ஒடுக்கப்பட்டோரின் போராளி


ஒடுக்கப்பட்டோரின் போராளி
முனைவர்.ம.ஜோசப்


       மக்கள் அடிமைப்பட்டுக் கிடந்தனர். சுமக்க முடியாத சுமைகளை சுமந்தனர். வரி கட்ட முடியாமல், வரி வசூலிப்போரின் கொடுமைகளால் அல்லலுற்றனர். ஏகாதிபத்தியத்தின் பிரதிநிதியின் கொடுங்கோலாட்சியின் துயரங்களால் துவண்டுபோய் கிடந்தனர். பெண்களின் நிலையோ, மிருகங்களை விட கீழானதாய் இருந்தது. அவர்களது அடிமை வரலாறு மிக நீண்டது. ஏறக்குறைய 600 ஆண்டுகளாய் அடிமை வாழ்க்கை வாழ்ந்திருந்தனர். சுதந்திரம் என்றால் என்னவென்று தெரியாமல் பல தலைமுறைகள் செத்தொழிந்து போயிருந்தனர். ஏழைகள், பெண்கள், சாமன்யர், சமூகத்தின் கீழ்த்தட்டு மக்கள், உழைப்போர்,விவசாயிகள் மீது வாழ்வினை ஒடுக்குவோர் கூட்டத்தின் அட்டூழியங்கள் கணக்கிடங்கா. ஒடுக்கப்பட்டோரை விடுவிக்கும் மீட்பர் யார்? அவர்களின் புராணங்களின் உரைக்கப்பட்டபடி அவர்களை மீட்கும் ஒரு விடிவெள்ளியை எதிர்பார்த்திருந்து காத்திருந்தனர் மக்கள் கூட்டம்.

அந்த தேசம் யூதேயா. அச்சமூகம் யூத சமூகம் காலம் கி..மு. 1 ஆம் நூற்றாண்டு. அந்த ஏகாதிபத்தியம் ரோமப் பேரரசு. பேரரசர் அகஸ்டஸ் சீசரின் ஆட்சி காலம். பெரிய ஏரோது (வரலாற்றில்) என அழைக்கப்படுபவர்தான் அந்த தேசத்தின் ஆளுநராகிய ரோமப் பிரதிநிதி. அவரது கொடுங்கோலாட்சியில் மக்கள் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்தனர். ஆட்சியாளரை எதிர்ப்போர் ரோம போர் வீரர்களின் சித்ரவதையை எதிர்கொள்ள வேண்டும். அவர்களின் சாதரண தண்டணை ஒன்று குறைய நாற்பது கசையடிகள் கொடுப்பதுதான். மக்களிடம் மிகக் கொடிய முறையில், மிகையான வரி வசூலிக்கப்பட்டது. வரி வசூலிப்போர் மிகவும் கொடியோராயும், பாவிகளாகவும், மக்களால் கருதப்பட்டனர். இவ்வாறு மக்கள் அரசியல் ரீதியாக அடிமைப்பட்டுக் கிடந்தனர்.

சமூகத்தில் மத குருமார்கள் மேல்தட்டு வர்க்கத்தினர் ஆக இருந்தனர். யூத மத குருக்கள். சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் முதன்மையானவர்கள். அவர்கள் மேட்டுக்குடி மனோபாவமுடையராய், சமூக ரீதியில் மக்களை அடக்கி ஒடுக்கினர். அவர்கள் பரிசேயர், சதுசேயர் மற்றும் செலூட்டுகள் ஆவர். மத சடங்காச்சரங்களை மிகவும் தீவிரமாக பின்பற்றும் சமூகம், யூத சமூகமாகும். யூத மக்களை எகிப்தின் அடிமைத்தளையிலிருந்து மீட்டுக் கொணர்ந்த மோசே கொடுத்த சட்டத் தொகுப்பை அவர்கள் பின்பற்றி வாழ்ந்தனர். புகழ் பெற்ற பத்துக் கட்டளைகளும் இவற்றில் அடக்கம். உதாரணமாக விபசாரத்தில் ஒரு பெண் ஈடுபட்டால் கல்லெறிந்து கொல்லப்பட வேண்டும். அச்சட்டங்களை வளைத்து சமூக ரீதியில் மத குருக்கள் மக்களை அடிமைப்படுத்தினர்.

யூத மக்களின் நீண்ட, நெடிய அடிமை வரலாற்றில், விடிவெள்ளியாய் கி.மு.5 அல்லது 6 ஆம் ஆண்டில், மெசாயா என அறியப்படுகின்ற இயேசு கிறிஸ்து பிறந்தார். அவரது வளர்ப்புத் தந்தை ஜோசப்பின் அரவணைப்பில், வளர்ந்து, அவருடன் தச்சுப் பணியில், ஈடுபட்டார். பின் கி.பி. 27 ஆம் ஆண்டு முதல் மூன்று ஆண்டுகள் மக்கள் பணி செய்கிறார். ஏறக்குறைய கி.பி. 30 ஆம் ஆண்டு, யூத குருமார்களின், பொய் குற்றச்சாட்டுகளின் பொருட்டு, யூதேயாவின் ஆளுநராகிய, ரோமப் பிரதிநிதி பிலாத்துவினால், மரண தண்டணை விதிக்கப்பட்டு, ரோம வழக்கப்படி கழு மரணத்தில் ஏற்றிக் கொல்லப்பட்டார்.

இயேசுவின் மக்கள் பணி என்பது ஒரு கலகக் காரனின் பணி; ஒரு போராளியின் பணி. ஒடுக்கப்பட்ட மக்களின் குரலை அதிகார மையங்களுக்கு எதிராக கிறிஸ்து ஓங்கி ஒலித்தார். ரோம ஆட்சிக்குட்பட்ட கலிலேயா பகுதி ஆளுநராகிய ஏரோதுவை (சிறிய) நரி என்கிறார். மதக் குருக்களை மாயக்காரர்கள் எனவும், வெள்ளையடிக்கப்பட்ட கல்லறை எனவும் விமர்சிக்கிறார். மக்களால் சுமக்க முடியாத நுகத்தடியை சுமத்துகிறீர்கள், என குற்றம் சாட்டுகிறார். யூத குருமார்கள், மக்கள் மேல் அதிகாரம் செலுத்த பயன்படுத்தப்பட்ட சட்டங்களை நிறைவு செய்ய சொல்லி, “உன்னைப் போல் உன் அயாலனையும் நேசி” எனும் புதிய அன்பின் கட்டளையைக் கொடுக்கிறார். அக்கட்டளையை, நிறைவேற்ற தனது உயிரையும் தருகிறார். சமூகத்தில் காலங் காலமாக அதிகார வர்க்கம், மக்கள் மீது கொண்டிருந்த ஆதிக்கத்தை, அவரது உரைகளாலும் தகர்த்தெறிந்தார்.
யூத அரசர், சாலமோன் ஞானி கட்டிய புகழ் பெற்ற எருசலேம் தேவாலயம், குருமார்களின் பிடியில், ஏறக்குறைய வியாபர தளமாய், பன்னாட்டு வணிகர்கள் வியாபரம், பணம் மாற்றும் இடமாக மாறியிருந்தது. “இறைவனின் இல்லத்தை கள்வர் குகையாக்கினீர்”, என அவர்கள் மேல் குற்றம் சுமத்தி, ஒரு சாட்டையை பின்னி, வியாரிகளைத் தாக்குகிறார். வியாபர பொருட்களை உடைத்தெறிகிறார். வியாபரிகள், காசுக்காரர் போன்ற மக்களை ஒடுக்கிய அக்கொடியோரை அவர் அங்கு ஒரு கலகக்காரனாகி, இறைவனின் ஆலயத்தைத் விட்டு துரத்துகிறார்.

யூத சமூகம், சாதிய அடுக்குகள் போன்று, பல பிரிவுகளை உடையாதாயிருந்தது. அதில் சமாரியர்கள் மிகவும் கீழான நிலையிருந்தனர். அவர்களை யூதர்கள் ஒடுக்கி வைத்திருந்தனர். சமாரிய ஊர்களின் வழியே யூதர்கள் செல்வதில்லை. அவர்களோடு உறவாடுவதில்லை, உணவு அருந்துவதில்லை. அவர்கள் பயன்படுத்தும் பாத்திரங்களைக் கூட யூதர்கள் தொடுவதில்லை. அவர்களைத் தொட்டு விட்டால், தீட்டு எனக் கருதி தீட்டுக் கழிக்கும் சடங்குகள் செய்வது அவர்களின் வழக்கம். அக்காலத்தில் தீண்டாமையின் உச்சம் அச்சமூகத்தில் நடைமுறையிலிருந்தது. கிறிஸ்து, சமாரியா வழியாக அடிக்கடி பிரவேசித்தார். சமாரிய மக்களிடம் பணி செய்தார். சமாரியப் பெண்ணிடம் தண்ணீர் வாங்கி அருந்தினார். தனது அன்பின் கட்டளையான “உன்னைப் போல் உன் அயாலனையும் நேசி”, என்பதை வலியுறுத்த ஒரு சமாரியனை நாயகனாக்குகிறார். உலகின் புகழ் பெற்ற ஒரு உவமைக் கதையின் நாயகன் ஒரு ஒடுக்கப்பட்ட, தீண்டத்தகாத சமூகத்திலிருந்து வந்தவன்.

அக்கால யூத சமூகத்தில் அடுத்து ஒடுக்கப்பட்டோர் பெண்கள் ஆவார். ஆனால் இயேசுவோ பெண்களை சமத்துவத்துடன் நடத்தினார். இயேசுவின் மாணவர்களில் முதன்மையானோர், மார்த்தா, மரியா என்ற பெண்களாவர். அவர்களால் ( பெண்களால் ) அன்பின் அரசை எளிதில் கட்டமுடியும் என, கிறிஸ்து நம்பினார். விபசாரத்தால், கையும் களவுமாக பிடிபட்ட ஒரு பெண்ணை, அச்சமூக வழக்கப்படி கல்லெறிந்து கொல்லப்பட வேண்டிய, ஒடுக்கப்பட்ட அப்பெண்ணை, “உங்களில் பாவம் இல்லாதவள், இவள் மேல் முதல் கல்லை எறியட்டும்”, எனக் கூறி, அக்கொடியோரிடமிருந்து, காப்பாற்றினார். சமூக விளிம்பு நிலை பெண்ணாகிய அவ்விபசாரியை, மதித்து, காப்பாற்றி, விளிம்பு நிலை மக்களுக்காக ஆதிக்க சக்தியான ஆண்களுக்கெதிராக குரல் கொடுத்தார். ஒருமுறை தேவாலயத்தில் ஒரு கைம்பெண் இரண்டு காசுகளை காணிக்கையாக போடுவதைக் காண்கிறார். அள்ளி, அள்ளி வெள்ளிக் காசுகளைக் காணிக்கையாக போட்டோரை விட, இவளே அதிகம் காணிக்கை செய்தார், ஏனெனில் பிறர் தனக்கு மிகுதியானவற்றிலிருந்து காணிக்கை போட்டனர்; இவளோ தனக்குள்ள ( வாழ்வுக்குறிய ) எல்லாவற்றையும் காணிக்கையாக்னாள். இவளே இறைவனை அதிகம் நேசித்தாள், என அக்கைம்பெண்ணை அனைவருக்கும் முன் அங்கீகரித்து உயர்த்துகிறார். அவளது செயல் ஒரு உயரிய செயல் என உலகிற்கு உணர்த்துகிறார்.

மக்களால் கொடியோராய் கருதப்பட்ட ஒரு வரி வசூலிப்பவர் ( சகேயு ) மனம் திரும்பியதால், அவனையும் ஏற்றுக் கொண்டு, அவனது ஆன்ம ஒளியை மீட்டெடுக்கிறார். அவர், அநியாமாக வசூலித்த வரி அனைத்தயும், மக்களிடம் இரு மடங்காய் திருப்பிக் கொடுக்க செய்கிறார். அது ரோமப் பேரரசின் வரி வசூலித்தல் முறையை பகடி செய்தது.
ஏழைகள், மீன் பிடிப்போர், விபசாரத்தில் ஈடுப்பட்டோர், தீண்டத்தகாதோர், பெண்கள், கைம்பெண்கள், நோயாளிகள், குஷ்ட ரோகம் பிடித்தோர், கண் தெரியாதோர், மாற்றுத் திறனாளிகள், பிசாசு பிடித்தோர் ( மன நலம் பாதிக்கப்பட்டோர் ) போன்றவர்கள்தான் அவரது சீடர்கள். அவர்களால்தான் அவர் கூறிய அன்பின் அரசைக் கட்டமுடியும் என அவர் திண்ணமாய் நம்பினார்.

உலகில் ஒடுக்கப்பட்டோருக்காருக்காக ஓங்கி ஒலித்த ஆதிக் குரல்களில் கிறிஸ்துவின் குரலும் ஒன்று. அமெரிக்க கருப்பின மக்களின் விடுதலைக்காகப் போராடி
தன்னுயிர் அளித்த மார்டின் லூதர் கிங், கிறிஸ்துவிடமிருந்து, தனதுப் போராட்டதிற்கான உந்து சக்தியைப் பெற்றதாகக் கூறுகிறார். நமது தேசத் தந்தை, தனது விடுதலைப் போராட்டதைப் பற்றி கூறும்போது, இயேசு ஒரு தனி மனிதனுக்குச் செய்யச் சொன்னதை, தான் ஒரு சமூகத்திற்கு செய்ததாக குறிப்பிடுகிறார்.

அதிகார மையங்களுக்கெதிராக குரல் எழுப்பினார். அவர்களின் விடுதலைக்கான போராளியானர்.
அதனாலேயே அதிகார மையங்களால் பகைக்கப்பட்டு கொல்லப்பட்டார்.

இயேசு எழுப்பிய ஒடுக்கப்பட்டோருக்கான குரல், இப்போதும், எப்போதும் ஒடுக்கப்பட்டோருக்காக போரடுவோரின் குரலாய் வெளிப்பட்டுக் கொண்டேயிருக்கும். ஒடுக்கப்பட்டோருக்கான குரல் எழுப்பிய ஒரு சமூகப் போராளியின் பிறந்த நாளை நாம் கொண்டாடுவது என்பது தற்போதும் ஒடுக்கப்படுவோரின் சார்பாக குரலெழுப்புவதுதான் என்றால் அது மிகையில்லை.
***கட்டுரை ஆசிரியர் ஒரு பொறியியல் கல்லூரி முதல்வர் ஆவார். 25 ஆண்டு ஆசிரியப் பணியில் அனுபவம் வாய்ந்தவர். கர்நாடக தேசிய தொழில் நுட்ப நிறுவனத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்.

Comments

Popular posts from this blog

துப்பறியும் நாவல்களின் காலம் முடிந்துவிட்டதா? அல்லது சுஜாதாவிற்குப் பின் துப்பறியும் நாவல்கள்? ம.ஜோசப்

பாவம் இல்லாதவர் இவள் மேல் கல் எறியட்டும் - ஜோசப் மரியமைக்கேல்.

யூதாஸ் இஸ்காரியோத்தின் நற்செய்தி - ம. ஜோசப்