Cinemas of Sarkunam - An Analysis

சற்குணத்தின் வாகை சூட வா (அக்டோபர் 2011) படம் தமிழில் ஒரு முக்கியமான திரைப்படம் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. தமிழுக்கு புதிய கதைகளம். யாரும் சித்தரிக்காத கிராமத்து வாழ்வு. புதுமையான கேமிரா கோணங்கள். யதார்த்தமான கதை சொல்லல், யதார்த்தமான கிராமத்து மக்கள், இப்படி இப்படத்தின் பல சிறப்புகளைக் கூறிக் கொண்டே போகலாம். இப்படத்தை எடுத்தற்காகவே இயக்குனர் சற்குணத்தைப் பாராட்டலாம். இது குறித்த விமரிசனங்களை இனி காணலாம்.


ஒரு கிராமத்தில் செங்கல் சூளைகளில் கொத்தடிமைகளாக வாழும் மக்களின் குழந்தைகளுக்கு, கல்வி கற்றுக் கொடுக்கச் செல்லும் ஆசிரியர், சூளை முதலாளிகளின் பலத்த எதிர்ப்பையும் மீறி, கல்வி கற்றுக் கொடுப்பதுதான் படத்தின் கரு. 1966-ல் கதை நடப்பதாக கூறப்படுகிறது. கிராமம் கண்டெடுத்தான் காடு.
கண்டெடுத்தான் காடு கிராம மக்கள் வெள்ளந்தியாக காட்டப்படுகின்றனர். அவர்கள் கற்றுக் கொடுக்க வந்த ஆசிரியரை கிண்டலும், கேலியும் செய்துகொண்டிருக்கின்றனர். போதாதற்கு ஒருவர் ஆட்டு கிடாயை வைத்து முட்டவைத்து விரட்டப் பார்க்கின்றார்.
அவர்களின் குழந்தைகள் கற்று கொடுக்க வரும் ஆசிரியரிடம் கிண்டல் செய்தும், நையாண்டி பண்ணிக் கொண்டும் படிக்க வராமலிருக்கின்றனர். அதை, அவர்களின் பெற்றோர்களும் கண்டு கொள்வதில்லை. ஒரு சிறுவன் வேண்டுமென்றே கிணற்றில் விழுந்து, ஆசிரியரை மாட்டிவிடுகிறான். பெரியோர்களும் அதை உண்மையென நம்புகின்றனர். ஆசிரியரை திட்டுகின்றானர். ஆசிரியரும் செய்வதறியாமல் நொந்து போகிறார். உண்மையில் அக்கிராமத்து குழந்தைகள் சற்று விபரம் உள்ளவர்களாகவே சித்தரிக்கப் படுகின்றனர்.
கதாநாயகி மட்டும், செம்மண் கறை படிந்த மக்களிடையே பளிச்சென காணப்படுகிறார். எப்படி? அவர் ஆசிரியரை காதலிக்கிறார். ஆசிரியரோ காதலிக்கவில்லை. படம் முடியும் வரை கதாநாயகி, அவரை காதலிக்க வைக்க முயற்சித்துக் கொண்டே இருக்கிறார். அவர்களிடையே நடக்கும் சிறு சிறு சண்டைகள், விளையாட்டுகள், நகைச்சுவை காட்சிகள் படம் முழுதும் உள்ளது. (படம் முடியும் போதுதான் ஆசிரியர் காதலுக்கு சம்மதம் தெரிவிக்கின்றார்.)
குழந்தைகள் கற்று கொடுக்க வரும் ஆசிரியரிடம் கிண்டல் செய்தும், நையாண்டி பண்ணிக் கொண்டும் படிக்க வராமலிருக்கின்றனர். பெற்றோர்கள், ஆசிரியரின் முக்கியத்துவம் தெரியாமல் கிண்டலும், கேலியும் செய்துகொண்டிருக்கின்றனர். படம் முடியும் வரை கதாநாயகி அவரை காதலிக்க வைக்க முயற்சித்துக் கொண்டே இருக்கிறார். இவைதான் 95% படத்தில் இடம் பெறும் காட்சிகள். இவையும் களவாணி பட பாணியில் நகைச் சுவையாகவே கொண்டு செல்லப்படுகின்றன. படத்தில் காதல், கடைசிக் காட்சிக்கு முன்பு வரை, ஆரம்பித்த இடத்திலேயே உள்ளது. கதையும் அப்படியே. அவ்வப்போது சூளை முதலாளிகள் வந்து போகின்றனர்.
சுரண்டலை, அதன் குரூரத்தை படம் சரியாக கூறவில்லை எனத் தோன்றுகிறது. அதற்கான காட்சிகளே இல்லை எனலாம். கொத்தடியமையாக உள்ள மக்கள், அவர்கள் சுரண்டப்படுவது குறித்து ஏதும் அறியாமலிருக்கின்றனர். சிறப்பாக அமைக்கப்பட்ட திரைக்கதையினூடே, நிறுவனம் (முதலாளித்துவம்) எவ்வாறு தொழிலாளர்களை சுரண்டுகிறது என்பதை பட்டவர்த்தனமாக சித்தரிக்கிற படம் அங்காடித் தெரு. அதில் காட்சிப்படுத்தப்படும் தொழிலாளர்களின் அவல நிலை, வறுமையின் காரணமாக அவர்கள் சகித்துக் கொள்ள வேண்டிய கொடுமைகள், அவமானங்கள், மனதை பிழியவைக்கின்றன. அப்படத்தை விட சிறப்பான கதை களத்தைக் கொண்ட இப்படம், முதலாளித்துத்தின் சுரண்டலை அதைப் போல காட்சிப்படுத்த தவறிவிட்டது, என்றே கூறலாம்.


சற்குணத்தின் முதல் படம் களவாணி (2010). அது வியாபார ரீதியில் வெற்றியடைந்த படம். அதன் களமும், கதையும் முற்றிலும் வேறுபட்டது. அதில் கதாநாயகனின் களவாணித்தனத்தை நகைச்சுவையாக ஒரு காதல் மூலம் இயக்குனர் கூறியிருப்பார்.  அது வழக்கமான காதல் கதைதான் எனினும் காட்சிகள் அனைத்தும் புதியன. கதை சொல்லும் முறையும் புதிது.
வாகை சூட வா படத்திலும் அந்த களவாணித்தனம் ஒளிந்துள்ளது என்பதுதான் அதன் பிரச்சினையே. அதாவது, முதல் படத்தின் வெற்றிக்கு காரணமான கதை சொல்லல் முறையை இப்படம் கொண்டுள்ளதுதான் இப்படத்தின் பிரச்சினையே. அதை, முதல் காட்சியிலேயே (வாத்தியார் (எம்.ஜி.ஆர்) படத்திற்கு சென்ற கதாநாயகன், அவனது அம்மாவிடம் பேசும் காட்சி; இரண்டிலும் ஒரே அம்மா மற்றும் ஒரே மகன்) புரிந்து கொள்ள இயலும். மிகவும் கனமான ஒரு கதைக்கு, இந்த பாணியிலான கதை சொல்லும் முறை சரியானதாக இல்லை, என எண்ணத் தோன்றுகிறது.
கதாநாயகன் (விமல்) மிகவும் வெகுளியாக சித்திரிக்கப்பட்டுள்ளார். ஆனால், அப்பாத்திரம் ஒரு அடிமைகளை மீட்க வந்த ரட்சகரைப் போன்றது. இது, படத்தில் குருவிக்காரர் என்ற பாத்திரத்தின் மூலம் நமக்கு உணர்த்தப்படுகிறது. இப்பாத்திரத்தை இன்னும் சிறப்பாக, பொருத்தமாக சித்தரித்திருக்கலாம்.
படத்தில் காண்பிக்கப்படும் கிராமம் கண்டெடுத்தான் காடு ஆகும். அது ஒரு கிராமம் எனக் கூற இயலாது. அது ஒரு குடியிருப்பு என கூற பொருத்தமுளது. இடம் பெயர்ந்த மக்கள் தற்காலிகமாக குடியிருக்க ஏற்படுத்தப்பட்ட ஒரு குடியிருப்பு எனக் கூறுவது சாலப் பொருத்தமாகும். படத்தில் காட்டப்படும் கிராமம் 1966-ஆம் ஆண்டு தமிழ் கிராமம் இல்லை, என நிச்சயமாகக் கூற இயலும். அது, கல்விக் கண் திறந்த காமராஜர் ஆட்சி ஏறக்குறைய முடிந்து போயிருந்த காலம். ஒரு பெரிய கல்வி புரட்சியே நடந்து முடிந்த கால கட்டம். எங்கும் கல்வி பற்றிய விழிப்புணர்வு பரவிய, அக்கால கட்டத்தில் இப்படியொரு கிராமமா? என கேட்கத் தோன்றுகிறது. இக்கிராமத்தின் சிறப்பு என்னவெனில், இது பாரதி ராஜாவின் கிராமமாக இல்லாமலிருப்பதுதான்.
முதலாளிகளின் அடியாட்கள் ஆசிரியரை ஊரை விட்டு விரட்ட முயலும் காட்சி தமிழ் திரைப்பட வரலாற்றிலேயே மிகவும் குறிப்பிட்டுச் சொல்லும்படியான ஒரு காட்சியாகும். கொடுமைக்கு, சுரண்டலுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழும் காட்சி. பொதுவாக விஜய காந்த், ரஜினி காந்த் போன்ற கதாநாயகர்கள்தான் கொடுமையை எதிர்த்து தனியாளாய் போராடி வெற்றி பெறுவார்கள்; (முன்பு எம்.ஜி.ஆர், தற்போது விஜய்). ஆனால் இதில் மக்கள் போரடுகிறார்கள். இதைத்தான் இன்று கூடங்குளத்தில் காணமுடிகிறது.

அழகான கதாநாயகி (இனியா), உண்மையில் சிறப்பானதொரு தேர்வு. அவரால் நடிக்கவும் முடிகிறது. துளி கவர்ச்சியும் இல்லாமல் அவர் நம்மை கட்டிபோடுகிறார். கதாநாயகிக்காவே படத்தை இருமுறை பார்க்கலாம். பொட்டல் காட்டை இதைவிட யாரும் அழகாக காட்ட முடியாது, என்று கூறும்படி ஒளிபதிவாளர் பணியாற்றியுள்ளார்.
படத்தின் முக முக்கியமான ஒரு பாத்திரம் குருவிகாரர் பாத்திரம். அவர் படம் முழுதும் குருவி சத்தம் கேட்கிறது என கூறிக் கொண்டேயிருப்பார். காடுகள் அழிக்கப்பட்டு உருவாக்கப்பட்ட செங்கல் சூளைகள் குருவிகளுக்கு போக்கிடம் இல்லமால் செய்துவிடுகின்றன, என்பதன் குறியீடு. அவர் கதாநாயகனை ஒரு மீட்பரை எதிர்பார்த்திருந்தவர் போல், காத்திருக்கின்றார். அவர் கதாநாயனிடம், தான் சாவதற்கு முன்பு  கூறும் வசனம், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன், ஒரு மகான் கூறியது: நீ விதைக்கவில்லை, ஆனால் அறுவடை செய்கிறாய். இப்பாத்திரப் படைப்பு ஒரு சிறப்பானதொரு படைப்பாகும்.

நமக்கு சற்குணத்தைப் போல இயக்குனர் கிடைப்பதரிது. இப்படம் சம காலத்திய தமிழ் படங்களை ஒரே தாண்டாக தாண்டிச் செல்கிறது. ஆனால் நிச்சயமாக ஆகச் சிறந்த படம் எனக் கூற இயலாது. 

Comments

Popular posts from this blog

துப்பறியும் நாவல்களின் காலம் முடிந்துவிட்டதா? அல்லது சுஜாதாவிற்குப் பின் துப்பறியும் நாவல்கள்? ம.ஜோசப்

பாவம் இல்லாதவர் இவள் மேல் கல் எறியட்டும் - ஜோசப் மரியமைக்கேல்.

யூதாஸ் இஸ்காரியோத்தின் நற்செய்தி - ம. ஜோசப்