பாய்ஸ் கம்பெனி காலத்து வெயில் - காவியத்தலைவன் (Kaviya Thalaivan - Review)

பாய்ஸ் கம்பெனி காலத்து வெயில்.
ம.ஜோசப்.

காவியத்தலைவன் (நவம் – 2014) நாசர், சிதார்த், ப்ரித்வி ராஜ், வேதிகா, தம்பி ராமையா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்க, எழுத்தாளர் ஜெய மோகனின் வசனத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், வசந்த பாலனின் இயக்கத்தில் வெளி வந்திருக்கும் படமாகும். பாய்ஸ் நாடக கம்பெனிகள் தமிழ் நாட்டில் கோலோச்சிய காலத்தின் (ஏறக்குறைய 1870 - 1930) கதை நடக்கிறது. (படத்தில் காலம் பற்றி தெளிவாக ஏதும் கூறப்படவில்லை;)

அக்காலத்தில் அப்படி இருந்த ஒரு பாய்ஸ் கம்பெனி போல ஒரு புனைவு (கற்பனை எனக் கொள்ளலாம்) டிராமாக் கம்பெனி தான்  படத்தின் கதைக் களம். அதன் மாந்தர்கள்தான் படத்தின் கதா பாத்திரங்கள். ஒரு சில மாந்தர்களும் அக்காலத்தின் வாழ்ந்த மனிதர்களின் புனைவாகத்தான் படைக்கப்பட்டுள்ளனர். சங்கர தாஸ் சுவாகிகள், எஸ்.ஜி. கிட்டப்பா, கே.பி. சுந்தராம்பாள் போன்றோர்கள் வாழ்ந்த கால கட்டம். படத்தின் சில புனைவு பாத்திரங்கள் சிவ தாஸ் சுவாமிகள், காளியப்பா, வடிவாம்பாள்.

வசந்த பாலன் நிறைய இப்படத்திற்கு உழைத்துள்ளார். படித்திருக்கிறார். வரலாற்றை மீள் உருவாக்கம் செய்யும் அவரது எண்ணம் போற்றுதலுக்குறியது, அதன் மூலம் வரலாற்றில் புதிய வெளிச்சங்களை நாம் கண்டடையலாம். 

நண்பர் ஜெய மோகன் தான் வசனம். ஒரு சில இடங்களில் அது தெரிகிறது. மிகச்சிறப்பான ஒளிப்பதிவு. நடிகர்கள் சிறப்பாக நடித்துள்ளனர்.



வரலாற்றில் புனைவுகளை உருவாக்கும் போது சில வரலாற்று உண்மைகளை உண்மையாகவே கூறவேண்டும். 1947 –ல் இந்தியா விடுதலைப் பெற்றது என்பது ஒரு புனைவாக மாறமுடியாதது என்பது போல்தான், மற்ற வரலாற்று நிகழ்வுகளும். மகாத்மா காந்தி மதுரைக்கு வந்து (21.09.1921), அங்குள்ள மேலாடையற்ற விவசாயிகளைப் பார்த்து மனம் வருந்தி, இனி மேலாடை அணிவதில்லை என்ற முடிவை எடுக்கிறார். படத்தில் காந்தியின் மதுரை வருகை காண்பிக்கப்படுகிறது. அதில் அவர் மேலாடையின்றியே வருகிறார். காலத்தின் பிற்பாடு எடுக்கப்பட்ட காட்சியாக அது படுகிறது. படத்திற்கும் காந்திக்கும் சம்பந்தமேயில்லை. அந்த காட்சி தேவையுமில்லை.

மிக முக்கியமாக பகத்சிங் தூக்கிலிடப்பட்டது 1931.  எஸ்.ஜி. கிட்டப்பா மறைந்தது 1933. அக்கால கட்டத்தில் பகத்சிங் குறித்த நாடகங்கள் நடத்தப்பட வில்லை. அக்காலத்தில் பகத்சிங் நாடக பிரதியாகவே மாறவேயில்லை. படத்தின் கிளைமாக்ஸ் பகத்சிங் நாடகத்தை மையமாக வைத்தே எடுக்கப்பட்டுள்ளது. பெரியதோர் கால குழப்பமே மிஞ்சுகிறது. கிளைமாக்ஸ் சிவாஜி நடித்த ராஜ பார்ட் ரங்க துரையை நினைவு படுத்துகிறது. அது கம்பெனி ட்ராமாக்களின் அழிவைப் பேசியது. சினிமா தனது பரந்த, இராட்சசக் கரங்களில் கம்பெனி ட்ராமாக்களை நசுக்கிக் கொண்டிருந்த காலம். ட்ராமா நடிகர்கள் சினிமாவில் கால் பதித்த கால கட்டம் அது. 

கதையைப் பற்றி பெரிதாக வசந்த பாலன் மெனக்கிட வில்லை என்றே தோன்றுகிறது. வெயில் படத்தின் கதைதான், ஏறக்குறைய இப்படத்தின் கதையும். பாய்ஸ் டிராமாக் கம்பெனி பின் புலத்தில் வெயில் கதையை எடுத்துள்ளார்கள். அண்ணன், தம்பி, காதலி இறந்து போதல், கொட்டகை மூடப்படுதல், ஒருவர் பலியாதல். இது எனக்கு மிகுந்த ஏமாற்றத்தைத் தந்தது. பாத்திர படைப்பு எதுவும் மனதில் நிற்கவில்லை. எந்த பாத்திரமும் சரியாக வார்க்கப்படவில்லை. மனதைத் தொடும் காட்சிகள் ஏதுமில்லை எனவும் கூறலாம்.

படத்தில் நிறைய தவறுகள் உள்ளன. குறிப்பாக பாத்திரங்கள் பேசும் மொழி நமது சம காலத்திய மொழி. இசையும் அப்படித்தான். படத்தோடு ஒட்டாத, சம்பந்தமில்லாத ஒரு இசை. நிறைய இடங்களில் உடைகளும் சம காலத்திய உடைகளாக உள்ளன. காளியப்பாவிற்கும் ஜமீந்தார் பெண்ணுக்கும் இடையேயான காதல் காட்சிகள் முழுதும் மிகவும் நவீனமாக உள்ளது. குறிப்பாக சண்டிக்குதிரை பாடலும், நடனமும். காலத்தை மீறிய புனைவுகள் எனலாம்.

நாடக அரங்க அமைப்பு முற்றிலும் அக்காலத்திலிருந்து வேறு படுகிறது. அரங்கில் ஒரு மைக் கூட இல்லை. மைக் முன்புதான் பாத்திரங்கள் பேசுவர். அரங்கில் ஒரு இசைக் குழுவினர் இருப்பர். அவர்களும் படத்தில் இல்லை. லைட்டிங் சாதனங்கள் ஏதுமில்லை. சில அரிகேன் விளக்குகளை வரிசையாக முன்புறம் வைத்துள்ளனர். அக்காங்களில் பாடப்பட்ட நாடகப் பாடல்கள் ஒன்றும் பாடப்பட வில்லை. சம்பந்தமில்லாத ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்களை பாடுகிறார்கள். ஒரு சில பாரதியார் பாடல்கள் கூட பாடுகிறார்கள்.

சுதேசி கருத்துக்கள், மற்ற நாடகங்களில் சில பாத்திரங்களின் வழியாக குறிப்பால் தான் உணர்த்தப்பட்டன. உதாரணமாக “ வெள்ளைக் கொக்கு பறக்குது பறக்குது பாரீர்” என மதுர கவி பாஸ்கரதாஸ் பாடியதாக படித்துள்ளேன். படத்தில் காட்டப்படுவது போல் சுதேசி நாடகங்கள் அக்காலத்தில் நடிக்கப்படவில்லை என்பதுதான் உண்மை.






வரலாற்றில் புனைவுகளை உருவாக்கி படமெடுத்து வெற்றி பெறுவதற்காக வசந்த பாலன் நிறைய உழைக்க வேண்டும். இவ்வகைக்கு டைட்டானிக் படம் ஒரு சிறந்த உதாரண்மாகும்.

இப்படம் வெற்றியடைய என் வாழ்த்துக்கள்.


Comments

Popular posts from this blog

துப்பறியும் நாவல்களின் காலம் முடிந்துவிட்டதா? அல்லது சுஜாதாவிற்குப் பின் துப்பறியும் நாவல்கள்? ம.ஜோசப்

பாவம் இல்லாதவர் இவள் மேல் கல் எறியட்டும் - ஜோசப் மரியமைக்கேல்.

யூதாஸ் இஸ்காரியோத்தின் நற்செய்தி - ம. ஜோசப்