Novel - Chapter 2
பாம்புகள் வந்து கொண்டேயிருக்கின்றன
 2
      சொக்கலிங்கம் அதிகாலையில் தஞ்சாவூர் மருத்துக்
கல்லூரி சாலையில் நடை பயணம் சென்று கொண்டிருந்தார். கோடை காலத்தின் அதிகாலைகள் மிகவும்
ரசிக்கத்தக்கவை. இதமான தென்றல் வருடிச் செல்வது யாருக்குதான் பிடிக்காது? சர்க்கரை
வியாதியால்தான் இவரும் நடை பயணம் மேற்கொள்ள ஆரம்பித்தார். அவரது வாழ்க்கை ஒட்டத்தின்
இறுதியில், இங்கு, இப்படி ஒடுவார் என அவரே, நினைத்தறியாதது. அவர் பின்னே தொலைவில் ஒரு  ஆம்னி வேன் வந்து கொண்டிருந்தது. 
      அவர் தனது பூர்வீக கிராமத்தைவிட்டு வந்து இரண்டு
வருடங்கள் ஆகப்போகிறது. கிராமத்து நினைவுகள் அவர் மேல் ஒரு மலரின் வாசம் போல் வந்திறங்கின.
தோட்டம், தோப்பு, வயல்வெளிகள், வேலையாள்கள், உறவினர்கள், கிராமத்து மக்கள் என அனைவரையும்
விட்டு விட்டு வந்தாகிவிட்டது. அவரது அப்பாவின் காலத்தில் இருந்த அவர்கள் குடும்ப செல்வாக்கை,
தற்போது நினைத்தால் அழுகையே வந்துவிடும். அந்த ஆம்னி வேன் நெருங்கிக் கொண்டிருந்தது.
      வாழ்வின் கடைசிகாலத்தில் வாழ்ந்த கிராமத்தை விட்டு,
வேறொரு புதிய இடத்தில் வாழ்வை ஆரம்பிப்பது மிகத் துயரமானது. நேற்று அவர் கண்ட கனவு,
அதைவிட மிகத் துயரமானது. பயங்கரமான அந்த வினாடிகள் அவர் மனதில் நிழலாடின. (நான்கு மணிக்கெல்லாம்)
உடனே முழிப்பு வந்துவிட்டது. நெஞ்சு படபடவென அடித்துக் கொண்டது. வீட்டுப் படிக்கட்டுகளைத்
தாண்டி நிலைப்படி வரை ஒரு நச்சுப் பாம்பு வந்து விட்டது. அப்பாம்பு ஒரு வாலிபமான கட்டு
விரியன். எழுந்து லைட்டைப் போட்டுப் பார்த்தார். நிலைப்படியண்டையில் ஒன்றையும் காணவில்லை.
அது ஏன் வீட்டிற்குள் வர வேண்டும்.? விஷப் பாம்பு வீட்டிற்குள் வருவது
ஆபத்தைக் குறிக்கிறது. ஹாலுக்கு வந்து விட்டது கட்டு விரியன். பாம்பு வீட்டிற்குள்
வந்து விட்டது. அது வீட்டினுள் எங்காவது ஒளிந்திருக்குமா? வீடு பயங்கரத்தை ஒளித்து
வைத்திருப்பதாய், அவருக்குத் தோன்றியது. 
அதற்கு முந்தின நாள் இரவு உறக்கத்தின் போது, வாழை மரங்கள் வீட்டின் வாசலில்
கட்டப்பட்டிருப்பது போல் ஒரு காட்சி வந்து மறைந்து போனது. அந்த கனவு, ஒரு துர் கனவு.
கெட்ட சகுனம். ஏதோ ஒரு கெட்ட சம்பவம் நடக்கப் போகிறது, என அவர் மனம் அடித்துக் கொண்டது.
அவர் திருப்பிப் பார்த்தார். அந்த ஆம்னி வந்து கொண்டிருந்தது. அதில் ஒரு இளைஞன் அமர்ந்திருப்பது
தெரிந்தது. 
      ஒரு முறை கிராமத்தில், தோட்டத்தில் வாழை மரங்களைப்
பயிரிட்டு இருந்தார்கள், அந்த  நினைவுகள், அவர்
மனதில் பசுமையாய் ஒடியது. வாழைத்தோட்டம் அவருக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. அதன்
குளுமை, அதன் வாசம் இப்போதும் அவர் உடம்பில் வந்து ஒட்டிக் கொண்டன. வாழைத் தோப்பினை
மாலை நேரங்களில் சுற்றி சுற்றி வந்து கொண்டிருப்பார். 
அவ்வப்போது கிராமத்தில் மக்கள் விஷேஷங்களுக்கு வாழைமரம் கேட்டு வருவார்கள்.
ஓ! அப்படியெனில், தற்போது நம் வீட்டில் ஏதும் விஷேஷமா? அப்படியொன்றும் இல்லையே? ஒரு
சிலர் சாவுக்கும் வாழைமரம் வெட்ட வருவார்கள். அப்படியெனில்..... ஆ! அக்கனவு உணர்த்துவது
மரணத்தையா? அய்யோ கடவுளே! யாருடைய மரணம்? அதிர்ந்தார். அப்போது அந்த ஆம்னி ஏறக்குறைய
நெருங்கி விட்டது.
      திடீரென பக்கவாட்டுக் கதவுத் திறக்கப்பட்டு,
ஒரு கை நீண்டு அவரை மிகுந்த முரட்டுத்தனமாய் உள்ளிழுத்து, கதவை அறைந்து சாத்திவிட்டு,
விர்ரெனப் பறந்தது. அதி காலை மணி 6.15 இருக்கலாம். 
      7.30 மணி போல் அகிலின் அண்ணன் சுப்பிரமணியனுக்கு
ஒரு போன் வந்தது. சார், மருத்துவக் கல்லூரி ரோட்டில, ஒரு வயதானவர் இறந்து கிடக்கிறார்.
அவர் டைப் பையிலிருந்த இந்த நம்பருக்குப் கான்டாக்ட் பண்றேன். “அய்யோ” என்றார். உடனே
வாங்க என்றார், ஒரு வழிப்போக்கர். 
ஹாலுக்கு வந்து விட்டது கட்டு விரியன். ஹாலில்தான் சொக்கலிங்கம் தூங்குவார்.
பாம்பு வீட்டிற்குள் வந்தது, அவரைத் தேடித்தான். 
 
Comments