற்றிய ஒரு சிறு புள்ளியளவினாலான சித்தரிப்புக் கூட படத்திலில்லை.
அவர்களின் துயரங்கள் ஏன் கருத்தில் கொள்ளப்படவில்லை? அதை விடுத்து களவின் சிறப்புகளை
பறைசாற்றுகிறது படம். பார்வையாளர்கள் படத்தின் விறுவிறுப்பான திரைக்கதை மற்றும் காட்சியமைப்புகளால்
ஒன்றித்துப் போய் களவு ஒரு சிறப்பான தொழில் முறை என்று ஏற்றுக் கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இதை வசந்த பாலனின் வெற்றி என நான் கூறமாட்டேன்.
மற்றபடி சிறப்பான திரைக் கதை, அதி சிறந்த காமிரா மொழி, பசுபதி மற்றும்
ஆதியின் மிகச் சிறப்பான நடிப்பு, கலை ஆகியவற்றிற்காக நாம் அவசியம் பார்க்க வேண்டிய
ஒரு திரைப் படம்தான் அரவாண்.
அங்காடித் தெரு
      இதுவும்
ஒரு காதல் கதைதான். ஆனால் அதற்கான களம், தமிழ் சினிமாவுக்கு  புதிது. காதலர்களுக்கான எதிரி, மற்றைய தமிழ்
படங்களை போலல்லாமல், வறுமையும், காதலர்கள் பணிபுரியும் ஒரு பெரிய நிறுவனமான
துணிக்கடையுமாகும். வசந்த பாலனின் மூன்றாவது படமான, இப்படம், அவரை ஒரு முக்கியமான
திரை இயக்குனராக அங்கீகரிக்க உதவுகிறது. சிறப்பாக அமைக்கப்பட்ட திரைக்கதையினூடே,
நிறுவனம் (முதலாளித்துவம்) எவ்வாறு தொழிலாளர்களை சுரண்டுகிறது என்பதை
பட்டவர்த்தனமாக சித்தரிக்கிறது இப்படம். தொழிலாளர்களின் அவல நிலை, வறுமையின்
காரணமாக அவர்கள் சகித்துக் கொள்ள வேண்டிய கொடுமைகள், அவமானங்கள், மனதை
பிழியவைக்கின்றன.
சிறப்பாக அமைக்கப்பட்ட திரைக்கதையினூடே,
நிறுவனம் (முதலாளித்துவம்) எவ்வாறு தொழிலாளர்களை சுரண்டுகிறது என்பதை
பட்டவர்த்தனமாக சித்தரிக்கிறது இப்படம். முற்போக்கு முகவரியுடன் வந்திருக்கும்
எவ்வளவு தூரம் முற்போக்கானது? என்பதை காண்போம். 
இதன் இயக்குனரின் முந்தைய படமான “வெயிலில்” கதாநாயகனின்
தந்தையை அறிமுகப்படுத்தும்போது, சாதிப்பெயரை வெளிப்டையாகவே குறிப்பிட்டு,
பெருமையாக அறிமுகப்படுத்தப்படுவார். அது, சாதியின் மீதான சாய்வு இயக்குனருக்குள்ளது,
என்பதை தெளிவுபடுத்தும் காட்சி. அப்படத்தின் வில்லன் அண்ணாச்சி எனக் குறிப்பிடப்படுவார்.
அவர் (வில்லன்) சார்ந்த சாதியப்பற்றி வெளிப்டையாக படம் எதுவும் கூறாது, எனினும்
பார்வையாளர்களால் புரிந்து கொள்ள இயலும்.
அங்காடித் தெருவில் காட்டப்படும் நிறுவனம், ஒரு பெரிய
துணிக்கடை. அது  தமிழகத்தில் புகழ் பெற்ற
ஒரு கடையைத்தான் குறிப்பால் உணர்த்துகிறது. இதில் காதலர்களுக்கான எதிரி, மற்றைய
தமிழ் படங்களை போலல்லாமல், வறுமையும், முதலாளித்துவமும் ஆகும். முதலாளித்துவத்தின்
கையாளாக இருப்பது, அண்ணாச்சி என அழைக்கப்படும் கண்காணிப்பாளராகும். அவர்,
கருங்காலி என, அனைத்து தொழிலாளர்களாலும், பட்டப் பெயரால் அழைக்கப்படுகிறார்.
இக்கதாபாத்திர சித்தரிப்பு மூலம், மறைமுகமாக ஒரு சாதிக்கு எதிரான ஒரு நிலையை
இப்படம் எடுத்துள்ளது,  என எண்ணத்
தோன்றுகிறது. அவர் (வில்லன்) சார்ந்த சாதியப்பற்றி வெளிப்டையாக படம் எதுவும்
கூறாது, எனினும் பார்வையாளர்களால் புரிந்து கொள்ள இயலும்.
முதலாளித்துவத்தின் கொடுமைகளை உணர்த்த,
மறைமுகமாக ஒரு சாதியை பயன்படுத்தியிருப்பது, எவ்வளவு தூரம் முற்போக்கானது?, எனத்
தெரியவில்லை.  இயக்குனர் சாதியை தாண்டி
சிந்திக்கவில்லை, என்பதை தெளிவாக, அவரது இரு படங்களும் உணர்த்துகின்றன.
 தமிழகத்தில் பொதுவாக மதக் கலவரங்கள்
இல்லையெனினும், சாதி கலவரங்களுக்கு குறைவில்லை. தமிழர்கள் தங்களை சாதி
ரீதியாகத்தான் அடையாளப்படுத்திக் கொள்கின்றனர். குறிப்பாக தென்மாவட்டங்களில் இது
அதிகம். தென் மாவட்டங்களில் சாதி ஒவ்வொரு புள்ளியிலும் வெளிப்படையாக செயல்படுவதை
அறியமுடியும். அவர்களின் அன்றாட வாழ்வில் சாதி ஒரு மிக முக்கிய அங்கமாகும். இதில்
ஒடுங்கும் சாதியும், ஒடுக்கும் சாதியும் அடங்கும். தென் மாவட்டங்களை களமாகக்
கொண்டு படம் எடுக்கும் எவரும், சாதியை தவிர்ப்பது என்பது கடினம்.  இது அனைத்து தமிழக மாவட்டங்களுக்கும் ஒரளவு
பொருந்தும். கமலஹாசனின் விருமாண்டி போன்ற படங்கள் தென் மாவட்டங்களில் மிக
வெற்றிகரமாக ஓடியது. காரணம் யாவரும் அறிந்ததே, “சாதி”. ஆகவேதான், நமது
இயக்குனர்களும் ஒரு குறிப்பிட்ட சாதியை நேரடியாகவோ, மறைமுகவாகவோ ஆதரித்து படம்
எடுக்கிறார்கிறார்கள். மேலும், ஒரு குறிப்பிட்ட சாதியினரின் அங்கீகாரமும், ஆதரவும்
கூட காரணமாகலாம்.
எப்படியிருப்பினும் நாம் சாதியை மீறி படமெடுக்க
பல வெளிப்புற தடைகள் உள்ளன. மேலும், நம் இயக்குனர்களுக்கு அகத் தடைகளும்
இல்லாமலில்லை. இவைகள் களையப்படும்வரை, நம் திரைப்படங்களில் சாதி நேரடியாகவும்,
மறைமுகமாகவும் ஆதரிக்கப்பட்டு வருவதை தவிர்க்க இயலாது. 
கட்டுரையாளர் ஆய்வு நோக்கில்தான் இப்படங்களை
அணுகியுள்ளார். அவர் எந்த சாதிக்கும் ஆதரவாளரும் இல்லை, எதிர்ப்பாளரும் இல்லை.
வாசகர்கள் ஆய்வு நோக்கில் மட்டுமே இக்கட்டுரையை அணுகும்படி கட்டுரையாளர்
வேண்டுகிறார்.
நண்பர் ஜெய மோகன் தான் வசனம். ஒரு சில இடங்களில் அது தெரிகிறது. மிகச்சிறப்பான ஒளிப்பதிவு. நடிகர்கள் சிறப்பாக நடித்துள்ளனர்.
ம. ஜோஸப்.
காவியத்தலைவன் (நவம் – 2014) நாசர், சிதார்த், ப்ரித்வி ராஜ், வேதிகா, தம்பி ராமையா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்க, எழுத்தாளர் ஜெய மோகனின் வசனத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், வசந்த பாலனின் இயக்கத்தில் வெளி வந்திருக்கும் படமாகும். பாய்ஸ் நாடக கம்பெனிகள் தமிழ் நாட்டில் கோலோச்சிய காலத்தின் (ஏறக்குறைய 1870 - 1930) கதை நடக்கிறது. (படத்தில் காலம் பற்றி தெளிவாக ஏதும் கூறப்படவில்லை;)
அக்காலத்தில் அப்படி இருந்த ஒரு பாய்ஸ் கம்பெனி போல ஒரு புனைவு (கற்பனை எனக் கொள்ளலாம்) டிராமாக் கம்பெனி தான்  படத்தின் கதைக் களம். அதன் மாந்தர்கள்தான் படத்தின் கதா பாத்திரங்கள். ஒரு சில மாந்தர்களும் அக்காலத்தின் வாழ்ந்த மனிதர்களின் புனைவாகத்தான் படைக்கப்பட்டுள்ளனர். சங்கர தாஸ் சுவாகிகள், எஸ்.ஜி. கிட்டப்பா, கே.பி. சுந்தராம்பாள் போன்றோர்கள் வாழ்ந்த கால கட்டம். படத்தின் சில புனைவு பாத்திரங்கள் சிவ தாஸ் சுவாமிகள், காளியப்பா, வடிவாம்பாள்.
வசந்த பாலன் நிறைய இப்படத்திற்கு உழைத்துள்ளார். படித்திருக்கிறார். வரலாற்றை மீள் உருவாக்கம் செய்யும் அவரது எண்ணம் போற்றுதலுக்குறியது, அதன் மூலம் வரலாற்றில் புதிய வெளிச்சங்களை நாம் கண்டடையலாம். 
நண்பர் ஜெய மோகன் தான் வசனம். ஒரு சில இடங்களில் அது தெரிகிறது. மிகச்சிறப்பான ஒளிப்பதிவு. நடிகர்கள் சிறப்பாக நடித்துள்ளனர்.
வரலாற்றில் புனைவுகளை உருவாக்கும் போது சில வரலாற்று உண்மைகளை உண்மையாகவே கூறவேண்டும். 1947 –ல் இந்தியா விடுதலைப் பெற்றது என்பது ஒரு புனைவாக மாறமுடியாதது என்பது போல்தான், மற்ற வரலாற்று நிகழ்வுகளும். மகாத்மா காந்தி மதுரைக்கு வந்து (21.09.1921), அங்குள்ள மேலாடையற்ற விவசாயிகளைப் பார்த்து மனம் வருந்தி, இனி மேலாடை அணிவதில்லை என்ற முடிவை எடுக்கிறார். படத்தில் காந்தியின் மதுரை வருகை காண்பிக்கப்படுகிறது. அதில் அவர் மேலாடையின்றியே வருகிறார். காலத்தின் பிற்பாடு எடுக்கப்பட்ட காட்சியாக அது படுகிறது. படத்திற்கும் காந்திக்கும் சம்பந்தமேயில்லை. அந்த காட்சி தேவையுமில்லை.
மிக முக்கியமாக பகத்சிங் தூக்கிலிடப்பட்டது 1931.  எஸ்.ஜி. கிட்டப்பா மறைந்தது 1933. அக்கால கட்டத்தில் பகத்சிங் குறித்த நாடகங்கள் நடத்தப்பட வில்லை. அக்காலத்தில் பகத்சிங் நாடக பிரதியாகவே மாறவேயில்லை. படத்தின் கிளைமாக்ஸ் பகத்சிங் நாடகத்தை மையமாக வைத்தே எடுக்கப்பட்டுள்ளது. பெரியதோர் கால குழப்பமே மிஞ்சுகிறது. கிளைமாக்ஸ் சிவாஜி நடித்த ராஜ பார்ட் ரங்க துரையை நினைவு படுத்துகிறது. அது கம்பெனி ட்ராமாக்களின் அழிவைப் பேசியது. சினிமா தனது பரந்த, இராட்சசக் கரங்களில் 
கதையைப் பற்றி பெரிதாக வசந்த பாலன் மெனக்கிட வில்லை என்றே தோன்றுகிறது. வெயில் படத்தின் கதைதான், ஏறக்குறைய இப்படத்தின் கதையும். பாய்ஸ் டிராமாக் கம்பெனி பின் புலத்தில் வெயில் கதையை எடுத்துள்ளார்கள். அண்ணன், தம்பி, காதலி இறந்து போதல், கொட்டகை மூடப்படுதல், ஒருவர் பலியாதல். இது எனக்கு மிகுந்த ஏமாற்றத்தைத் தந்தது. பாத்திர படைப்பு எதுவும் மனதில் நிற்கவில்லை. எந்த பாத்திரமும் சரியாக வார்க்கப்படவில்லை. மனதைத் தொடும் காட்சிகள் ஏதுமில்லை எனவும் கூறலாம்.
படத்தில் நிறைய தவறுகள் உள்ளன. குறிப்பாக பாத்திரங்கள் பேசும் மொழி நமது சம காலத்திய மொழி. இசையும் அப்படித்தான். படத்தோடு ஒட்டாத, சம்பந்தமில்லாத ஒரு இசை. நிறைய இடங்களில் உடைகளும் சம காலத்திய உடைகளாக உள்ளன. காளியப்பாவிற்கும் ஜமீந்தார் பெண்ணுக்கும் இடையேயான காதல் காட்சிகள் முழுதும் மிகவும் நவீனமாக உள்ளது. குறிப்பாக சண்டிக்குதிரை பாடலும், நடனமும். காலத்தை மீறிய புனைவுகள் எனலாம்.
நாடக அரங்க அமைப்பு முற்றிலும் அக்காலத்திலிருந்து வேறு படுகிறது. அரங்கில் ஒரு மைக் கூட இல்லை. மைக் முன்புதான் பாத்திரங்கள் பேசுவர். அரங்கில் ஒரு இசைக் குழுவினர் இருப்பர். அவர்களும் படத்தில் இல்லை. லைட்டிங் சாதனங்கள் ஏதுமில்லை. சில அரிகேன் விளக்குகளை வரிசையாக முன்புறம் வைத்துள்ளனர். அக்காங்களில் பாடப்பட்ட நாடகப் பாடல்கள் ஒன்றும் பாடப்பட வில்லை. சம்பந்தமில்லாத ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்களை பாடுகிறார்கள். ஒரு சில பாரதியார் பாடல்கள் கூட பாடுகிறார்கள்.
சுதேசி கருத்துக்கள், மற்ற நாடகங்களில் சில பாத்திரங்களின் வழியாக குறிப்பால் தான் உணர்த்தப்பட்டன. உதாரணமாக “ வெள்ளைக் கொக்கு பறக்குது பறக்குது பாரீர்” என மதுர கவி பாஸ்கரதாஸ் பாடியதாக படித்துள்ளேன். படத்தில் காட்டப்படுவது போல் சுதேசி நாடகங்கள் அக்காலத்தில் நடிக்கப்படவில்லை என்பதுதான் உண்மை.
வரலாற்றில் புனைவுகளை உருவாக்கி படமெடுத்து வெற்றி பெறுவதற்காக வசந்த பாலன் நிறைய உழைக்க வேண்டும். இவ்வகைக்கு டைட்டானிக் படம் ஒரு சிறந்த உதாரண்மாகும்.
ம. ஜோஸப்.







 
Comments