தமிழ் சினிமாவில் கிறிஸ்துவர்கள்
தமிழ் சினிமாவில் கிறிஸ்துவர்கள்
ம.ஜோசப்
ராயப் பேட்டை நர்சு பேரு மேரி
நான் வாங்கித் தந்தேன் அரபு நாட்டு சேரி
கேள்விப்பட்டேன் மாமா பேரு மாரி
ஒண்டித் தோப்பு மாரி
நான் ஜகா வாங்கி கேட்டுப்புட்டேன் சாரி,
அயாம் வெரி சாரி.
      தேவா இசையமைப்பில் 90களில் வந்த இப்பாடல், இக்கட்டுரையில்
சொல்ல வேண்டிய விபரங்களின் சாரத்தை சுருக்கமாகக் கூறிவிடுகிறது. தமிழ் சினிமா
கிறிஸ்தவர்களைப் பற்றிய என்ன நினைக்கிறது என்பதற்கு இது ஒரு மிகச் சிறந்த
உதாரணமாகும். தமிழ் திரைப்படங்களில் கிறிஸ்துவர்கள் எவ்வாறு
சித்தரிக்கப்படுகின்றனர்? என்பதைப் பற்றி இக்கட்டுரை ஆராய்கிறது. 
      கிறிஸ்துவ மக்களை குறிவைத்து எடுக்கப்படும்
ஒரு வகைப் படங்கள் உள்ளன. இவைகளை பக்தி படங்கள் என்ற வகையில் சேர்க்கலாம். அன்னை
வேளாங்கண்ணி, வில்லியனூர் மாதா, கருணாமூர்த்தி, ஜீசஸ், ஸ்வாதி நட்சத்திரம், ஞான
சௌந்தரி போன்றவை இவ்வகைக்கு சில உதாரணங்களாகும். இவ்வகைப் படங்களைப் பற்றி
இக்கட்டுரை பேசவில்லை. 
கிறிஸ்தவ
பெண்கள்
      பொதுவாக தமிழ் சினிமாவில் கிறிஸ்துவ பெண்
என்றால், ஒன்று நர்ஸாக இருப்பார் அல்லது காபரே நடனக்காரியாக இருப்பார். தமிழ்
சினிமாவில் வரும் காபரே நடனக்காரிகள் பெயர்கள் மேரி, ரீட்டா, ஜூலி, ஷீலா
போன்றவைகளாகும். இவைகள் ஏன் மங்கையற்கரசி என்றோ காவேரி என்றோ இல்லை? நமது
இயக்குனர்கள் கிறிஸ்தவ பெண்கள் குறித்த மனபோக்கினை தெளிவாக இது காண்பிக்கிறது.
      எம்.ஜி.ஆர். நடித்த இதயக்கனி என்ற
படத்தில் வயதான தெலுங்கர் வேடத்தில் வரும் வயதான தேங்காய் சீனிவாசன் ஒரு சிறு
பெண்ணை கலியாணம் செய்து கொண்டு வருவார். அச்சிறு பெண் ஒரு கிறிஸ்தவராவார். அவ்விருவருக்கும்
உள்ள பொருந்தாத விஷயங்கள்தான் நகைச்சுவைக்குப் பயன்படுத்தப்படும். அப்படத்தில்
வில்லன் ஒரு பெண் ஆவார். அது கிளைமாக்ஸில்தான் தெரிய வரும்; அவளது பெயர் ஷீலா
ஆகும். இது போண்று பல உதாரணங்களை தமிழ் திரைப்படங்களில் காட்ட முடியும். பாலு
மேந்திராவின் ஜூலி கணபதி படத்தில் வரும் மன நோயாளியான பெண் பாத்திரம்தான் வில்லி.
அவள் பெயர் ஜூலி என்பதாகும்.
      ரிவால்வார் ரீட்டா என்ற ஒரு படம், மக்கள்
மத்தியில் வரவேற்பு பெற்றபடம். அதற்கு ரிவால்வார் லஷ்மி என்றோ ரிவால்வார் மைதிலி
என்றோ ஏன் பெயர் வைக்கப்படவில்லை? சாகசங்கள் புரியும் தமிழ் பெண் தமிழ் பாரம்பரிய
மதிப்பீடுகளுக்கு எதிரானவள். அதனால்தான் அது ஒரு கிறிஸ்துவ பெயராக உள்ளது. 
உதிரிகள்,
விளிம்பு நிலை மக்கள், திருடர்கள்
      ஞான ஒளி என்ற படம் கிறிஸ்தவர்களின்
மத்தியில் புகழ் பெற்ற படமாகும். இதில் தஞ்சைக்கருகிலுள்ள பூண்டி என்ற கிராமத்தில்
உள்ள மாதா கோவிலின் பாதிரியாரால் வளர்க்கப்பட்ட இருவரின் வாழ்க்கைதான் கதையாகும். இதில்
ஒருவர் கிறிஸ்தவர் (சிவாஜி கணேசன்); மற்றொருவர் இந்து (மேஜர் சுந்தரராஜன்). இதில் கிறிஸ்தவர்
சந்தர்ப்ப சூழ்நிலையால் கொலை செய்துவிட்டு, தலை மறைவு வாழ்வு வாழ்பவர். அவரை
துரத்தும் போலிஸ் அதிகாரி இந்து. 
      சங்கர், சலீம், சைமன் என்ற படத்தில்
வரும் கிறிஸ்துவ பாத்திரத்தை (சைமன்) ரஜினிகாந்த் ஏற்று நடித்திருப்பார். இப்பாத்திரம்
குடும்பத்திலிருந்து விலகிய உதிரியானவர். உதிரிகள், விளிம்பு நிலை மக்கள்,
திருடர்கள் போன்ற பாத்திரங்களை பெரும்பாலும் கிறிஸ்தவ ஆண்களுக்கு, நமது
இயக்குனர்கள் 70களில் வெளிவந்த படங்களில் வைத்திருக்கிறார்கள். 
சிவாஜி நடித்த நான் வாழவைப்பேன் என்ற படத்தில்
கொள்ளையடித்து வாழும் ஒரு உதிரியான பாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்திருப்பார்.
அப்பாத்திரத்தின் பெயர் மைக்கேல் என்பதாகும். ரஜினிகாந்த் நடித்த, புகழ் பெற்ற,
பாட்சா படத்தில் கொடூர வில்லனின் பெயர் மார்க் ஆண்டனி என்பதாகும். அவர் நடித்த
மனிதன் படத்தில் வில்லனின் பெயர் ஜோ ஜோ. இப்பெயர்கள் ஏன் ராமசாமி அல்லது கந்தசாமி
என இருக்ககூடாது? 
ரஜினிகாந்த் நடித்த, புகழ் பெற்ற, பில்லா
( 70களின் இறுதியில் வெளிவந்தது) படத்தில், கொள்ளை, கொலை, கடத்தலுக்கு பெயர் பெற்ற
கேங்ஸ்டரின் பெயர் டேவிட் பில்லா ஆகும்.
80களின் ஆரம்பத்தில் வெளிவந்து, வெற்றிகரமாக
ஓடிய, ரஜினி காந்த் நடித்த மூன்று முகம் படத்தில் வில்லனால் கொல்லப்பட்ட நேர்மையான
போலிஸ் அதிகாரிக்கு இரு மகன்கள். ஒருவன் சந்தர்ப்ப சூழ்நிலையால் ஒருவன் ஒரு இந்து
தொழிதிபரால் வளர்க்கப்படுவான். பெயர் அருண். மற்றொருவன் ஒரு ஏழை கிறிஸ்தவ
விதவையால் வளர்க்கப்படுவான். பெயர் ஜான். அருண் நல்லவனாக, சிறந்த படிப்பாளியாக,
தமிழ்ப்பட கதாநாயகனின் அனைத்து குணங்களுடன் தொழிதிபராக மாறுவான். ஜான் ஒரு
குடிகாரனாக, திருடானாக, பெண் பித்தனாக வளர்ந்து வில்லனுக்கு கையாளாக மாறுவான். ஏன்
கிறிஸ்தவ விதவைப் பெண்ணால் வளர்க்கப்பட்டவன் திருடனான்?
90களின் ஆரம்பத்தில் வெளிவந்த கலை ஞானி
என்றழைக்கப்படும் கமல ஹாசனின், மைக்கேல் மதன் காமராஜன் என்ற படத்தில், அவர் நான்கு
வேடங்களில் நடித்திருப்பார். அதில் மதன் அமெரிக்காவில் படித்து, சிறந்த நிர்வாகி
பாத்திரத்தில் வருவார். காமேஸ்வரன் பாலக்காட்டு பிராமண சமையல்காரர். சுப்ரமணிய
ராஜு தீயணைப்புத் துறை காவலர். அனைவரும் நல்லவர்கள்.  மைக்கேல் என்ற கிறிஸ்தவ பாத்திரம் மட்டும் கள்ள
நோட்டு அடிக்கும் திருடன். 
கமலஹாசன் நடித்த அவ்வை சண்முகி படத்தில்
உதிரியான ஒரு முழு நேர குடிகார பாத்திரத்தில் நாகேஷ் பாத்திரத்தில்
நடித்திருப்பார். அந்தப் பாத்திரத்தின் பெயர் ஜோசப்.
பருத்தி வீரன் படத்தில் ஒரு நகைச் சுவைப்
பாத்திரத்தை (க.கறுப்பு) கதாநாயகனும், அவனது சித்தப்பாவும் படம் முழுதும்
கிண்டலும், கேலியும் செய்து பரிகசித்துக் கொண்டே இருப்பார்கள். அதற்கு அவர்கள்
தெரிந்த்தெடுக்கும் பெயர் டக்ளஸ் என்பதாகும். இதாவது பரவாயில்லை. கமலஹாசன் நடித்த
பம்மல்.கே. சம்மந்தம் படத்தில் ஒரு நாயிற்கு வைக்கப்பட்டிருக்கும் பெயர் ஜேம்ஸ்
மணி என்பதாகும்! இதை என்னவென்று சொல்ல?.
முக்கிய
இயக்குனர்களின் பார்வையில்
      பாரதி ராஜா நிறைய கிறிஸ்தவ பாத்திரங்களை
அவரது படங்களில் படைத்துள்ளார். பதினாறு வயதினிலே படத்தின் மூலம்,
ஸ்டுடியோக்களில் இயங்கிக் கொண்டிருந்த கேமராக்களை கிராமங்களுக்கும், வயல் வெளிகளுக்கும்
கொண்டு சென்றவர், என்ற பெருமை அவருக்கு உண்டு. 
அவரது அலைகள் ஒயவ்தில்லை படத்தில்
கிறிஸ்துவ பெண்ணுக்கும், பிராமண ஆணுக்கும் உள்ள காதலை காட்டியிருந்தார். அலைகள்
ஒயவ்தில்லை படத்தில், விடலை பருவ ஆண், பெண் ஈர்ப்பை, தெய்வீக காதலாக்கி
காட்டியவர், என்ற பெருமையையும் அவருக்குச் சேர்க்கலாம். இது போன்று வந்த பல
விடலைப் பருவ காதல் படங்களுக்கு அவரது படம் ஒரு முன்னோடி. இப்படத்தில்
கதாநாயகியின் அண்ணனாக (தியாக ராஜன்) வரும் ஒரு கிறிஸ்துவ ஆண் பாத்திரம் மிகவும்
கொடுமைக்காரனாக சித்தரிக்கப்பட்டிருக்கும். அவன்தான் படத்தில் வில்லன் ஆவான்.  அந்த ஆண், அவன் மனைவி கண்ணெதிரிலேயே மற்றோர்
பெண்ணுடன் சல்லாபிக்கும் காட்சி படத்தில் உள்ளது. 
இவரது கடலோரக்கவிதைகள் படத்தில் வரும்
ஆசிரியை ஒரு கிறிஸ்தவ பெண். அவள் ஒரு முரடனை திருத்தி, அவனை காதலிப்பாள். அவர்கள்
காதலை பிரிக்கும் சூழ்ச்சிமிக்க தந்தையாக (ஜனகராஜ்) கிறிஸ்தவ ஆண் பாத்திரம்
அமைந்திருக்கும்.
      இவரது கடல்மீன்கள் படத்தில் ஒரு
கிறிஸ்துவ அண்ணன் (மனோஜ்),  தங்கை மற்றும்
முரளியின் பாத்திரம் ஆகியவை படத்தின் முக்கிய பாத்திரங்களாகும். இதில் அந்த தங்கை
கிராமத்திற்கு வரும் ஒரு நாகரீக மனிதனிடம் கற்பிழந்து விடுவாள். அதை மறைத்து, தனது
உயிர் நண்பனான முரளிக்கு திருமணம் செய்து வைப்பான் அண்ணன். அவள் கற்பிழந்தது தெரிந்தும்
அவளை ஏற்றுக் கொள்ளும் முரளி, அந்த அண்ணனை திருத்துவான். இது நட்பிற்கு துரோகம்
செய்வது கிறிஸ்துவ அண்ணன் பாத்திரம். கற்பிழந்து நிற்பது கிறிஸ்துவ பெண்
பாத்திரம். 
பாலவின் இயக்கத்தில் வெளிவந்த நான் கடவுள்
என்ற படத்தில் எவ்வாறு கிறிஸ்தவர்களை காண்பிக்கின்றார்கள். கண் தெரியாத அனாதைப்
பெண்ணான நாயகி போக்கிடம் தெரியாமல் அலைகிறாள். யாரையும் நம்ப முடியவில்லை.
ஏமாற்றம், தோல்வி, நெருக்கடிகள், துயரங்கள், துரத்த,  கதையின் நாயகனான அகோரிடம் உயிரை மாய்க்கச்
சொல்லி, இவ்வுலக வாழ்விலிருந்து விடுதலை அடைகிறாள். அவளின் வாழ்க்கைப் பயணத்தில்
சந்திக்கும் இடர்பாடுகளை காண்பிக்கும் போது, ஒரு இரு நிமிடக் காட்சியில் அவள் ஒரு
தேவாலயத்தின் முன் நிற்கிறாள். ஒரு கன்னியாஸ்திரி விவிலியத்திலிருந்து இவ்வாறு
வாசிக்கின்றாள்: “வாதை உன் கூடாரத்தை அணுகாது”, அடுத்த நிமிடத்தில் (அடுத்த
காட்சியில்) அவள் தலையில் பயங்கரமான அடி விழும். சில ரவுடிகள் அவளை அடித்து
துன்புறுத்துவார்கள். வாதை உன்னை நெருங்காது என்று கூறியவுடன், வாதை அவளை
நெருங்குகிறது. இதன் மூலம் உணர்த்தப்படுவது யாது? அது பொய்யான ஒரு வாசகம் என்பதே.
தமிழின் முக்கிய இயக்குனராக அறியப்படும் பாலு மகேந்திரா பள்ளி மாணவர், இவ்வாறு
கிறிஸ்துவத்தைப்பற்றிக் காட்சிப்படுத்துகிறார். இதற்கு வசனம் எழுதியவர் இலக்கிய
உலகில் பெயர் பெற்ற ஜெய மோகன் ஆவார்.
வசந்த பாலனின் படமான அங்காடித் தெருவில்,
கதாநாயகியின் நெருங்கிய தோழியாக கதாபாத்திரம் ஒரு கிறிஸ்துவ பெண். அப்பாத்திரம்
கறுப்பாக, சிறிதும் மேக்கப் இன்றி காட்டப்பட்டுள்ளது. கதாநாயகியை காட்டியதில் ஒரு
சிறு பங்குகூட அவளை பார்க்கும்படி காட்டவில்லை. கிறிஸ்தவர்கள் கறுப்பாகதானே
இருக்கிறார்கள் எனக் கூற இடமுள்ளது. அப்படியெனில் அவர் காட்டும் நாயகிகள்
எல்லோரும் இயற்கை அழகு மிக்கவர்களா? எனக் கேட்க இடமுள்ளது. வெயில் படத்தில்  நகரத்தைச் சார்ந்த பெண்கள் குறித்த ஒரு
அசிங்கமான சித்தரிப்பைப் பற்றி, காலச்சுவடு இதழில் வந்த, அப்பட விமரிசனத்தில்,
குறிப்பிடப்பட்டுள்ளது. சற்று, உற்று நோக்கினால் இயக்குனரின் ஒரு தலைச் சாய்வு
புலனாகும். கிறிஸ்துவர்கள் பற்றிய இயக்குனரின் பார்வையை, அவர், அந்தப் பாத்திரத்தை
காட்சிப்படுத்திய விதத்தில் தெரிந்து கொள்ளலாம். இவர் முற்போக்கு இயக்குனர் என
அறியப்படுபவர்.
காதலுக்கு மரியாதை, பாசில் இயக்கத்தில்
வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய படம். கிறிஸ்துவ பெண்ணுக்கும், இந்து ஆணுக்கும் உள்ள
காதல்தான் கதை. இக்கதை ஒரு தமிழகத்தின் எப்பகுதி மக்களிடையே நடை பெறுகிறது என்பதை
நாம் தெளிவாக புரிந்து கொள்ள முடியாது. அவர்களின் பின்புலம் பற்றி தெளிவாக ஏதும்
அறிய முடியாது. ஏனெனில் இயக்குனர் பாசில் கேரளாவைச் சார்ந்தவர். அவரது படங்களில்
பெரும்பாலான காட்சிகள் கேரளாவில் படமாக்கப்பட்டிருக்கும், இப்படத்தில் கிறிஸ்துவ
பெண்ணின்  அண்ணன்களும், அம்மாவும்,  இந்துப் பையனின் பெற்றோர்களுமே வில்லன்களாவர்.
இதில் அந்த கிறிஸ்துவ அண்ணன்கள் மிகக் கொடூரமாக சித்தரிக்கப்பட்டிருப்பர். அவர்களில்
பெரிய அண்ணன் கூறும் அசிங்க சொற்றொடர் படத்தில் மிக முக்கிய திருப்புமுனைக்குக்
காரணமாகும். இந்து பெற்றோர் அந்தளவிற்கு கொடியவர்களாக
சித்தரிக்கப்பட்டிருக்கமாட்டார்கள்.
      இயக்குனர் ஹரியின் படம் கோவில்
ஆகும். இதில் கிறிஸ்துவ பெண்ணிற்கும் (சோனியா), இந்து ஆணிற்கும் (சிம்பு) உள்ள
காதல் சொல்லப்பட்டிடுக்கிறது. இரண்டு ஊர்க்காரர்களுக்கும் பகை. அது அவர்கள்
காதலுக்குத் தடையாக உள்ளது. இதில் கிறிஸ்துவ பெண்ணின் அப்பாவின் பாத்திரமும்
(நாசர்), இந்து ஆணின் அப்பாவின் பாத்திரமும் ( ராஜ்கிரண் ) காதலுக்கு எதிரிகள். இவ்விரண்டில்
ராக்கிரண் பாத்திரம் பெருந்தன்மையுள்ளதாக, அன்பானதாக, நல்லவராக
படைக்கப்பட்டிருக்கும். ஆனால் கிறிஸ்தவ (நாசரின்) பாத்திரம் அதற்கு நேரதிராக
பிடிவாதமுள்ளதாக, கோபக்காரராக,  வெறி
பிடித்தவராக காட்டப்பட்டிருக்கும். 
      இயக்குனர் எஸ்.ஜே. சூர்யா இயக்கி, விஜய்
நடித்த குஷி படத்தில் கதாநாயகி (ஜோதிகா) ஒரு கிறிஸ்தவ பெண். அவர் பேரில்
மட்டும்தான் கிறிஸ்தவர். அதற்கான சித்தரிப்பு துளியும் கிடையாது. அவள் தமிழ்
சினிமா கதாநாயகிக்கு உள்ள பொதுவான இலக்கணங்களுக்கு உட்பட்டு
சித்தரிக்கப்பட்டிருப்பாள். இத்தனைக்கும் இவர் ஒரு கிறிஸ்தவர்.
பாதிரியார்கள்
மற்றும் கன்னியாஸ்திரிகள்
      சிவாஜி நடித்த வெள்ளை ரோஜா என்ற படத்தில்
வரும் பாதிரியார் சிவாஜி ஒரளவுக்கு சரியான சித்தரிப்பு. அதிலும் அவர் விரைவிலேயே
கொல்லப்படுவார். 
திசை மாறிய பறவைகள் (70களில் வெளி வந்தது) என்ற
படத்தின் நாயகி தனது காதல் தோல்வியால், கிறிஸ்தவ கன்னியாஸ்திரியாக மாறுவாள். அப்போது
ஒலிக்கும் பாடல் வரிகள்: 
வாழ்வு இல்லை என்பதற்கு வெள்ளை ஆடை அணிவாள்
அதை இந்துப் பெண்ணும் அறிவாள்.
இவ்வரிகள் அவள் கன்னையாஸ்திரி என்ற போதிலும்
விதவை என்பதையே உணர்த்துகிறது. வாழ்வில் பெரும் துயரம் அல்லது தோல்வி வரும் போது
பெண், கன்னியாஸ்திரியாகவோ, ஆண், பாதிரியாராகவோ மாறுவதாக காட்டப்படுவது தமிழ்
திரைப் படங்களில் சாதரணமாக ஒரு விஷயமாகும். ரஜினி, கமல் நடித்த ஆடு, புலி, ஆட்டம்,
அரவிந்த் சாமி நடித்த மின்சாரக் கனவு இவற்றிற்கு மிகச் சிறந்த உதாரணங்களாகும். 
மின்சாரக் கனவு படத்தில் கதாநாயகி (காஜோல்)
துறவற வாழ்க்கைய தெரிவு செய்வார். அவரது துறவற ஆர்வத்தை மாற்றி, அவரை இல்லறத்தில்
ஈடுபடுத்த எடுக்கும் முயற்சிகளே, இப்படத்தில் முக்கிய காட்சிகளாகும். அவற்றில்
சேவை செய்வோர்களை இழிவுபடுத்துவதாக சில காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும்.
கன்னியாஸ்திரியாகவோ, பாதிரியாராகவோ போவது என்பது அவ்வளவு கொடியது இல்லை;
இழிவானதும் இல்லை. அது ஒரு வாழ்வு முறை. எல்லா மதங்களிலும் துறவறம் இருக்கத்தான்
செய்கிறது. அன்னை தெரசா போன்றோர் துறவற வாழ்விற்கு  மிகச் சிறந்த முன்மாதிரியை விட்டுச்
சென்றிருக்கிறார்கள். 
ஏன்
இந்த சித்தரிப்புகள்?
பொதுவாக மக்கள் மத்தியில் கிறிஸ்தவர்களைப் பற்றி
நிலவும் ஒரு சில கருத்துகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
·        
கிறிஸ்தவர்கள்
தமிழர்கள் இல்லை என பொதுவான ஒரு கருத்து மக்கள் மத்தியில் நிலவுகிறது.
·        
கிறிஸ்தவர்கள்
ஆங்கிலேயரிகளின் அடிவருடிகள்; அவர்களின் நேரடி வாரிசாகத் தங்களை நினைத்து
கொள்பவர்கள்; 
·        
கிறிஸ்துவம்
கொடுத்த வாய்ப்புகளால் முன்னேறியவர்கள்
·        
மது
அருந்துதல், புகை பிடித்தல் இன்ன பிற மேலை நாட்டு பெண்களின் பழக்க வழக்கங்களை கொண்டவர்கள்
கிறிஸ்துவ பெண்கள். 
·        
கிறிஸ்தவ
ஆண்களும் அப்படியே.
·        
வெளி
நாட்டிலிருந்து பணம் பெற்று, அவர்களுக்கு விசுவாசமாக இருப்பவர்கள் கிறிஸ்தவர்கள்.
·        
சாதியால்
தாழ்ந்தவர்கள் (வன்னியர், வன்னியர் என பேசும் பா.ம.கா. வினர் கூட கிறிஸ்தவ
வன்னியர்களை ஏற்றுக் கொள்வதில்லை. 80களின் ஆரம்பம் வரை இவர்கள் பொதுப் பிரிவு
எனப்படும்      பிரிவில்தான் இருந்தனர்.
தற்போது இவர்கள் பிற்படுத்தப்பட்டவர்கள்; இந்து வன்னியரகள் மிகவும்
பிற்படுத்தப்பட்டவர்கள், தமிழகத்தில் ஏறக்குறைய 16% மக்கள் கிறிஸ்துவர்கள்.
அனைத்து திருச்சபைகளையும் சேர்த்து மிக பெரிய சாதியாக இருப்பது தலித்
கிறிஸ்தவர்கள்தாம். அதனையடுத்துள்ள  பெரிய
சாதி கத்தோலிக்க திருச்சபையைச் சார்ந்த வன்னியர்கள் ஆவர். அதனையடுத்துள்ள பெரிய
சாதி தென்னிந்திய திருச்சபையைச் சார்ந்த நாடார்கள் ஆவர்).
·        
கறுப்பர்கள்.
·        
குடிகாரரகள்
இக்கருத்துகள் மிகவும் அபத்தமானவை, மேலும்
உண்மையானவையும் அல்ல, என்பதை நன்கு யோசித்துப் பார்த்தால் புரியும். இம்மாதிரியான
கருத்துகளையுடைய இயக்குனர்கள், அக்கருத்துகளை பிரதிபலிக்கும் வகையிலேயே படங்களையே
எடுப்பர். மேலும், சினிமா தொழிலில் கிறிஸ்துவர்கள் லாபகரமான காரணி அல்ல. பெண்கள்,
இளைஞர்கள் போல இவர்கள் பெரிய லாபகரமான சக்தியில்லை. தமிழ் திரையுலகில்
கிறிஸ்தவர்கள் குறிப்பிடும்படியான சக்தியுமில்லை. சக்தியுள்ளவர்களுக்கு இது
குறித்த அக்கறை இல்லை.
நமது இயக்குனர்கள் மிகுந்த மனத்தடைகளுக்கும்,
புறத்தடைகளுக்கும் ஆட்பட்டு, கிறிஸ்தவர்களைப் பற்றி,  இக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ளபடியான
சித்தரிப்புகளை உருவாக்குகின்றனர். அவர்களின் பார்வைகள் மிகவும் குறுகியதாகவும்,
ஒருதலைப் பட்சமாகவுமே உள்ளன. மேலும், வியாபாரமே பிரதானமாக உள்ள தமிழ் சினிமாவில்
இவற்றைப் பற்றி யோசிக்க யாரும் தயாராக இல்லை.
இறுதியாக
சில வரிகள்
      கிறிஸ்துவர்களைப் பற்றி ஒரு நேர்மறையான
சித்தரிப்பு, நமது திரைப்படங்களில் இல்லை என முடிவாகக் கருதலாம். தமிழ் திரையுலக
படைப்பாளிகளிடம் கிறிஸ்துவ சமூகம் பற்றியும், கிறிஸ்தவர்கள் பற்றியும் உள்ள பார்வை
பிற்போக்கனாது அல்லது மிகவும் பிற்போக்கானது ஆகும்.  இயல்பான சித்தரிக்கப்பட்ட ஒரு கிறிஸ்தவ வாழ்வு
தமிழ் திரையில் இன்னும் சாத்தியப்படவில்லை. எப்போது சாத்தியமாகும்? ஒரு சில
கிறிஸ்துவ இயக்குனர்கள் இருந்தபோதும் கூட இது சாத்தியமாகவில்லை.  (இயக்குனர்கள் எஸ்.ஜே. சூர்யா, பிரபு சாலமன்
போன்றோர் கிறிஸ்துவர்கள். பிரபல நடிகர்கள் விஜய், விக்ரம் கிறிஸ்துவர்களாவர். நயன்
தாரா உள்ளிட்ட நிறைய கேரள நடிகைகள் கிறிஸ்துவர்களாவர். இசையப்பாளர்களில் ஹாரிஸ்
ஜெயராஜ், இமான், விஜய் ஆண்டனி போன்றோர் கிறிஸ்துவர்களாவர்.) 
இக்கட்டுரை முழுமையானது இல்லை.  ஒரு சில விதி விலக்குகள் இருக்கலாம். கிடைத்த
தரவுகளிலிருந்துதான் இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. நமக்கு முறையாக தொகுக்கப்பட்ட சினிமா
ஆய்வுத் தரவுகள் ( research literature ) இல்லை. ஆகவேதான் இச்சிக்கல். இக்கட்டுரையில்
குறிப்பிடப்பட்டுள்ள படங்கள் வெளியான ஆண்டுகள் பற்றிய விபரங்களைச் சேர்க்க
இயாலமைக்கு வருந்துகிறோம்.
நமது தமிழ் சினிமாவில் பெண்கள், தலித்துகள்,
அரவாணிகள், உடல் ஊனமுற்றோர், இஸ்லாமியர்கள் எவ்வாறு சித்தரிக்கப்படுகின்றனர்? பெண்கள்
கவர்ச்சி பொருளாக காட்டப்படுகின்றனர். இறைவன் பெண்களுக்கு தொப்புளை படைத்ததற்கு
உண்மையிலேயே வருந்த வேண்டும், அந்தளவுக்கு அதைக் கொச்சையாக தமிழ் படங்களில் காட்சிபடுத்தியுள்ளனர்.
தொப்புளில் பம்பரம் விடுதல், ஆம்லெட் போடுதல் போன்றவை ஒரு சில உதாரணங்களாகும்.
அரவாணிகளை நம் சினிமா அளவுக்கு யாரும் கேவலப்படுத்த முடியாது. பருத்தி வீரன் படம்
ஒரு சிறந்த உதாரணமாகும். இப்பட இயக்குனர் தமிழின் முக்கிய இயக்குனராவார். 
உடல் ஊனமுற்றோரை நமது சினிமா நகைச் சுவைக்குப்
பயன்படுத்திக் கொள்கிறது. சின்ன கலைவாணர் என அழைக்கபடும் விவேக் அளவிற்கு உடல்
ஊனமுற்றோரை யாரும் புண்படுத்தியிருக்க முடியாது. போதாதற்கு,  உடலை வைத்தும் இவர் நகைச்சுவை செய்வார்.
கறுப்பாக இருந்தால் “தார் டின்” என்பார். ஒல்லியாக இருந்தால் “குச்சி” என்பார்.
குண்டாக இருந்தால் “யானை” என்பார். இப்படி அடிக்கிக் கொண்டே போகலாம். இதன் உச்சம்
சூர்யாவுடன் இவர் நடித்த ஆணழகன் படத்தைக் கூறலாம். இதெல்லாம் நகைச்சுவை!. அதையும்
மக்கள் பார்த்து சிரிக்கிறார்கள்!. நகைச்சுவை நடிகர் கவுண்ட மணியும் இந்த
ரகம்தான்.
நம் படங்களில் தலித்துகள் பற்றி சொல்லவே
வேண்டாம். அந்தளவுக்கு கொடுமை. இக்கட்டுரையாளிரின் “தமிழ் சினிமாவில் காதலும்,
சாதியும்” என்ற கட்டுரை, தலித்தகள் சித்தரிப்பு பற்றி ஒரு சிறிய அளவிலேனும்
பேசுகிறது.  
இஸ்லாமியர்கள் பற்றி மிகவும் ஒரு தலை பட்சமான
பார்வையே தமிழ் சினிமாவில் காணக் கிடைக்கிறது. முஸ்லீம் என்றால் கறிக்கடை பாய்
அல்லது தீவிரவாதி. திரையில் காண்பிக்கப்படும் தீவிரவாதிகளின் தோற்றம் மிகக்
கொடூரமானது. கவுண்டமணியும், செந்திலும் தெம்மாங்கு பாட்டுக்காரன் என்ற படத்தில்
ஒரு கறிக்கடை பாய்க்கு (எல்.ஐ.சி நரசிம்மன்) சங்கீதம் கற்றுத் தருவதாக நகைச்சுவை
செய்து, பரிகசிப்பார்கள்.
மேற்குறிப்பிட்ட ஒவ்வொன்றைப் பற்றியும் ( பெண்கள்,
தலித்துகள், அரவாணிகள், உடல் ஊனமுற்றோர் மற்றும் இஸ்லாமியர்கள்) ஆய்வு செய்து
விரிவாக எழுத வேண்டும். அது நமது ரசனையை மேம்படுத்தும், மேலும் சமூகத்திலும்,
சினிமாவிலும் அவர்களைப் பற்றிய பார்வை ஒரளவேனும் மாற வாய்ப்பு உருவாகும். 
 
Comments